Sun. Nov 24th, 2024

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அவமானகரமான தோல்வியை அதிமுக சந்தித்ததற்கான காரணங்களை ஆராயாமல், தங்கள் முதுகின் பின்னால் மறைந்து இருக்கும் அழுக்குகளை கழுவிக் கொள்ளாமல், வழக்கம் போல ஆளும்கட்சியான திமுக மீது இரட்டையர்கள் பழியை தூக்கிப் போட்டுவிட்டு தப்பிக்க பார்க்கிறார்கள் என்று பொங்குகிறார்கள் அதிமுகவில் உள்ள எம்ஜிஆர் காலத்து  தலைவர்கள்.

அவர்களில் நல்லரசுககு அறிமுகமான ஒன்றிரண்டு தலைவர்களை தொடர்பு கொண்டோம். விரக்தியான மனநிலையில் இருந்த போதும் மனம் திறந்து பேசினார்கள்..

தற்போதைய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கும், திமுகவை தன் இறுதிமூச்சு வரை எதிர்த்த மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரை நேரில் பார்த்தவர்கள் கிடையாது. அவர், எதற்காக அதிமுகவை துவக்கினார் என்ற அடிச்சுவடியே தெரியாது. தன் உயிர் பிரியும் காலம் வரை அவர் திமுக எதிர்ப்பு நிலை என்பதை விட மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு எதிரான எதிர்ப்பு நிலையில்தான் உறுதியாக இருந்தார்.

அவருக்குப் பின்னர் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், தன் வாழ்நாளின் இறுதிவரை எம்ஜிஆர் எந்த மனநிலையில் இருந்தாரோ அதே மனநிலையில்தான் உறுதியாக இருந்தார். தனது அரசியல் வாழ்க்கையையே அஸ்தமனமாக்கிவிடும் அளவுக்கு வழக்குகள் இருந்தபோதும் கூட, திமுகவிடமோ, மு.கருணாநிதியிடமோ அடிபணிந்தோ, சமரசமாகியோ தன்னை காப்பாற்றிக் கொள்ள அவர் ஒருபோதும் முயன்றதில்லை. ஏனெனில், அவருக்கு எம்ஜிஆர் மூட்டியிருந்த தீ, உள்ளத்தில் அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது. ஆனால், இன்றைக்கு உள்ள இரட்டை தலைமைக்கு, அந்த மாதிரியான கொள்கைப் பிடிப்பு, மனவுறுதி, தனிமனிதரைவிட அதிமுகதான் பிரதானம் என்ற சிந்தனையெல்லாம் கிடையாது.

தேனி மாவட்டத்திற்கு உள்ளாகவே பிரபலமாகாத  ஓ.பன்னீர்செல்வத்தை, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் அடையாளம் காட்டியவர் செல்வி ஜெயலலிதா. கடந்த 20 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், ஓ.பி.எஸ். ஸுக்கு கிடைத்த அங்கீகாரம் போல, ஒட்டுமொத்த அதிமுக வரலாற்றில் வேறு எந்தவொரு தலைவர்களுக்கும் கிடைத்திராத  பாக்கியம். அப்படிபட்டவர், ஜெயலலிதா மறைந்தவுடன் பாஜக காலில் போய் விழுந்தார். அவர் வழியிலேயே முதல்வரானவுடன் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவின் அடிமையாகிப் போனார்.

அதனால், பாஜக எதிர்ப்பு நிலையில் அதிமுகவை கட்டமைத்திருந்த செல்வி ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு எதிராக இரட்டையர்கள் இருவரும் செயல்பட்டதால், அதிமுக அடிமட்ட தொண்டர்களிடம் மட்டுமல்ல, பொதுமக்களிடமும் இரட்டையர்கள் மீதான வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல ஆகிய இரண்டு தேர்தல்கள் முடிவுகள் வெளியான போது, அதிமுகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு உண்மையான காரணம், பாஜகவை கூட்டணிக்குள் சேர்த்துக் கொண்டதுதான் என்று தெரிந்திருந்த போதும், அதுதொடர்பாக வாயே திறக்காத ஓ.பி.எஸ்., உள்ளாட்சித் தேர்தலின் போது, இபிஎஸ் செல்வாக்கை அடித்து நொறுக்க வேண்டும் என்பதற்காக, வியூகம் சரியாக அமைக்கவில்லை என்று பொங்கினார். அவரின் நோக்கம், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக படுதோல்வியை சந்திக்க வேண்டும். ஆணவப்போக்குடன் செயல்பட்டு கொண்டிருக்கும் இபிஎஸ்ஸின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்பதுதான்.

வட மாவட்டத்தில் கடந்த பத்தாண்டுகளாக அமைச்சர்களாக இருந்த சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத, கே.சி.வீரமணி ஆகிய மூன்று பேரும் வன்னியர்களாக இருந்தபோதும், வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளிலேயே தோல்வியை தழுவினார்கள். இதற்கு உண்மையான காரணம் என்ன? பாஜகவை கூட்டணியில் சேர்த்துக் கொண்டதால்தான் சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்டோரும் அதிமுகவை ஒட்டுமொத்தமாக புறககணித்துவிட்டார்கள். அதுபோல, வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகிளில் சிறுபான்மையினராக உள்ள பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக ஒன்று திரண்டு திமுக கூட்டணியை ஆதரித்தார்கள்.

இப்படிபட்ட நேரத்தில் கூட, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் உள்ளிட்ட அதிமுக முன்னணி தலைவர்கள், பாஜகவை குறை சொல்லவோ, கடுமையாக எதிர்க்கவோ துணிவு இல்லாமல் இருப்பதை கண்டுதான் அடிமட்ட தொண்டர்கள் மனம் வெதும்பி உள்ளனர்.

இதற்கும் மேலாக, அமைச்சர்களாக இருந்தவர்கள், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களை கண்டு கொள்ளாததும் முக்கிய காரணமாக அமைந்தது..

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சி.வி.சண்முகம், தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம், அவரின் அண்ணார் ராதாகிருஷ்ணனின் சாதி வெறியும், அடாவடி செயல்களும்தான் எனபதை புரிந்திருந்தும் கூட, அதனை மறைப்பதற்காக அதிமுக தலைமை குறித்து கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டார்.

ஆனால், செல்லூர் ராஜுவின் அரசியல் பாணியே வேறாக இருக்கிறது. ஒருபக்கம் அதிமுக தலைமையை விமர்ச்சித்துக் கொண்டே, தன் மீது  வழக்குகள் பாய்ந்துவிடக் கூடாது என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினையும், திமுக அரசையும் அவ்வப்போது பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

இதுபோன்ற செயல்கள் எல்லாம், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த போது நடந்திருக்குமா?  அதிமுகவில் இன்றைக்கு மாநில, மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கும் அத்தனை நிர்வாகிகளுமே பச்சோந்திகள்தான். இவர்கள் தன்மானத்தை இழந்து யார் காலிலும் விழுவார்கள் என்பதுதான் மிகப் பெரிய அவமானகரமானது என்று கூறிவிட்டு அமைதியானார்.

சில விநாடிகள் இளைப்பாறலுக்குப் பிறகு அவரே தொடர்ந்து பேசினார்.

அதிமுக எதிர்க்கட்சியான பிறகு இபிஎஸ்.ஸும், ஓபிஎஸ்.ஸும் தங்களுக்கு எதிரான வழக்குகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள திமுக எதிர்ப்பில் ஆர்வம் காட்டவில்லை என்பதையும், திமுகவின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் இருவரும் கொஞ்சி குலாவிக் கொண்டிருப்பதும் அடிமட்டத்தில் உள்ள ஒவ்வொரு அதிமுக தொண்டர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின் போது தேவையில்லாமல் எம்,.ஜி.ஆரை துரோகி என்று அமைச்சர் துரைமுருகன் விமர்ச்சிதத போது, அதிமுகவுக்கு தலைமையேற்றுள்ள இரண்டு பேரும் பொங்கியிருக்க வேண்டாமா? துரைமுருகனை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட கூட ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் தயங்கிய அந்த பச்சோந்திதனத்தைப் பார்த்து ஒவ்வொரு அதிமுக தொண்டர்களும் கொதித்து போயிருக்கிறார்கள்.

ஆளும்கட்சியான திமுகவை, மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோரின் போர்க்குணத்தோடு ஓபிஎஸ்ஸும் எதிர்க்க மாட்டார். இபிஎஸ்ஸும் எதிர்க்க மாட்டார் என்பதை அடிமட்டத்தில் உள்ள அதிமுக தொண்டர்கள் புரிந்து வைத்திருப்பதால்தான், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்காமல், மனதை கல்லாக்கிக் கொண்டு வேறு கட்சிகளுக்கு வாக்களித்து இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. கொங்கு மண்டலத்தில் கோலோச்சி வரும் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்ளிட்டோரின் பருப்பு, வட மாவட்டங்களில் எடுபடவில்லை. இவர்களின் செல்வாக்கும், அதிகாரமும் அவரவர் மாவட்டங்களில்தான் என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்திவிட்டன. என்னதான் பணத்தை வைத்து கொண்டு முக்கினாலும், அவரவர் மாவட்டத்தை கடந்து வெளி மாவட்டங்களில் ஒருத்தர் மதிக்கமாட்டார்கள் என்பதை கொங்கு மண்டலம் பெற்றெடுத்த (அ)சிங்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரின் தலைமையில் அதிமுக தொடர்ந்து இயங்கினால், இனிவரும் தேர்தல்களில் எல்லாம் தோல்வியைதான் சந்திக்க நேரிடம் என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பட்டுவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

மத்தியில் உள்ள பாஜக அரவையும், மாநிலத்தில் ஆளும்கட்சியான திமுகவையும், உண்மையான எதிர்க்கட்சி நிலையில் இருந்து அதிமுக எதிர்க்க வேண்டும் என்றால், இந்த இரட்டை தலைவர்களை தவிர்த்து புதிதாக யாராவது ஒருவர் முன்வர வேண்டும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அப்படியொரு தலைவர் தெரியவில்லை என்பதால்தான், வி.கே. சசிகலா, அதிமுகவின் தலைமையை குறி வைத்து காய் நகர்த்துகிறார். பொதுமக்களிடம் செல்வாக்கு இல்லாத போதும், அதிமுக.விலேயே பெரும்பான்மையானோரின் ஆதரவு இல்லாத போதும் கூட, துணிந்து அரசியல் காய் நகர்த்தல்களை வி.கே.சசிகலா முன்னெடுப்பதற்கு காரணம், இரட்டை தலைமை மீது உள்ள வெறுப்பின் காரணமாக, தன் பக்கம் அதிமுக நிர்வாகிகள் அணி திரள்வார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டிருப்பதுதான்.

இரட்டையர் மீது மட்டுமலல, கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களில் ஒருவர் கூட குறைந்த பட்ச நேர்மையையும், அதிமுக மீது விசுவாசமும் கொண்டர்கள் இல்லை என்பதாலும் பகல் வேடதாரிகளாக இருப்பதாலும்தான், எம்.ஜி.ஆர் காலத்து விசுவாசிகள், பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி, பொதுச் செயலாளருக்கான தேர்தலை வைத்து, பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் யார் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ, அவர்கள் தலைமையில் அதிமுக தொடர்ந்து இயங்கினால்தான், மறைந்த எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோர் கட்டி காத்த அதிமுக எனும் மாபெரும் இயக்கம் நிலை நிற்கும்.

அதை தவிர்த்து, அவரவர் சுய நலத்திற்காக, ஓ.பி.எஸ்ஸையும்,இபிஎஸ்ஸையும், முன்னாள் அமைச்சர்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரிக்க தொடங்கினால், அதிமுகவை அழிப்பதற்கு ஆளும்கட்சியான திமுக ஒன்றும் செய்ய வேண்டாம். அதிமுவை படுகுழியில் தள்ளி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பால் ஊற்றிவிடுவார்கள் என்றார் விரக்தியோடு…….

ஆட்டத்தை கலைத்துவிட்டு முதலில் இருந்து ஆடுங்கப்பா….