Sun. Nov 24th, 2024

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுமன்னார் கோவில் வீரனந்தபுரம் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக இடங்களை அகற்றுவது நடவடிக்கைகளில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அங்க வந்த காங்கிரஸ் பிரமுகரும் விவசாய சங்க பிரமுகருமான இளங்கீரன், தனது எதிர்ப்பை தெரிவித்தார். அப்போது காவல்துறையினருக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள், இளங்கீரனை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தகவல் பரவியதையடுத்து, காட்டுமன்னார்கோவிலில் காங்கிரஸார் திரண்டதால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

காவல்துறை தாக்குதலில் காயமடைந்த இளங்கீரன் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் இது தொடர்பாக, விலங்கின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இளங்கீரன் மீதான காவல்துறை தாக்குதலுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் இதோ…

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக விவசாயிகளுக்காக போராடி வருபவர். ஒரு பொது நோக்கிற்காக அவர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்காக பரிந்து பேசும்பொழுது காட்டுமன்னார்கோயில் காவல்துறை அதிகாரிகள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

ஒரு பொது வாழ்க்கையில் இருப்பவர், ஒரு விவசாய சங்கத் தலைவர், ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர், பொதுநோக்கிற்காக சென்றவரை காவல்துறை அதிகாரிகள் கைநீட்டி அடிப்பது என்பது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த தவறான செயலை உடனடியாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்தப் பகுதி விவசாயிகளும், காங்கிரஸ் கட்சியும் அவருக்கு ஆதரவாக போராடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.