முதலமைச்சரை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி பேச்சாளரும் யூட்யூபருமான சாட்டை துரைமுருகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முதலமைச்சரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் பேச்சாளரும் யுடியூபருமான சாட்டை துரைமுருகன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய துரைமுருகன், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை தகர்த்து தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தி செல்வதற்கு கண்டனம் தெரிவித்து பேசினார். அப்போது, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையை தொடர்பு படுத்தி பேசியது, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்தனர். இதனைத்தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் பற்றியும், முதலமைச்சரைப் பற்றியும் கண்ணியகுறைவாகவும், அவதூறு பேசியதாகவும் துரைமுருகனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, நாங்குநேரி பகுதியில் தங்கியிருந்த சாட்டை துரை முருகனை நாகர்கோவில் போலீசார் கைது செய்தனர்.
சீமானையும் கைது செய்யுங்கள்
துரைமுருகன் கைதையடுத்து, சீமானின் தூண்டுதலின் பேரில்தான் துரைமுருகன் பேசியுள்ளார் என்றும் அதனால், சீமானையும் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.