Fri. Nov 22nd, 2024

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக எம்.பி.யும், அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளருமான கனிமொழி இன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டத் துணை-சுகாதார நிலையங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, தடுப்பூசி முகாமிற்கு வந்திருந்த பெண்கள் உள்ளிட்டோரிடம் குறைகளைக் கேட்டறிந்த கனிமொழி எம்.பி., பொதுமக்களின் மீதான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இதனிடையே, மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி சிறுமிகள் உள்ளிட்ட வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் வெறும் கால்களுடன் போட்டியில் பங்கேற்பதை அறிந்து கவலையுற்றார் கனிமொழி எம்.பி.

கொஞ்சம் கூட யோசிக்காமல், உடனடியாக பத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளை, அதே பகுதியில் உள்ள காலணி விற்பனை கடைக்கு அழைத்துச் சென்ற அவர், சிறுமிகள் விருப்பப்பட்ட காலணிகளை தனது சொந்த பணத்தில் இருந்து வாங்கி அன்பு பரிசாக வழங்கினார். திடீரென்று கனிமொழி எம்.பி. மூலம் கிடைத்த உதவியைக் கண்டு நெகிழ்ந்துப் போன வீராங்கனைகள், தங்கள் வாழ்நாளில் இதுபோன்று அன்பு செலுத்தியவர்களை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்று ஆனந்த கண்ணீருடன் தழுதழுத்த குரலில் தெரிவித்தனர்.

திமுக எம்.பி. கனிமொழியின் உதவியால் மாரத்தான் போட்டியில் மேலும், மேலும் பல சாதனைகளை புரிந்து, அவருக்கு நன்றிக்கடன் செலுத்துவோம் என்று வீரர்களும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

கனிமொழி எம்.பி.யின் மனிதநேயத்தை நேரில் பார்த்த தூத்துக்குடி பகுதி மக்கள், நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை வாரி வழங்கினார்கள்.