மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலையில் கீழ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கிண்டியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, அண்ணலுக்கு மரியாதை செலுத்தினார். இரண்டு நிகழ்வுகளிலும் ஆளுநர் ரவி. தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்று, காந்தியடிக்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர் விமான மூலம் மதுரை புறப்பட்டுச் சென்ற முதல்வர், பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக தேர்தல் நேரத்தில் அளித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாப்பாபட்டியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்படும். ரூ. 48 லட்சத்தில் மயானம் மேம்படுத்தப்படும். நியாய விலைக்கடை, கதிர் அறுக்கும் களம், மேல்நிலைத்தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், பாப்பாபட்டி கிராமத்தை முதல்வரே நேரடியாக தத்தெடுத்து. கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.