Fri. Nov 22nd, 2024

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த முன்னாள் வனத்துறை அதிகாரி வெங்கடாசலம் வீடு மற்றும் தொடர்புடைய அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றபட்ட 13.5 லட்சம் ரொக்கம், 11 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, 15.25 கிலோ சந்தன மரங்கள்,  உள்ளிட்டவற்றை பார்த்து கூட மலைக்காத லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தொடர் விசாரணையின்போது வெங்கடாசலத்தின் அஜால் குஜால் மேட்டர்களை கேள்விப்பட்டுதான் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்கள் என்கிறார்கள், காவல்துறையில் உள்ள உயரதிகாரி ஒருவர்.

அவரை கெஞ்சி கூத்தாடி பெற்ற தகவல்கள் அனைத்தும் பகீர் ரகம்…

வெங்கடாசலம்  டி எஃப் ஓ..

தமிழ்நாடு வனத்துறையில் 1988 ஆம் ஆண்டு வன பாதுகாவலராக பணியில் சேர்ந்து பின்னர், ஐஎஃப்எஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றவர் வெங்கடாசலம். செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த அவர்,  சென்னையில் இன்றைக்கு பிரபலமாக உள்ள  கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவரின் சகோதரியைதான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.  மனைவி குடும்பமும் செல்வந்தர் குடும்பம் என்பதால், சொகுசான வாழ்க்கையை இயற்கையே வெங்கடாசலத்திற்கு அமைத்து கொடுத்திருக்கிறது.

துவக்கமே மாவட்ட வனத்துறை அதிகாரி என்ற அந்தஸ்தில் அமைந்ததால், இயற்கை ஆர்வலர்களான செல்வந்தர்கள் பலர் அவருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகி நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இளமை முடிந்து முதுமை எட்டி பார்த்த நேரத்தில், படிப்படியாக பதவி உயர்வு பெற்று வனத்துறையில் செல்வாக்கு மிக்க அதிகாரியாக வலம் வந்தார் வெங்கடாசலம்.

கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில், வனத்துறையில் வெங்கடாசலம் வைத்ததுதான் சட்டமாக இருந்திருக்கிறது. ஆளும்கட்சி துணையோடு வனத்துறையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை எல்லாம் அசால்ட்டாக பெற்று தருபவராக இருந்திருக்கிறார் வெங்கடாசலம். ஆளும்கட்சியான அதிமுகவின் மேல்மட்டம் வரை நெருங்கிய நட்பு இருந்ததால், வனத்துறையை கடந்து மற்ற துறைகளிலும் வெங்கடாசலத்தின் செல்வாக்கு கொடி கட்டி பறந்திருக்கிறது.

அரசுப் பணியில் இருக்கும் போதே, அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்து, கட்சி  உறுப்பினர் அட்டையையும் பெற்று வைத்திருக்கிறார் வெங்கடாசலம். பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் அஜால் குஜால் பழக்கம் அவரை தத்து எடுத்துக் கொண்டுள்ளது. தனிமையில் இன்பம் காண்பது அவருக்கு பிடித்தமானதாக இல்லை. இதனால்,  தான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம் என்ற நல்ல நோக்கத்தில் தலைமைச் செயலகத்தில்  உயர்ந்த பதவிகளில் இருந்த ஒன்றிரண்டு அதிகாரிகளையும் நட்பு வட்டாரத்தில் இணைத்து, அவர்களையும் அஜால் குஜால் குழு மெம்பராக்கி, விடுமுறை நாட்களில் மட்டுமல்லாமல், பணி நாட்களிலும் சுகபோகவாசியாக வாழ்ந்து வந்திருக்கிறார் வெங்கடாசலம்.

மாவட்ட வன அதிகாரி முதல் அடிஷனல் டைரக்டர் பதவி வரை உயர்வு பெற்ற அவர், பணிபுரிந்த இடங்களில் எல்லாம், ஆணவக்காரராகவே வலம் வந்திருக்கிறார். தன்னை விட உயர்ந்தவர் யாரும் இல்லை., அறிவிலும் மிஞ்சியவர் எவரும் கிடையாது என்று பேசுவதை, அவருடன் நெருங்கிய நட்பு கொண்டவர்களே ஆணவம் பிடித்தவர், மமதை கொண்டவர் என்று விமர்ச்சிக்கிறார்கள்.

தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் அதற்கு எந்த விலை வேண்டுமானாலும் கொடுக்க துணிபவர். அதைவிட எந்தளவுக்கு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்த காரியங்களையும் நிறைவேற்றிக் கொள்ளக் கூடியவர். உதவி கோரி உயரதிகாரிகளை சந்தித்தாலும், அரசியல்வாதிகளை சந்தித்தாலும், பணத்திற்கு மயங்காதவர்களாக இருந்தாலும் கூட அவர்களின் பலவீனத்தை கண்டுபிடித்து, அதற்கு தகுந்த மாதிரி காரியங்களை செய்து அவர்களை குஷிப்படுத்துவதில் சகலகலா வல்லவர்.

இப்படி வனத்துறையில் துவக்கம் முதல் ஓய்வு பெறும் வரை ஆடாத ஆட்டம் போட்டவருக்கு, 2018ல் பணி ஓய்வு பெற்ற பிறகும் உச்சநீதிமன்றத்தின் ஒரு உத்தரவு மூலம அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது. அந்த அதிர்ஷ்டம் தான் இன்றைக்கு அவரை ஆயுள் வரை நீதிமன்றத்திற்கு நடையாய் நடக்கும் துரதிர்ஷ்ட வாழ்க்கைக்கு கொண்டு சென்றுள்ளது என்று கூறிவிட்டு பெருமூச்சு விட்டார் அந்த காவல்துறை அதிகாரி.

சிறிதுநேர இளைப்பாறுதலுக்குப் பிறகு மீண்டும் பேசத் துவங்கினார்.

தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்திற்கு தலைவராக நியமிக்கப்படவருக்கான தகுதியை நான்காண்டுகளுக்கு முன்பு ஒரு வழக்கின்போது நிபந்தனை விதித்து உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. உயிரியல், புவியியல், சுற்றுச்சூழல் ஆகிய பாடத்திட்டங்களை பட்டப்படிப்பின் போது படித்தவர்களை மட்டுமே மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தலைவராக நியமிக்க வேண்டும் என்துதான் அந்த தீர்ப்பின் முக்கிய சாரம்சமாகும்.

அந்த உத்தரவை வைத்துக் கொண்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில், தனது குடும்ப செல்வாக்கை பயன்படுத்தி கவனிக்க வேண்டியவர்களை சரியாக கவனித்தும், குஷிப்படுத்த வேண்டியவர்களை குஷிப்படுத்தியும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியை பிடிததுவிட்டார். பதவியில் அமர்ந்தவுடன் தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கிக் கொண்டு, சட்டத்திற்குப் புறம்பாக அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கொஞ்சம் கூட கூச்சம் இன்றி செய்ய தொடங்கினார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அவரை எதிர்த்து ஒருவராலும் கேள்வி கேட்க முடியவில்லை.அதனால், லஞ்ச பேரத்தை நேரடியாகவே பேசி, பணமழையில் கும்மாளம் போட்டார்.

அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், அவரது துறைகளைச் சேர்ந்த முன்னாள், இன்னாள் எதிரிகளே, வெங்கடாசலத்தின் லஞ்ச லாவண்யம், அதிகார துஷ்பிரயோக அலங்கோலத்தை லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு புகாராக தட்டிவிட்டனர். ஆதாரப்பூர்வமாக கிடைத்த தவல்களின் அடிப்படையில், வெங்கடாசலத்தை பொறி வைத்து பிடித்துவிட்டது லஞ்ச ஒழிப்புத்துறை. அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்போது, வெங்கடாசலத்தின் மறுபக்கம் முழுமையாக வெளிச்சத்திற்கு வரும். மேலும், அவரின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு துணைப் போன அரசு உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கும் கூட சிக்கல் வரலாம். செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும், ஒழுங்க நெறிகளை கடந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த வாழ்க்கைகு சரியான தண்டனை கிடைத்திருக்கிறது என்று கூறிவிட்டு அமைதியானார் அந்த காவல்துறை அதிகாரி.