சோஷியல் மீடியா எனும் சமூக ஊடகங்களின் தாக்கம் இன்றைய அரசியல் களத்தில் சூட்டை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர்களின் பேட்டிகள், உரைகள் உள்ளிட்டவை காட்சி ஊடகங்களில் ஒளிப்பரப்பாக, மக்களிடம் முழுமையாக செல்வதற்கு முன்பாகவே, ஃபேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ் அப் ஆகிய நவீன ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள், ஒரு சில மணிநேரங்களிலேயே பல ஆயிரக்கணக்கானோரைச் சென்றடைந்துவிடுகின்றன. அதனால், அன்றாடம் அரசியல் செய்திகளை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பவர்கள், அவரவர்க்கு விருப்பமான தலைவர்களின் டிவிட்டர், ஃபேஸ்புக் கணக்குகளை, செய்தியாளர்களைப் போல முன்கூட்டியே தெரிந்து கொள்வதிலும், கடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், நாள்தோறும் பார்க்கப்படும் டிவிட்டர், ஃபேஸ்புக் கணக்குகளில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் சமுக ஊடக தளங்களின் பக்கங்களையும், முதல்வர் இ.பி.எஸ்., ஸின் தனிப்பட்ட சமூக ஊடகப் பக்கங்களையும் பல்லாயிரக்கணக்கானோர் உடனுக்குடன் பதிவுகளை பார்த்து வருகின்றனர் என்பது இன்றைய அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு சவாலான ஒன்றாகிவிட்டது.
அந்த வகையில், இன்றைய பரபரப்பு ஸ்டேட்டஸ் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பக்கப் பதிவுதான்..
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், குட்கா விற்பனையைச் சுட்டிக்காட்ட பொட்டலங்களை சட்டசபையிலேயே காண்பித்தோம். கமிஷன் வாங்குகிறவர்கள் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள்; தடை போட்டது உயர்நீதிமன்றம். 2வது நோட்டீசும் இன்று ரத்து! இந்த வேகத்தை குட்கா தடுப்பில் அரசு காட்டியிருக்கலாமே?! குட்கா அரசின் ஆட்டம் முடியும் என பதிவிட்டுள்ளது பரபரப்பாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலாகள் சட்டவிரோதமாக சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தி.மு.க. குற்றம் சாட்டியது. அதனை நிரூபிக்கும் வகையில், கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. உறுப்பினர்கள், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலாகள் பாக்கெட்டுகளை , பேரவை தலைவர் முன்பு காட்டி , அ.தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்த விவகாரத்தை உரிமை மீறல் பிரச்னையாக எடுத்துக் கொண்ட அ.தி.மு.க. அரசு, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட எம்எல்ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் “ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது.
முதலில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. தவறுகளை நிறுத்தி புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2-வது முறையாக மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பபட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரவை உரிமை குழுவின் 2-வது நோட்டீஸிக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸடாலின் தனது டிவிட்டரில் அ.தி.மு.க.அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.