Thu. Nov 21st, 2024

பிப்ரவரி 8 ஆம் தேதி காலை நேரத்தில் பெங்களூரில் இருந்து புறப்பட்டார் வி.கே.சசிகலா. மறுநாள் அதிகாலை சென்னை தியாகராயநகர் வந்தார். சென்னை வருவதற்கு ஏறத்தாழ 22 மணிநேரம் அவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. சராசரியாக பெங்களூரில் இருந்து காரில் சென்னைத் திரும்ப  6 மணிநேரம் தேவைப்படும். இன்றைக்கு விலை உயர்ந்த கார்களில் குறைந்தது 120 கிலோ மீட்டர் வேகத்தில்தான் பலரும் செல்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், 6 மணிநேர பயணத்தில் சசிகலா சென்னை திரும்பியிருக்க முடியும். இல்லையென்றால், ஜெயலலிதாவை முன்னூதாரணமாக அவர் எடுத்துக் கொண்டிருந்திருக்கலாம். இதேபோல, பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட போது,  மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை திரும்பியபோது, பெங்களூரில் இருந்து விமானத்திதில் சென்னை வந்தார். அங்கிருந்து, அவரது இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் இல்லத்திற்கு காரில் வந்தார். அன்றைக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட இதேபோன்ற வரவேற்பு, ஒருசில மணிநேரங்களில் நிறைவுப் பெற்றது.

ஆனால், ஜெயலலிதாவுக்கு மிஞ்சிய வரவேற்பு சசிகலாவுக்கு கொடுக்கப்பட்டது. பெங்களூரில் இருந்து சென்னை திரும்பும் நாளை கூட, சசிகலாதான் முடிவு செய்தார் என்றும் கூறப்படுகிறது. அதாவது, அம்மா மக்கள் முனனேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்,முதன்முறையாக சசிகலா சென்னை திரும்புவது தொடர்பாக கருத்து தெரிவித்தபோது, பிப்ரவரி 7 ஆம் தேதி சசிகலா சென்னை திரும்புவார் என்று கூறியிருந்தார். அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை நாள் என்பதால், பெங்களூர் முதல் சென்னை வரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைவாகவே இருக்கும். அன்றைய தினம் சென்னை திரும்பினால், தனது வருகை பொதுமக்களிடம் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது என்று யோசித்தே, தனது சென்னை திரும்பும் தேதியை, வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமையன்று அமைத்துக் கொண்டிருக்கிறார் சசிகலா. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எடுத்து வைத்த முதல் அடியே, அரசியல் ஆதாயம் கருதிதான் என்பது வெட்டவெளிச்சமானது.   

என்ன செய்தால், ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து, அவற்றின் மூலம் பொதுமக்களின் மனங்களில் தங்கள் இருப்பை ஆழமாக பதிய வைக்க முடியும் என்பதை ஆற அமர அமர்ந்து யோசித்து, சசிகலாவும், தினகரனும் நடத்திய நாடகம்தான் 22 மணிநேர சென்னை பயணம்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே, பிப்ரவரி 8 ஆம் தேதி சசிகலாவுக்கு மட்டுமே உரிய நாளாக மாறிவிட்டது. ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமல்ல, பிற மாநிலங்களில், ஒரு சில வெளிநாடுகளில் சசிகலாவின் சென்னை பயணம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அவரின் வருகையைப் பற்றியும், அவருக்கு ஊடகங்கள் வழங்கிய முக்கியத்துவத்தையும் பற்றியும் சூடான விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன. சராசரி மனிதர் முதல் செல்வாக்குமிக்க மனிதர்கள் வரை, சசிகலாவுக்கு ஊடகங்கள் கொடுத்த விளம்பர வெளிச்சத்தை பார்த்து முகம் சிவந்தனர்.

எந்தவொரு நிகழ்வு நடந்தாலும், அவற்றின் கடந்த காலத்தை போஸ்ட் மார்ட்ம் செய்யும் ஊடகங்கள், சசிகலா எதற்காக பெங்களூர் சென்றார், அங்கிருந்து எதற்காக சென்னை திரும்பினார் என்ற விவரத்தை ஒரு சில நிமிடங்கள் கூட விவரிக்கவில்லை. வழக்கமாக, எப்போதும் செய்திகளில் சொல்லப்படுவதைப் போல குறிப்பிடத்தக்கது என்ற அடிப்படையில் கூட எதற்காக சசிகலா பெங்களூர் சென்றார் என்பதை சொல்லாமல், இருட்டடிப்பு செய்துவிட்டனர் என அனல் கக்க பேசுகிறார்கள். அறவழி பாதையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள். அவர்களின் கோபம்,  கொந்தளிக்கும் வார்த்தைகள் அடங்கிய கடிதங்கள், நல்லரசு தமிழ்ச் செய்திகளின் இ.மெயிலில் வந்து நிரம்பியிருக்கின்றன.

திறந்து மனதோடு சொல்லவேண்டும் என்றால் அனைத்துக் கடிதங்களையும் நாம் வெளியிட வேண்டும். அதுதான், அறத்தின் வழியில் நிற்கிற ஊடகவியலாளரின் கடமை. ஆனால், ஊடக மரபு என்று ஒன்று இருக்கிறது. அதை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக நாகரிகம் கருதி, ஒரே ஒரு கடிதத்தை மட்டும் இங்கே பதிவேற்றுகிறோம். இந்த கடிதம், சமூக ஊடகங்களான  ஃபேஸ் புக், வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு வகையான சமூக ஊடகங்களில் பரபரவென பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த மாதிரியான அறச்சீற்றத்தைதான், ஊடகவியலாளர்களிடம் எதிர்பார்க்கிறார்கள், தூய வாழ்வில் நடைபோடும் மக்கள். இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளில் கொந்தளிக்கும் அறச்சீற்றம்தான், பெரும்பான்மையான மக்களிடம் இருக்கிறது என்பதை காட்டும் விதமாகதான் நமக்கு வந்த இ.மெயில் கடிதங்களின் சாரம்சமும் நிரூபிக்கின்றன.

சசிகலாவுக்கு எதிராக தமிழக மக்களின் மனவோட்டத்தை பற்றி துளியும் கவலைப்படாத காட்சி ஊடகங்கள், சசிகலாவின் சென்னை பேரணியை கொண்டாடியதால் ஏற்பட்டுள்ள கருப்புப்புள்ளி, அவ்வளவு எளிதாக விலகி போய்விடாது. இப்போதும், கிராமப்புறங்களில்,  ஜெயலலிதாவின் மரணத்தோடு தொடர்புபடுத்தி சசிகலாவை கடுமையாக விமர்சனம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் பொதுமக்கள்.  இப்படிபட்ட நேரத்தில்,  ஆர்ப்பாட்டம் இல்லாம்ல் அவர் சென்னை திரும்பியிருக்கலாம். ஆனால், ஆயிரம் கார்கள் புடை சூழ, சென்னை திரும்பியபோது, வழியெங்கும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பெரிதும் அவதிக்குள்ளானர்கள் என்ற குற்றச்சாட்டும் சசிகலாவுக்கு எதிராக வைக்கப்படுகிறது.

“அன்றைய தினம்தான், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு நாளாகவும் அமைந்ததால், பெங்களூர்-கிருஷ்ணகிரி-சென்னை சாலை மட்டுமின்றி, சென்னையை இணைக்கும் வகையில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து கடுமையாக ஏற்பட்டு வாகன நெரிசலில் சிக்கி, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, அன்றாடப் பணிகளை மேற்கொள்வோரும், மாலையில் குறித்தநேரத்தில் வீடு திரும்ப முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூட, இந்த மாதிரியான அலப்பறைகளை ஒருநாளும் செய்தததில்லை” என்று கூறும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், “இனிவரும் காலங்களிலும் சசிகலாவை சீண்டாமல் சும்மா விளையாட விட்டு வேடிக்கைப் பார்த்தாலே அவரது சாயம் வெளுத்துவிடும்” என்று கெத்துக் காட்டுகிறார்கள்.

“தமிழகத்தில், குறிப்பாக அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு உள்ள தென்மாவட்டங்களில் கூட இன்றைக்கு சசிகலா பெயரை ‘சின்னம்மா’ என்று உச்சரிக்கிறவர்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள். உண்மையாக, ஜெயலலிதா மீது பக்திக் கொண்ட அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் சசிகலாவை, சின்னம்மா என்று இப்போது அழைக்க தயாராக இல்லை. அவரின் வரவேற்புக்கு தென் மாவட்டங்களில் இருந்து எத்தனை வாகனங்கள் சென்றன, அவரின் வாகனப் பேரணியில் பங்கேற்றவை எத்தனை என்பதைக் கணக்கெடுத்து பார்த்தாலே, தென்மாவட்ட அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு எந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது புரிந்துவிடும்” என்று தைரியமாக பேசும் அந்த  மூத்த நிர்வாகி, சசிகலாவை பிரம்மாண்டமான சக்தியாக ஊடகங்கள்தான் ஊதிப் பெரிதாக்குவதாக குற்றம்சாட்டுகிறார்.

“பொதுமக்களால், அ.தி.மு.க.தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவருக்கு,  ஊடகங்கள் இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்த்து, சாதாரண மக்கள், மெத்த படிப்பறிவு இல்லாதவர்கள் கூட, அவரின் கடந்த காலங்களை நினைவுக்கூர்ந்து, ஜெயலலிதாவுக்கு நேரிட்ட இத்தனை அவமானங்களுக்கும் சசிகலாதான் காரணம் என்று வசை பாடுகிறார்கள். ஆனால், ஊடகங்களோ, ஜெயலலிதாவை விட வல்லமைப் படைத்தவர் சசிகலா என்று புகழ்ந்து தள்ளுவதால்தான், அச்சு, காட்சி ஊடகங்கள் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்கள் எழுச்சிப் பெற்று வருகின்றன” என்று அ.தி.மு.க.மூத்த நிர்வாகி நக்கலடிக்கிறார்.

“அன்றாட சாப்பாட்டிற்காக கூலி வேலை செய்து பிழைப்பவன் கூட கொள்கையில் உறுதியாக நின்று, சசிகலாவை எதிர்ப்பதில் முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால், அதர்மத்தை, அநீதியை எதிர்த்துப் போராடுவதாக கூறிக்கொள்ளும் அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர்கள், சசிகலாவுக்கு முதல்வராகும் தகுதி கூட இருக்கிறது என்று காட்சி ஊடகங்களில் உட்கார்ந்துக் கொண்டு கொஞ்சம் மனசாட்சியின்றி உரக்கப் பேசுகிறார்கள் என்றால் அவர்களைப் பற்றி என்ன சொல்வது?  

அதர்மத்தையே அடையாளமாக கொண்டுள்ளவர்களின் சகவாசம, இவர்களையும் விட்டு வைக்குமா? அதர்மம் ஒருபோதும் வெற்றிப் பெறாது என்பதை மட்டுமே, நல்லரசு தமிழ் செய்திகள் வாயிலாக, அதர்மத்தை கொண்டாடுவோருக்கு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்” என்று ஆவேசமாக கூறி முடித்தார், அந்த அ.தி.மு.க. நிர்வாகி.