பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றவுள்ளார். அதற்கு முன்பாக பிரதமர் மோடி, அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களை சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்கா சென்று சேர்ந்த முதல் நாள் உள்பட அனைத்து நிகழ்வுகளையும் பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், கமலா ஹாரிஸ்வுடனான சந்திப்பு குறித்தும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கமலா ஹாரிஸ், பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து, தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் எந்தவிதமான கருத்தும் பதிவு செய்யவில்லை. இதனை சுட்டிக்காட்டியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடியை கமலா ஹாரிஸ் சந்தித்த அதே நாளில் பிற நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்தவர், பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்தும் மட்டும் ஹாரிஸ் ஏன் எந்தவிதமான கருத்தும் பதிவிடவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிராதததும், அதுதொடர்பாக டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியிருப்பதும் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு மிகப்பெரிய அவமானத்தை தேடி தந்துவிட்டதாக பாஜக தலைவர்கள் கோபத்துடன் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம், கமலா ஹாரிஸின் நிலைப்பாட்டை ஆதரிப்பவர்களும், பழைய நிகழ்வு ஒன்றை நினைவுக்கூர்ந்து வருகிறார்கள். டெல்லியில் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாதக்கணக்கில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகளும் அமெரிக்காவில் வாழும் புகழ் பெற்ற வழக்கறிஞருமான மீனா ஹாரிஸ், கடந்த பிப்ரவரி மாதம் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அவரைப் போல பல்வேறு பிரபல பெண் பிரமுகர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.
வெளிநாடுகளில் வாழ்பவர்கள், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என கண்டனம் தெரிவித்து, டெல்லியில் பாஜக.வைச் சேர்ந்த சிலர் மீனா ஹாரிஸ் உள்ளிட்ட அமெரிக்க பிரபலங்களின் புகைப்படங்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன் பிறகும் கூட, யாருடைய மிரட்டலுக்கும் தான் பயப்படப் போவதில்லை. விவசாய மக்களுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பேன் என மீனா ஹாரிஸ் அறிவித்திருந்தார்.
மீனா ஹாரிஸின் உரிமைக்குரலை நசுக்கும் வகையில், ஆளும்கட்சியைச் சேர்ந்த பாஜக.வினர் செயல்பட்டது, கமலா ஹாரிஸுக்கு வருத்தத்தை கூட ஏற்படுத்தியிருக்கலாம். அந்த நிகழ்வு நடந்து பல மாதங்கள் கடந்து விட்ட பிறகும் கூட, அதனை மறக்காமல் நினைவில் வைத்திருந்து, இந்திய பிரதமருடனான சந்திப்பை, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிராமல், கமலா ஹாரிஸ் அவமரியாதை செய்திருக்கலாம் என்று வாதம் புரிபவர்களும் உள்ளனர்.
இப்படி, பிரதமர் மோடி துணை அதிபர் கமலா ஹாரிஸ் சந்திப்பு விவகாரம், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கனலை ஊதி ஊதி பெரிதாக்கி கொண்டே இருக்கிறது.