Fri. Nov 22nd, 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை வேட்டை, அதிமுக.வின் இரட்டை தலைமைக்கு வேண்டுமானால் அதிர்ச்சியை கொடுத்திருக்கலாம். ஆனால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மையான நிலவரம். வீரமணிக்கு எதிராக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளை வெடி வைத்து கொண்டாட தான் வேண்டும். ஆனால், கட்சிக் கட்டுப்பாட்டின் காரணமாக உள்ளுக்குள்ளேயே மகிழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் அவருக்கு மிக,மிக நெருக்கமான ஆதரவாளர்கள். அவர்களிடம் பேசினோம்.
கே.சி.வீரமணியை பொறுத்தவரை காசுதான் எல்லாமே. அதுவும், அவர் அமைச்சராக இருந்த 10 ஆண்டு காலத்திலும் பணம் விவகாரம் அனைத்தையும் அவரது மனைவிதான் பார்த்துக் கொண்டார். சொந்த செலவுக்கு பணம் வேண்டும் என்றாலும்கூட, மனைவியிடம்தான் கையேந்துவார் கே.சி.வீரமணி. அம்மா முதல்வராக இருந்த காலத்திலேயே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த போது, ஆசிரியர் பணி நியமனம், பணியிட மாறுதல், பள்ளிக்கல்வித்துறை தொடர்பான கொள்முதல்கள் என அனைத்தும் மொத்தமாக கான்ட்ராக்ட் பேசி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அவர் இருந்த போது, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் ஒருவர் கூட, பணி மாறுதலுக்கு பணம் கொடுக்காமல் காரியத்தை சாதித்துக் கொண்டது இல்லை.
பள்ளிக்கல்வித்துறையில் கொள்ளையடித்த பணத்தை கொண்டு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சொகுசு பங்களா ஒன்று வாங்குவதற்கு கே.சி.வீரமணியின் மனைவி, மாதக்கணக்கில் சுற்றி திரிந்திருக்கிறார். அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து கே.சி.வீரமணி சம்பாதித்த பல நூறு கோடி ரூபாய்களை, சொகுசு பங்களா, நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்டவற்றில்தான் அவரது மனைவி முதலீடு செய்துள்ளார்.

கணவன், மனைவி இருவருமே யாரையுமே நம்ப மாட்டார்கள். ஒவ்வொரு செயல்களிலும் அவர்களே நேரடியாக தலையீட்டு, சிந்தாமல் சிதறாமல் லாபம் அடைய வேண்டும் என்று நேரம் காலம் பார்க்காமல் குறியாகவே இருப்பவர்கள்தான்.

கே.சி.வீரமணி வீட்டில் கிலோ கணக்கில் தங்கம் இருந்திருக்கலாம். வைரம் இருந்திருக்கலாம். வெள்ளி கூட இருந்திருக்கலாம். இப்படிபட்ட விலை மதிப்புடைய அசையும் சொத்துகளை கைப்பற்றியிருப்பது, அமைச்சராக பதவி வகித்த கே.சி.வீரமணிக்கு பெருமை அளிக்க கூடியதுதான். இதைகூட சம்பாதிக்காமல், பத்தாண்டுக்கு அவர் என்னத்துக்கு…….. அமைச்சராக பதவி வகித்து இருக்க வேண்டும். ஆனால், பிச்சைக்காரர் எவ்வளவு ரூபாய் பிச்சையெடுத்து வைத்திருந்தாலும் அதில் இருந்து பத்து ரூபாய் செலவழித்து நல்ல சாப்பாடு சாப்பிட விரும்ப மாட்டார். ஆயிரக்கணக்கில், லட்சங்களில் பணம் வைத்திருக்கும் பிச்சைக்காரர்கள் பற்றியெல்லாம் கேள்விபட்டிருக்கிறோம். அவ்வளவு பணம் இருந்தால் கூட கையேந்தி நாலு பேரிடம் பிச்சை கேட்கதான் ஆளாய் பறப்பார். அப்படிபட்ட குணம் படைத்தவர்தான் கே.சி.வீரமணி.

பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு ஆட்சி அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்தாலும் கூட, மணம் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தையும் கூட விட்டதில்லை கே.சி.வீரமணி. அமைச்சராக அவர் இருந்த போது, வேலூரைச் சேர்ந்த மணல் மாஃபியா கும்பலிடம், கே.சி.வீரமணிக்கு சொந்தமான லாரிகள் மணல் ஏற்றி வியாபாரம் செய்து வந்தன. மணல் குவாரிகளில் வரிசையில் நின்றுதான் லாரிகள் மணல் நிரப்பி சென்று விற்பனை செய்வார்கள். ஒருநாளைக்கு இத்தனை முறை மணல் எடுத்து விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்து லாரி ஓட்டுநர்களை விரட்டுவார் கே.சி.வீரமணி. ஒரு லாரி லோடு ஏற்றி செல்வதில் தடங்கல் ஏற்பட்டால், மணல் மாஃபியா கும்பல் தலைவருக்கு கே.சி.வீரமணியே நேரடியாக போனில் பேசி, தலைவரே, என்னுடைய லாரிக்கு தாமதம் இன்றி மணல் ஏற்றி அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சுவார்.

அமைச்சராக இருக்கிறோமே, இப்படி கேட்பது கேவலமாக இருக்குமே என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல், பணமே குறி என்றிருப்பார் கே.சி.வீரமணி. இவ்வளவு கீழிறங்கி பேசுகிறோமே, கேவலமாக பார்க்கமாட்டார்களா என்பதை பற்றியெல்லாம் கே.சி.வீரமணி துளியும் வெட்கப்பட மாட்டார். ஆனால், மாஃபியா கும்பல் தலைவர். அமைச்சருக்கு பதில் சொல்லும் போது, தலைவரே இதறகெல்லாம் நீங்கள்தான் போன் பண்ண வேண்டுமா? உங்கள் பி.ஏ. யாராவது போனில் சொன்னால் கூட நான் சரி செய்து விடுவேனே என்று தயங்கியவாறே பலமுறை சொல்லியிருக்கிறார்.


அதற்கு அமைச்சர், நம்ம தொழில். நாம்தானே கவனமாக இருக்க வேண்டும். இதை தவிர எனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது. அமைச்சர் வேலையெல்லாம் அதிகாரிகள் பார்த்து கொள்கிறார்கள் என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பதில் கூறுவார். இப்படி மணலில் கொள்ளையடிப்பதிலும் தீவிரமாக இருந்ததால்தான், அவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 551 யூனிட் மணலை கனிம வளத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.


இதற்கு முன்பும் சரி, வரும் காலத்திலும் சரி.. முன்னாள் அமைச்சர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல் என்று செய்தி வெளியாகுமா? எங்கள் மாவட்ட அதிமுக செயலாளர் அந்த பெருமையை பெற்றிருக்கிறார் அல்லவா.. வரலாறு பேசனும் சாமி என்று கிண்டலாக கூறுகிறார்கள் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்.
லாரிகளில் மணல் ஏற்றி அனுப்பும் பணியைகூட, தன்கூடவே சுற்றிக் கொண்டிருக்கும் அல்லக்கைகளிடம் கூட ஒப்படைக்க மாட்டார். அவர் பணம் பார்த்துவிடுவார்களே என்ற அச்சம் அவருக்கு எப்போதுமே உண்டு.

அவரின் மற்றொரு பிச்சைக்கார குணத்தை கேட்டால், நீங்களே கேவலமாக சிரித்து விடுவீர்கள். அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜோலார்பேட்டையில் போட்டியிட்ட கே.சி.வீரமணி, ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுப்பது என்று தனது விசுவாசிகளிடம் கருத்து கேட்டிருக்கிறார். அப்போது பலவிதமாக கருத்துகள் சொல்ல, ஓட்டு ஒன்றுக்கு 750 ரூபாய் கொடுக்கலாம் என்று கே.சி.வீரமணி கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியான அவரது விசுவாசிகள், பிற மாவட்டங்களில் போட்டியிடுகிற அமைச்சர்கள் எல்லாம் இரண்டாயிரம் ரூபாய் பணம் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 750 ரூபாய் கொடுத்தால் வெற்றிப் பெறுவது கடினம். மேலும், 750 ரூபாயை சில்லறை நோட்டுகளாக மாற்றி கொடுப்பதும் சிரமம். அந்தப் பணம் முழுமையாக வாக்காளர்களுக்கு சென்று சேராது. எனவே, ஆயிரம் ரூபாயாக இரண்டு ஐந்நூறு ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.

அதன் பிறகே ஆயிரம் ரூபாய் வீதம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கே.சி.வீரமணி சம்மதித்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு பைசாவாக கணக்குப் பார்த்தவர்தான் கே.சி.வீரமணி.
அவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை என்ற தகவல் கிடைத்தவுடனே அவரது வீட்டு முன்பு குவிந்தோம். அதற்கு காரணம் அவர் மீதான பாசம் என்று எல்லாம் கருதி விடாதீர்கள். உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. அதில் போட்டியிட கே.சி.வீரமணியின் ஆதரவு வேண்டும். அந்த சுயநலத்திற்காகதான் அதிமுக நிர்வாகிகள் அவர் வீட்டு முன்பு கூடி ஆர்ப்பாட்டம், மறியல் என எதிர்ப்பு தெரிவித்தோம்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்று சொன்னால், அது எப்போது கே.சி.வீரமணியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்வார்கள் என்பதுதான். சீக்கிரம் கே.சி.வீரமணியை பிடித்து சிறையில் போடச் சொல்லுங்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்குள் கே.சி.வீரமணி செய்து வரும் உள்கட்சி அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளியாவது விழட்டும் என்றார்கள் கே.சி.வீரமணிக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகள்.