Tue. Nov 26th, 2024

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை உள்ளடக்கிய அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் அமைச்சராக இருப்பவர் ராஜ கண்ணப்பன். இவரது தலைமையில் இயங்கும் வட்டார போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலுமே அமைச்சரின் ஆதரவாளர்களின் தலையீடுகள் அதிகமாக இருக்கிறது என்று அந்த துறையோடு சம்பந்தப்பட்டவர்கள் புலம்பி வருகின்றனர்.

சின்ன சின்ன விஷயங்களில் கூட காசு பார்க்கும் அளவுக்கு போக்குவரத்து துறையில் முறைகேடுகள் அதிகமாக தலை காட்ட துவங்கிவிட்டது என்பதுதான் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு வருபவர்களின் பொருமல்களாக உள்ளன. நான்கு சக்கர வாகனங்களில் தொடங்கி தனியார் பேருந்துகள் என அனைத்து விதமான வாகனங்களின் பதிவின் போதும், கடந்த ஆட்சியை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது என்றும், முந்தைய ஆட்சியோடு திமுக ஆட்சியை ஒப்பிட்டால், கடந்த அதிமுக ஆட்சியே பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு முறைகேடாக பணம் வசூலிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார்கள் என்கிறார்கள் மோட்டார் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழில் முனைவோர்கள்.

இப்படி போக்குவரத்து துறையின் அன்றாட செயல்பாடுகளில் நிர்வாக சீர்கேடு தலைக் காட்ட துவங்கியுள்ள இந்த நேரத்தில், அரசு போக்குவரத்து கழகங்களில் அதிகாரிகளை நியமிப்பதிலும் ஆள் ஆளுக்கு நாட்டாமை செய்கிறார்கள் என்பதுதான் போக்குவரத்துத் துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

அதற்கு உதாரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பணியிட மாற்றத்தை முன்வைத்து அவர்கள் பேசுகிறார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.பொன்முடி என்பவர், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்புதான் பணியிட மாற்றம் பெற்று, விழுப்புரம் கோட்டத்தின் மேலாண்மை இயக்குநராக பதவியேற்றார்.

பதவியேற்று இரண்டு மாதம் முடிவதற்கு முன்பாக நேற்று முன்தினம் ஆர். பொன்முடி அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டார். இந்த அதிகாரி பணியிட மாற்றத்தின் பின்னணியில்தான் விழுப்புர மாவட்ட அமைச்சர் க.பொன்முடியின் கைங்கர்யம் இருக்கிறது என்கிறார்கள், விழுப்புரம் போக்குவரத்துக் கழக பணியாளர்கள்.

அவர்களிடம் பேசியபோது, வாய் துடுக்கால் மேலாண்மை இயக்குநர் பொன்முடியை அமைச்சர் க. பொன்முடி தூக்கியடித்துவிட்டார் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த தொழிற்சங்கத்தில் உள்ள முக்கிய நிர்வாகி, பணியிட மாற்றத்தின் பின்னணியை விவரித்தார்.

இரண்டு மாதத்திற்கு முன்பு விழுப்புரம் கோட்டததிற்கு பணி மாறுதல் பெற்று வந்த ஆர். பொன்முடி, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனின் பெயரைச் சொல்லி ஆடாத ஆட்டம் ஆட தொடங்கினார். ராஜ கண்ணப்பனின் உறவினர் நான் என்று கூறிக் கொண்டு, அவரது மண்டலத்திற்குட்பட்ட அதிகாரிகளை, தரக்குறைவாக பேசினார். வயதில் மூத்த அதிகாரிகளை கூட ஒருமையில் பேசி அவமரியாதை செய்ததுடன், பொது மேலாளர்களையும் அச்சுறுத்த தொடங்கினார். இப்படி இரண்டு மாதத்திலேயே சுயரூபத்தை காட்டிய ஆர்.பொன்முடி, திமுக உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளிடமும் தனது அதிகார திமிரை காட்ட தொடங்கினார்.

அரசு போக்குவரத்து கழகத்தின் ஆணிவேராக இருக்கும் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரின் பணிகளிலும் தன்னிச்சையாக தலையிட்டு, அவர்களை துன்புறுத்தும் வகையில் பணி ஒதுக்கீடு செய்ய ஆரம்பித்தார். முந்தைய அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட திமுக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகளை கூட வழங்காமல், அவர்களை உதாசீனப்படுத்தியதை கண்டு திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் கொதித்துப் போனார்கள்.

ஆர்.பொன்முடியின் அதிகார துஷ்பிரயோகங்களை எல்லாம் பட்டியலிட்டு, மாவட்ட அமைச்சரான க.பொன்முடியிடம் புகார் பட்டியல் வாசித்தார்கள் திமுக தொழிற்சங்க நிர்வாகிகள். அதை கேட்டு ஆவேசமான விழுப்புரம் மாவட்ட அமைச்சர், உடனடியாக போக்குவரத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனை தொடர்பு கொண்டு, விழுப்புரத்தில் இருந்து உடனடியாக ஆர்.பொன்முடியை தூக்கியடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிக மிக நெருக்கமாக இருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியை பகைத்து கொள்ள விரும்பாத அமைச்சர் ராஜ கண்ணப்பன், வேண்டா வெறுப்பாக ஆர். பொன்முடியை, விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு மாற்றிவிட்டார். பழிவாங்கும் நடவடிக்கையாக இல்லாமல், போக்குவரத்து கழகத்தின் சிறப்பு அதிகாரியாகவும் நியமித்துவிட்டார்.

விழுப்புரம் கோட்டத்திற்கு புதிய மேலாண்மை இயக்குனராக எஸ்.ஜோசப் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் க.பொன்முடியின் அதிகாரத்திற்கு கட்டுப்பாடாத அதிகாரிகள், உடனடியாக பந்தாடப்படுவார்கள் என்பது போக்குவரத்து துறையில் நடைபெற்ற பணியிட மாற்றம் மூலம் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதைப் போலதான் இருக்கிறது என்கிறார்கள் மற்ற துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள்.

நேர்மையாகவும், நியாயமாக செயல்படாவிட்டால் உடனடியாக தண்டனை கிடைக்கும் என்பதும் முந்தைய அதிமுக ஆட்சியைப் போல, ஆளும்கட்சி நிர்வாகிகளை ஏச்சி பிழைக்கலாம் என்று கனவு காணும் அரசு அதிகாரிகள் திமுக ஆட்சியில் நிம்மதியாக பணிபுரிய முடியாது என்பதும் விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கும் அதிரடி நடவடிக்கைகள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியம் அரசு அதிகாரிகளுக்கும் பாடமாக அமைய வேண்டும் என்பதே திமுக தொழிற்சங்க நிர்வாகிகளின் வேண்டுகோளாகும் என்றார் ஒரே மூச்சில்….