Fri. Nov 22nd, 2024

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களில் அதிகளவு செல்வாக்கு பெற்றவராக வலம் வந்தவர் தியாகராயநகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சத்யா என்கிற சத்யநாராயணன். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி. தங்கமணி ஆகியோரை கைக்குள் போட்டுக் கொண்டு தியாகராயநகர் தொகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த சென்னையையும் ஆட்டிப்படைத்தவர் சத்யா என்று அதிமுக நிர்வாகிகளே அடுக்கடுக்காக குற்றம் சாட்டி வந்தனர். பகுதிச் செயலாளர்கள் நியமனத்தில், பாரம்பரிய அதிமுக நிர்வாகிகளை புறக்கணித்துவிட்டு, தனது அடியாட்டுகளுக்கும், அதிமுக.விற்காக துளியும் உழைக்காதவர்களுக்கும் கூட பதவிகளை வாரி வழங்கியதால், வெறுப்படைந்த மூத்த நிர்வாகிகள், சத்யா எம்.எல்.ஏ.வுக்கு எதிராக ஒன்று திரண்டு அதிமுக தலைமைக் கழகமான ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு படையெடுத்து சத்யாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு துளியும் மரியாதை கொடுக்காமல், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் நிழலில் நின்று கொண்டு தி.நகர் சத்யா செய்த முறைகேடுகளை எல்லாம் தற்போதைய திமுக ஆட்சி தூசி தட்டியெடுக்க ஆரம்பித்துவிட்டது. தி.நகரை மாடர்ன் சிட்டியாக மாற்ற நடைபெற்ற பல்வேறு பணிகளில் சத்யா தலையிட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு தொல்லைகள் கொடுத்தார் என்றும் கமிஷன் கேட்டு அடாவடி செய்தார் என்றும் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் ஒப்பந்ததாரர்கள் பலமுறை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தார்கள். ஆனால், மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல, சத்யாவின் தில்லாலங்கடி வேலைகளால் குளிர் காய்ந்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள், சத்யாவின் அராஜகத்திற்கு துணை போனார்கள்.

முந்தைய அதிமுக ஆட்சியின் போது, அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை தி.நகர் சத்யாவை கண்டிக்க துணிவு இல்லாததால், அவரது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பூங்கா பராமரிப்பு, விளையாட்டு சாதனங்கள் நிறுவுவது, புதிய சாலைகள் அமைத்தல் என அனைத்து பணிகளிலும் தலையிட்டு, அதிகளவு முறைகேடில் ஈடுபட்டார் என்பது அப்போதே லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்களாக அனுப்பப்பட்டன. அப்படி அனுப்பி வைக்கப்பட்ட புகார்களை தூசி தட்டியெடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், தி.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்ததில், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர்.

அதேகாலகட்டத்தில் தற்போதைய முதல்வரும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது தொகுதிக்குட்பட்ட கொளத்தூரில் சத்யா கட்டியதைப் போலவே உள்விளையாட்டு அரங்கை கட்டியுள்ளார். ஆனால், அதற்கு செலவிடப்பட்ட தொகை வெறும் 30 லட்சம் ரூபாய் மட்டுமே.


இப்படி ஒரே ஒரு பணியில் மட்டும் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு தி.நகர் சத்யா முறைகேடு செய்துள்ளார் என்பதை விசாரணை மூலம் கண்டறிந்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யும் பணியை முடுக்கிவிட்டுள்ளது. இதேபோல, புதிய சாலைகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலும் கோடிக்கணக்கான ரூபாய் சத்யா முறைகேடு செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவை தவிர, முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் தி.நகர் தொகுதியில் பல இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக சூதாட்ட கிளப்புகள் நடத்தியது, அதன் மூலம் கிடைத்த பணத்தில் கொடைக்கானலில் சொகுசு பங்களா வாங்கி குவித்தது உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களை தோண்டி துருவி எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த பணிகள் முழுமையடைந்தவுடன் ஒரு சுபயோக சுப தினத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைக்கப்படுவார் என அடித்து கூறுகிறார்கள் புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார்.