Sun. Apr 20th, 2025

சட்டப்பேரவையில் இன்று கோடநாடு விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. முதலமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

பேரவை காலையில் கூடியவுடனேயே திமுக எம்.எல்.ஏ சுதர்சனம் பேசியபோது, அதிமுக.வினரை சூடாக்கினார்.

அவர் பேசியதாவது :

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் நீங்கவில்லை. திமுக தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிபடி, அதுதொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து உண்மையான குற்றவாளிளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என சுதர்சனம் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் குறுக்கிட்டுப் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீதிமன்றத்தில் அது தொடர்பாக வழக்கு உள்ளதால் பேரவையில் பேசுவது முறையல்ல என்றும் ஜெயலலிதாவின் மரணம் குறித்த கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றே உறுப்பினர் பேசினார்; வழக்கின் உள்ளே செல்லவில்லை, அதனால் அவைக்குறிப்ப்பில் இருந்து நீக்க தேவையில்லை என்று விளக்கம் அளித்தார்.

இதனிடையே கோடநாடு விவகாரமும் சர்ச்சையை கிளப்பியது.

கோடநாடு விவகாரத்தை சுட்டிக்காட்டிப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சியினருக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்து பேசினார்.

:மறைந்த முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டில் இருந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா அலுவல் பணிகளை மேற்கொண்ட இடத்தில் சிசிடிவி எப்படி அகற்றப்பட்டது?

கோடநாடு இல்லத்தில் கொலை, கொள்ளை நடந்தபோது ஏன் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை?

கொலை, கொள்ளை நடந்த கோடநாடு சாதாரண இடமில்லை; அந்த குற்றங்களை எதில் சேர்ப்பது?

கோடநாடு கொலை, கொள்ளை விசாரணைக்கு தடைகேட்டு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது ஏன்? இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டார்.

அதன் பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தனியாரிடம் சென்ற கோடநாடு சொத்துக்கு எப்படி பாதுகாப்பு தரமுடியும்?

புலன் விசாரணை வேண்டாம் என கூறவில்லை, வழக்கை நடத்துங்கள்.

கோடநாடு சம்பவம் குறித்து முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வழக்கிற்கு நாங்கள் தடை கேட்கவே இல்லை, எங்களுக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்புமில்லை. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முதல்வரும், எதிர்க்கட்சித்தலைவரும் கோடநாடு விவகாரம் குறித்து மாறி, மாறி கருத்துகளை தெரிவித்தால், பேரவையில் கொஞ்சம் நேரம் பதற்றமாகவே காணப்பட்டது.