மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலாவின் வசமிருந்த ரூ.100 கோடி மதிப்பிலான பையனூர் பங்களாவை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
பினாமி சொத்துகள் தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது, பையனூர் பங்களா, செல்வி ஜெயலலிதாவின் பினாமியான வி.கே.சசிலாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பினாமி சட்டத்தின் கீழ் அந்த பங்களா முடக்கப்பட்டது. இதனையடுத்து, சசிகலாவுக்கு வருமான வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இன்றைய நிலையில், அந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ. 100 கோடி என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பான விசாரணையில், 1994 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு சொந்தமான பையனூர் பங்களாவை, அவரிடம் இருந்து அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வி.கே.சசிகலா, கங்கை அமரனை மிரட்டி, குறைந்த விலைக்கு பையனூர் பங்களாவை பதிவு செய்திருப்பதும் வி.கே.சசிகலா மற்றும் அவரை பங்குதாரராக கொண்ட நிறுவனத்தின் பெயரில் அந்த சொந்து விலைக்கு வாங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
ஏற்கெனவே, சசிகலாவுக்கு உரிமையுள்ள போயஸ் கார்டன், கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு சொத்துகள் மத்திய, மாநில அரசுகள் முடக்கப்பட்டிருப்பது நினைவுக்கூரத்தக்கது.