Fri. Nov 22nd, 2024

ஆண்டுதோறும் செப்டம்பர் 15 ஆம் தேதியன்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாளும், திமுக துவங்கப்பட்ட நாளும் சேர்த்து முப்பெரும் விழாவை திமுக தலைமைக் கழகம் ஆண்டுதோறும் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடி வருகிறது. மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலத்தில் மூன்று நாட்கள் முப்பெரும் விழா எழுச்சியோடு தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா , பாவேந்தர் ஆகியோர் பெயரிலான விருதுகள் திமுக முன்னோடிகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மூன்று விருதுகளும் வழங்கப்பட்டு வந்தன. பல்வேறு காரணங்களால் அவரது காலத்திலேயே நாளடைவில் முப்பெரும் விழா, ஒருநாளாக குறைந்து போனது. அதற்கு காரணமாக, 1981 ஆம் ஆண்டில் நடைபெற்ற வரலாறு காணாத வன்முறையும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அவரது வழியிலேயே தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் முப்பெரும் விழாவை எழுச்சியோடு நடத்தி வருகிறார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் ஆகிய மூன்று விருதுகளுடன் கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் பெயரிலும் சேர்த்து 5 விருதுகளாக வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தி சிறப்பாக கொண்டாடி வருகிறது திமுக தலைமை.

அந்த வகையில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள முப்பெரும் விழாவுக்கான விருது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தந்தை பெரியார் விருதுக்கு திமுக.வின் முன்னோடிகளில் ஒருவரான மிசா.பி.மதிவாணன், பேரறிஞர் அண்ணா விருதுக்கு எல்.மூக்கையா, கலைஞர் விருதுக்கு கும்முடிபூண்டி கி.வேணு, பாவேந்தர் விருது வாசுகி ரமணன், பேராசிரியர் விருது பா.மு. முபாரக் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வரும் 15 ஆம் தேதி சென்னையில் திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திமுக முன்னோடிகள் 5 பேருக்கும் திமுக தலைவர்களின் விருதுகளை அக்கட்சியின் தலைவரும், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவிக்கவுள்ளார். பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்த பிறகும், முதல்வராக மு.க.ஸ்டாலினே பதவியேற்ற பிறகும் நடைபெறும் முதல் விழா இது என்பதால், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மிகுந்த ஆவலோடு முப்பெரும் விழாவை எதிர்நோக்கியுள்ளனர்.