.
.
2021 தேர்தல் களம் சுவாரஸ்யமாகவும், விநோதமாகவும் இருக்கிறது, இதற்கு முன்பு தமிழகம் சந்தித்த சட்டப்பேரவை தேர்தல்களை விட வரும் ஏப்ரல் மாத நிறைவில் நடைபெறும் தேர்தல், தமிழ் மண் இதுவரை கண்டிராத கண்ணாமூச்சி விளையாட்டுகளை நிறையப் பார்க்க போகிறது. திராவிட இயக்கம், அரசியல் கட்சியாக உருவெடுத்த 1962 முதல் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் வரை, திராவிட சித்தாந்தத்தை உயிர்மூச்சாக கொண்ட தலைவர்களால், தேர்தல் களம், அனலாக கொதித்தது. ஆளுமைமிக்க தலைவர்களின் துணிச்சலால், மாநில சுயாட்சி என்ற முழக்கம் வலுவாக எதிரொலித்தது. ஆனால், இன்றைக்கு திராவிட சித்தாந்தத்தை அடிப்படைகொள்கையாக கொண்டு, 50 ஆண்டுகளாக ஆட்சிப் புரிந்து வந்த, தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளும், திராவிடச் சிந்தாந்தம் எனும் கொள்கையை தூக்கி எறிந்துவிட்டு, வாக்கு அரசியலை மையமாக வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கின்றன.
அதன் விளைவுதான், புதிது புதிதாக தோன்றும் கட்சிகள் கூட, இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்கு எதிராக சேற்றை வாரிப் பூசிவிட்டு, மக்களிடம் செல்வாக்குப் பெற்று, தமிழக அரசியலில் வலுவாக காலை ஊன்றும் அளவிற்கு தமிழ் மண், இளகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய கள யதார்த்தம். மொழி, இனம், சித்தாந்தம் உள்ளிட்டவற்றையெல்லாம் கடந்து, மிக முக்கியமாக பேசப்படும் பொருளாக ஊழல் இருக்கிறது.
தமிழ், தமிழர், தமிழ் மண் என்ற சிந்தனையில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்களிடம் கூட, இன்றைய சூழ்நிலையில் மன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை. கடந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது என்ற குற்றச்சாட்டு, கடந்த காலங்களில் கேட்டதை விட இப்போது சற்று அதிக சத்தத்துடன் கேட்கிறது. இந்த முழக்கம், மறைமுகமாக பா.ஜ.க.வை நோக்கி தமிழக மக்களை நகர்கிற வித்தையை உருவாக்கி வருகிறது. ஊழலுக்கு எதிரான முழக்கத்தை முன்னெடுப்பவர்களை நோக்கி, இளம்தலைமுறை முதல் முதியோர் வரை நகர்ந்து செல்கிற காட்சிகள், தமிழகம் முழுவதும் காண முடிகிறது. அந்தவகையில், நேற்று முளைத்த காளான் கூட, அரச மரம் போல காட்சியளிக்கும் விந்தையும் இன்றைய தேர்தல் களம் ஏற்படுத்தியிருக்கிறது. வரும் தேர்தல், ஆளும்கட்சியான அ.தி.மு.க.வுக்கும், எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கும் இடையேயான போட்டிதான் என்று வெளிப்பார்வைக்கு தெரிந்தாலும், இந்த இரண்டு கட்சிகளையும் தேர்தல் வாக்குப்பதிவின் போது பெரிய அளவில் சிதைத்து பதம் பார்க்கிற அளவுக்கு, திரையுலக கவர்ச்சிதான் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.
போகிற போக்கில் திரையுலகக் கவர்ச்சி என்று சொன்னாலும்கூட, இன்றைக்கு களத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கும் இரண்டு நடிகர்களில், சீமான் தமிழ் தேசியத்தை முன்னெடுத்துச் செல்கிறார். அவரை ஆதரிக்கும் கூட்டம், கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் கணிசமாக வளர்ந்து இருக்கிறது. ஆளுமைமிக்க இரண்டு தலைவர்கள் இருந்தபோதே, நாம் தமிழர் இயக்கத்தை, அரசியல் பாதைக்கு மாற்றி, அதுவும் திராவிடச் சித்தாந்தத்திற்கு எதிராக ஆழமான கருத்துகளை முன்வைத்து, கடந்த பத்தாண்டுகளில் மெல்ல, மெல்ல வளர்ந்து, 3 முதல் 4 சதவிகித வாக்குகளை தன் வசப்படுத்தியிருக்கிறார் சீமான். இந்த நிலையை எட்டுவதற்காக, பல போராட்டங்களை அவர் எதிர்கொண்டிருக்கிறார், சிறைச்சாலைகளுக்கு சென்றிருக்கிறார். மாநிலத்தின் பல பகுதிகளில் வழக்குகளை எதிர்கொண்டிருக்கிறார்.
தமிழ் மண்னை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்து அவர் செய்து வரும் பிரசாரம், இளம்தலைமுறையினரை பெருமளவில் ஈர்த்து, அவர் பக்கம் அணிவகுக்க பாதை அமைத்தது. கால்நடை வளர்ப்பை அரசு பணியாக மாற்றுவேன், முருகன், சிவன் எங்கள் மூதாதையர் என்ற சீமானின் சில பேச்சுகள், அறிவார்ந்த அரசியலின் முதிர்ச்சியாக இல்லை என்று, தமிழக அரசியலில் கேலியாகவும், கிண்டலாகவும் பேசப்பட்டாலும், அதைப் பற்றி அவர் சிறிதளவும் கவலைப்படாமல், தான் கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாமல் துணிந்து முன்னேறிச் சென்றுக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு எதிரான அனைத்து விமர்சனங்களையும் தூசி போல தட்டி செல்ல வைக்கிறது, என்றைக்குமே தனித்துப் போட்டி என்கிற அவரின் ஆண்மைமிக்க குணமே. ஆனால், அவரின் இந்த பத்தாண்டு அரசியல் பயணத்தையும், அபார வளர்ச்சியையும் ஒன்றிரண்டு மாதங்களிலேயே சிதைக்க தொடங்கிவிட்டார் நடிகர் கமல்ஹாசன் என்பதுதான் அரசியல் விசித்திரம்.
கடந்த 40 ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்த் மீது பட்ட அரசியல் வெளிச்சம் கூட, நடிகர் கமல்ஹாசன் மீது விழுந்திராத போதும், அரசியலுக்கு வரப்போகிறார் ரஜினி என்ற பேச்சு பலமாக அடிப்பட்ட நேரத்திலேயே துணிந்து அரசியல் வேடம் தரித்து, மக்கள் நீதி மையத்தை உருவாக்கி சில ஆண்டுகளுக்குள்ளாகவே, மூலை முடுக்கெல்லாம், அவரைப் பற்றி பேசுகிற அளவுக்கு, மாற்றத்தை அவரால் உருவாக்க முடிந்திருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம், திரையுலக கவர்ச்சியே தவிர வேறு ஒரு காரணமும் இல்லை.
திரையுலகிலேயே விஷயஞானம் அதிகம் உள்ளவர் கமல்ஹாசன் என்ற பாராட்டுக்களை பெற்றவராக இருந்தாலும்கூட, திராவிட கட்சிகளைப் போல வாக்கு அரசியலை நோக்கி அவரது கவனமும் திரும்பியதுதான் கற்றோர் மத்தியில் இன்றைக்கு சூடான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. சினிமா ஷூட்டிங் போலவே, அரசியல் களத்தையும் நினைத்துக் கொண்டு, அவ்வப்போது வந்து, ஆக்ரோஷமாக கமல் பேசுவதை, அறிவார்ந்த சமுதாயம் புறக்கணித்தாலும்கூட, அவரை ரசிப்பதற்கும், அவரை பின்பற்றுவதற்கும் ஒரு கூட்டம் திரள, பிக் பாஸ் எனும் சின்னத்திரை போதையில் ஊறிக் கிடக்கும் மக்களால் சாத்தியமாகிறது.
அரசியல் கொள்கையில், நிலைப்பாட்டில், மக்கள் நலன் சார்ந்த அம்சங்களில் தெளிவு இல்லாதவராகதான் தன்னை கமல்ஹாசன் இதுவரை அடையாளப்படுத்தி கொண்டு வருகிறார். மாநில சுயாட்சிக்கோ, மாநில நலனுக்கோ எதிரான எந்தவொரு விவகாரத்திலும், ஒரு டிவிட்டோ அல்லது 5 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவையோ வெளியிட்டுவிட்டு காணாமல் போய்விடுகிறார் கமல்ஹாசன். திரைப்படத்தில் எகிறி எகிறி வில்லன்களை பந்தாடும் கமல்ஹாசனுக்கு, போராட்டக்களம், உண்மையில் அவருக்கு போராட்டமாகதான் இருக்கிறது.
மக்களை பாதிக்கும் எந்தவொரு விஷயத்திற்கும் மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுக்க தெம்பு இல்லாத கமல்ஹாசன், அரசியல் மேடைகளில் அசகாய சூரனாக பல வேடம் தரித்து வெளுத்துக் கட்டுகிறார். அதைப் பார்த்து, வழக்கம் போலவே ஏமாந்து, தமிழ் மக்கள் அவரை நம்பி பின் செல்கிறார்கள் என்று வேதனைப்படுகிறார் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி பல்லாண்டு காலமாக பரப்புரை மேற்கொண்டு வரும் தமிழ் தேசியவாதி தலைவர் ஒருவர்.
ஆரியத்தை எதிர்ப்பதே தன் வாழ்வின் லட்சியம் என்ற மனஉறுதியோடு, உயிர் பிரியும் வரை போராடிய தந்தை பெரியார் பிறந்த மண்ணில், ஆரியம் எதிர்ப்பு என்பது வெறும் சாதிக் கண்ணோட்டத்தோடு பார்த்து, பிராமணர்கள் எதிர்ப்பு நிலை என்ற குறுகிய வட்டத்திற்குள் தமிழ் மக்களை கொண்டு வந்து நிறுத்திவிட்டது, திராவிட அரசியல். ஆனால்,ஆரியம் எதிர்ப்பு என்பது, சுய மரியாதையோடு வாழ்வது, பகுத்தறிவோடு சிந்திப்பது, செயல்படுவது, நாகரிக மனிதனாக நடமாடுவது போன்ற மனிதப் பிறப்பின் மகத்துவத்தை, தமிழக மக்களுக்கு கடந்த 50 ஆண்டு திராவிட ஆட்சிகள் கற்றுத்தரவில்லை. அதன் விளைவுதான், நடிகர் சீமான் கடந்த பத்தாண்டுகளாக ஆவேசமாக பேசி வந்தாலும், தமிழக மக்களிடம் அரசியல் முதிர்ச்சி இல்லாததால், நடிகர் கமல்ஹாசனை இன்றைக்கு தூக்கிக் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக எடுக்கப்பட்டு வரும் கருத்துக் கணிப்புகள், கமல்ஹாசனுக்கு உள்ள செல்வாக்கை பிரதிபலிக்கின்றன. கடந்த பத்தாண்டுகள் கடுமையாக உழைத்து 3 சதவிகிதத்திற்கு மேல் வாக்கு வங்கியை உருவாக்கிய சீமானை விட, கமல்ஹாசனுக்கு கூடுதலான வாக்கு சதவிகிதம், வரும் சட்டமன்றத் தேர்தலில் கிடைக்கப் போகிறது என்று அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் சொல்கிறார்கள் கருத்துக் கணிப்பில் ஈடுபட்டு வரும் நண்பர்கள்.
18 வயதான புதிய வாக்காளர்கள் முதல், இந்த தேர்தல் கடைசி தேர்தலாக அமைந்த விடுமோ என்று கவலைப்படுகிற முதிய வாக்காளர்கள் வரை, கமல்ஹாசனை ஆதரிக்கிறார்களாம். சிறுசிறு கிராமங்களில் கூட கமல்ஹாசனை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள் அவர்கள். இதில், விசித்திரம் என்னவென்றால், கமல்ஹாசன், அந்த கிராமங்களுக்கோ, அந்த கிராமங்களை உள்ளடக்கிய மாவட்டத்திற்கோ இதுவரை ஒருமுறை கூட கமல்ஹாசன் சென்றதில்லை என்பதுதான்.
ஆக, மொத்தத்தில் குழம்பிய குட்டையிலும் மீன் பிடிக்கலாம் என்று கலையை கற்பதற்காக, களத்தில் குதித்துவிட்டார் கமல்ஹாசன். நடிகர் ரஜினிக்கு இல்லாத இந்த தைரியம், அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் ஊழல் எனும் வலையை வீசி, குட்டை மீன்களை மொத்தமாக அறுவடை செய்துவிட முடியும் என்ற அவரின் அசாத்திய நம்பிக்கைதான், பகுதி நேர அரசியல்வாதியாக இருந்தாலும், பழுத்த அரசியல்வாதிக்கான ராஜதந்திரமும் தனக்கு வந்தவிட்டது என்பதை சொல்லாமல் சொல்கிறார். அந்த நினைப்பில்தான், தனது தலைமையில் மூன்றாவது அணி அமையும் என்று தெம்பு காட்டுகிறார். கமல்ஹாசன் காட்டும் வான வேடிக்கைகளை, நிரந்திர வெளிச்சம் என்று நம்பும் மக்கள் இருக்கும் வரை, தமிழகத்திற்கு விடிவு ஒருபோதும் இருக்கப்போவதில்லை. எத்தனை சீமான்கள் உருவானாலும், தமிழ் தேசியம் சாத்தியமாவது கேள்விக்குறிதான்.