Mon. May 20th, 2024

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன் விபரம் இதோ:

”உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்து.என்பது வள்ளுவப் பெருந்தகையின் பொய்யாமொழி.
உழவுத்தொழில் அன்றி, பிற தொழில்களைச் செய்யும் அனைவரையும், உழவர்களே தாங்குவதால், அவர்கள் இந்த உலகத்திற்கே அச்சாணி போன்றவர்கள். ஒரு நாட்டின் வளம், அந்த நாட்டின் விவசாயத்தைப் பொறுத்தே அமையும். அதனால்தான், ஜெயலலிதா, வேளாண்மை உள்ளிட்ட முதன்மைத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி, பல திட்டங்களைத் தீட்டி, அதனைச் செயல்படுத்த, அதிக நிதி ஒதுக்கீடும் வழங்கினார்.

அந்த வழியை வழுவாமல் பின்பற்றும் எனது தலைமையிலான அரசும், வேளாண் பெருமக்களின் நலன் பேணவும், வேளாண்மை செழிக்கவும் பல திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் துயர் ஏற்படும்போதெல்லாம் அரசு உதவிக்கரம் நீட்டி, அவர்களைக் காப்பதில் முன்னிலையில் இருந்து வருகின்றது. அதனால் தான், 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடன், 31.3.2016 வரை நிலுவையில் இருந்த 5,318.73 கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தார். இதனால் 12.02 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற்றனர்.

2017ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக இழப்பைச் சந்தித்த விவசாயப் பெருமக்களுக்கு 2,247 கோடி ரூபாய் வறட்சி நிவாரணத் தொகையாக அரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து, விவசாயிகளின் வாழ்வு செழிக்க, பல்வேறு நலத்திட்டங்களும், வேளாண் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களும் எனது தலைமையிலான அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2019-20ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியது. இந்நிலையில், விவசாயமும் பாதிப்புக்குள்ளானதுடன், தொடர்ந்து ஏற்பட்ட நிவர், புரெவி போன்ற புயல்களும், அதைத் தொடர்ந்து, சென்ற மாதம் பருவம் தவறிப் பெய்த கடும் மழையும், பெருத்த பயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியதால், கடன் பெற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் அல்லலுக்கு உள்ளாகினர்.

இந்தப் பேரிடர், அறுவடைகளுக்குத் தயாராக இருந்த நெல், கரும்பு, வாழை, தோட்டப் பயிர்களை மட்டுமல்லாது, மானாவாரி பயிர்களையும் பெருமளவில் சேதப்படுத்தியது. வேளாண் பெருமக்களின் நலனில் என்றும் அக்கறை கொண்டுள்ள எனது தலைமையிலான அரசு, மத்திய அரசின் நிதி விடுவிப்பையும் எதிர்பாராமல், சாகுபடி செய்த பயிர்களுக்கான இடுபொருள் உதவித்தொகை 1,717 கோடி ரூபாயை 16.43 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க உத்தரவிட்டு, அந்தத் தொகையையும் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த இடுபொருள் உதவித்தொகையானது, விவசாயிகளின் துயரைத் துடைத்தாலும், அவர்கள் மீண்டும் பயிர்த்தொழிலைத் தொடர உதவ வேண்டும் என்று அரசு எண்ணியது. மேலும், விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்கள், சாகுபடி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

கீழே விழுந்தவர்களை மேலே தூக்கிவிட்டால் மட்டும் போதாது, அவர்கள் மேலும் வலுப்பெற உதவி செய்திட வேண்டும் என்ற உயரிய சிந்தனையில், எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகின்றது.

எனவே, தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, 31.1.2021 அன்றைய நிலவரப்படி, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாயையும் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘அதிகமாக நேசிப்பவனே அதிகமாக உதவி செய்பவன்’. நானும் ஒரு விவசாயி; விவசாயிகளை அதிகமாக நேசிப்பவன்; வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலைத் தீர்ப்பதே எனது முதல் கடமை என்னும் நிலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையினால், பயிர்க்கடன் நிலுவை வைத்துள்ள 16.13 லட்சம் வேளாண் பெருமக்களும் எந்தவிதமான சிரமமும் இன்றி, வரும் ஆண்டில் பயிர் சாகுபடியைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரசு தற்போது பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல் அரசாணையையும் வெளியிட்டு, அதற்கான நிதி ஆதாரத்தையும் வருகின்ற நிதிநிலை அறிக்கையிலேயே ஏற்படுத்த உள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக செயல்படுத்தப்படும் ‘.
இவ்வாறு முதல்-அமைச்சர் பழனிசாமி கூறினார்.