காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக கர்நாடகாவிற்கு மோடி அரசு துணை போவது நாடறிந்ததே,மேகதாது அணை நிராகரிக்க தமிழகத்திற்கு உதவிட தயாராக உள்ளேன் என முதலமைச்சர பினராய் விஜயன் உறுதியளித்துள்ளதாக பிஆர் பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்..
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பிஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் குழு இன்று கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயனை திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து மேகதாது அணை தடுத்திட கர்நாடகாவின் வரைவு திட்ட அறிக்கையை நிராகரித்திட ஆதரவு கோரி கோரிக்கை மனு அளித்து எடுத்துரைத்த பின் திருவனந்தபுரத்தில் வெளியிட்ட ஊடக பத்திரிக்கை செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…
கர்நாடகம் தொடர்ந்து பல அணைகளை கட்டி தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீரை முழுமையும் தடுத்து விட்டது.தற்போது உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது.உபரி நீரையும் தடுத்து நிறுத்தி தமிழகத்தை அழித்துவிட வேண்டும் என்ற வக்கிர புத்தியுடன் அரசியல் லாபத்திற்காக தமிழக எல்லை அருகே காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்குவதற்கும் முயற்சி செய்கிறது.மத்திய அரசு மறைமுகமாக கர்நாடகாவிற்கு துணை போகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்றம் அனுமதி இல்லாமல் கர்நாடகாவிற்கு மேகதாது அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய மோடி அரசு தன் விருப்பத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது.அதன் அடிப்படையில் தற்போது புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகம் அனுப்பி வைத்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் இது குறித்து விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக கடந்த வாரம் கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மையடம் மத்திய ஜல்சக்திதுறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்துள்ளதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதன் மூலம மறைமுகமாக காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு தன் விருப்பத்திற்கு செயல்பட நிர்ப்பந்தப்படுத்துவது வெளிப்படுகிறது.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளதாக வெளிவந்துள்ள தகவல் உறுதிப்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் பெரும்பான்மை அடிப்படையில் தான் முடிவெடுக்க முடியும். திட்டம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் எடுக்கும் முடிவை உச்சநீதிமன்றம் தான் இறுதி படுத்த முடியும்.இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகம் புதுச்சேரி கர்நாடகம் கேரள மாநிலங்கள் அங்கம் வைப்பதால் கேரள அரசு தமிழக விவசாயிகள நலன் கருதி மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கை நிராகரிப்பதற்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தோம்.
அதனை ஏற்றுக்கொண்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,மோடி அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக மேகதாது அணை கட்டுவதற்கும், காவிரி பிரச்சனையிலும் கர்நாடகாவில் அரசியல் லாபம் கருதி துணைபோவது நாடே அறிந்துள்ளது நானும் முழுமையாக அதை உணர்ந்துள்ளேன். தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்கிற நிலையில் இன்று உடனடியாக கேரள மாநில நீர்ப்பாசனத்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி தமிழகத்திற்கு உதவி புரிவதற்கு நான் தயாராக இருக்கிறேன் கவலைப்பட வேண்டாம். பத்திரமாக ஊர் செல்லுங்கள் என்று உத்தரவாதம் அளித்தார்.
மேலும் எந்த வழியாக கேரளாவிற்கு வந்தீர்கள்,எப்பொழுது வந்தீர்கள் எங்கு தங்கி உள்ளீர்கள் எப்பொழுது திரும்பி ஊருக்கு செல்ல இருக்கிறீர்கள் என்று எங்களிடத்தில் உணர்வுடனும், பரிவுடனும் கேட்டறிந்தார். நலமுடன் ஊர் திரும்பவதற்கு வாழ்த்தினார்.
நிச்சயம் கேரளம் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு உதவும் என்கிற நம்பிக்கையோடு தமிழகம் திரும்புகிறோம்.
தமிழக முதலமைச்சர் உடனடியாக கேரள முதலமைச்சரோடு தொடர்பு கொண்டு ஆதரவு கோரினால் நிச்சயம் கர்நாடகாவின் துரோகம் தடுத்து நிறுத்தப்படும் என்றார்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது ஆட்சி காலத்தில் கேரள முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து முல்லைப் பெரியாறு பிரச்சனை தவிர்த்து,மற்ற நீராதார பிரச்சனைகளுக்கு இரு அரசுகளும் பேசி சுமூக தீர்வுகாண வேண்டும் அதற்காக இருமாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டு இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.அதனை பின்பற்றி காவிரி பிரச்சினையிலும் தமிழகம்-கேரளம் இடையே நல்ல அணுகு முறையை தொடர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன்,தஞ்சாவூர் மாநகர தலைவர் பழனியப்பன், உயர்மட்டக்குழு உறுப்பினர் சுதா தர்மலிங்கம்,மதுரை மாவட்ட செயலாளர் மேலூர் அருண்,குமரி மாவட்ட செயலாளர்
வின்ஸ்ஆண்டோ, நெல்லை மண்டல தலைவர் புளியரை செல்லதுரைப உள்ளிட்ட நிர்வாகி உடன் இருந்தனர்.