Sat. Nov 23rd, 2024

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.

சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில், அரசியல் லாபத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

1983-ஆம் ஆண்டின் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக தமிழக அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டது.

அனைத்து வழக்குகளும் நீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது..அப்போது, வன்னியர்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், புதிய உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனங்கள் நடைபெற்று வருவதால் அதை தடுக்கும் வகையில் உள்ள ஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அரசுத் தரப்பில் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது..அதில், 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டால் பிற சாதியினருக்கு பாதிப்பில்லை. அதனால் உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டிய அவசியம் இல்லை என வாதிடப்பட்டது.

இடைக்கால கோரிக்கை மீதான வாதங்களை இரு தரப்பும் முன்வைத்த நிலையில், இறுதி விசாரணைக்கான தேதி குறித்து ஆகஸ்ட் 25 முடிவுசெய்வதாக தெரிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது, வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது, இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

மேலும் 10.5% உள்ஒதுக்கீட்டின் கீழ் நியமனங்கள் மேற்கொள்ள தடைவிதிக்க மறுத்து விட்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 14-க்கு ஒத்திவைத்துள்ளது.