Mon. Nov 25th, 2024

மதுரை ஆதீன மடத்தில் எளிமையாக நடந்த விழாவில் 293-வது ஆதீனமாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றுக் கொண்டார்.

மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் பீடாதிபதியாக கடந்த 46 ஆண்டுகளாக பொறுப்பிலிருந்த அருணகிரிநாதர் கடந்த 13-ந் தேதி மரணம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து மடத்தின் இளைய ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வசம் அனைத்து பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில் அருணகிரிநாதர் இறந்து 10 நாட்களுக்கு பிறகு புதிய ஆதீனமாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி இன்று (23-ந் தேதி) பதவியேற்றார்.

முன்னதாக மறைந்த அருணகிரிநாதருக்கு குரு பூஜை நடைபெற்றது. எளிமையாக நடந்த புதிய ஆதீனம் பதவி ஏற்பு விழாவில் தருமபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், கோவை ஆதீனம் மற்றும் ஆன்மீக பெரியவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து பக்தர்கள் புதிய ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றனர்.

பின்னர் 293 வது ஆதீனம், மரபுபடி மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு விஜயம் செய்து சொக்கநாதர் மற்றும் மீனாட்சியம்மன் உள்ளிட்ட சுவாமிகளை ஆராதனை செய்தார்.