வரன்முறைப்படுத்தப்படாத அரசு ஊழியர்களுக்கு இடையில் எந்த பாரபட்சமும் காட்டக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 180 நாட்களிலிருந்து 270 நாட்களாக அதிகரித்து, 2016ஆம் ஆண்டு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை பிறப்பித்தது.
இந்த சலுகை, பணி வரன்முறைப்படுத்தப்படாத, தற்காலிக பணியாளர்களுக்கும் நீட்டித்து 2020ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த அரசாணைகள் அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில், மாநிலத்தில் பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், பணி வரன்முறைபடுத்தப்படாத, தற்காலிக பெண் பணியாளர்கள், மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரிய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
பணிவரன்முறைப்படுத்தப்படாத, தற்காலிக பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், இதுதொடர்பான அரசாணையை முறையாக அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு, மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பணி வரன்முறைப்படுத்தப்பட்ட, வரன்முறைப்படுத்தப்படாத அரசு ஊழியர்களுக்கு இடையில் எந்த பாரபட்சமும் காட்டக் கூடாது என அறிவுறுத்தி, ஒரே மாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது.