திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் நாள்தோறும் பயன்படுத்தப்படும் நிலக்கரி அளவு, அதன் கையிருப்பு குறித்த அறிக்கையை அனல் மின் நிலைய அதிகாரிகள் மின்வாரிய தலைமைக்கு அனுப்புவது வழக்கம் அதன்படி கடந்த ஐந்தாம் தேதி அனுப்பிய அறிக்கையில் 12 நாட்களுக்கு தேவையான 3.68 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பில் இருப்பதாக ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி மாயமாகிவிட்டதாக அதிர்ச்சித் தகவல் அடங்கிய அறிக்கை அனுப்பப்பட்டது.
மேலும், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து தரமற்ற நிலக்கரி கொள்முதல் செய்யப்படுவது தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் இன்று வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்
அப்போது. நிலக்கரி மாயமானது குறித்தும் அதன் தரம் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆவணப் பதிவில் நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி மயமாகி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த காலத்தில் இதனால் ஒரு லட்சத்தி 59 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்காக ஆண்டுக்கு 17 கோடி ரூபாய் வரை மின் வாரியம் வட்டி செலுத்தி வருகிறது.
இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாதது தற்போதைய நிலைக்கு காரணம்.
பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக கடந்த காலங்களில் இரண்டு லட்ச ரூபாய் வரை அதிகாரிகளிடம் பணம் பெறப்பட்டிருக்கிறது.
தற்போது அத்தகைய நிலை இல்லை. கொரோனா பேரிடரால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டுதோறும் அவர்களிடமிருந்து மின்வாரியம் பெற்றுவந்த டெபாசிட் தொகை கூட தற்போது வசூலிக்கப்படவில்லை.
மின் கட்டண உயர்வு குறித்து. முதலமைச்சர் அதிகாரிகள் மட்டத்தில் முடிவெடுக்க வேண்டிய விஷயம். அது குறித்து தன்னிச்சையாக எதுவும் கூற முடியாது.
கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதாக ஆதாரத்துடன் புகார் அளித்தாள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.