Sat. Nov 23rd, 2024

சென்னை புளியந்தோப்பு கே.பி.பூங்கா பகுதியில், தரமற்ற முறையில் குடிசைமாற்று வாரிய வீடுகள் கட்டப்பட்ட விவகாரத்தில், உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முந்தைய அதிமுக ஆட்சி முறைகேடு

சென்னை புளியந்தோப்பு கே.பி.பூங்கா அருகே விளிம்பு நிலை மக்களுக்காக குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2019, 2020 ஆகிய இரண்டு ஆண்டு காலத்தில் கட்டப்பட்ட இந்த குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்டி முடித்து, திறந்து வைத்து விட வேண்டும் என்ற முந்தைய அதிமுக ஆட்சியாளர்களின் அழுத்தத்தின் காரணமாக, கட்டுமானப் பணிகள் விறுவிறுவென நடைபெற்றன. கான்கீரிட் தளம் உள்ளிட்டவற்றின் ஸ்திரத்தன்மை பற்றி துளியும் கவலைப்படாமல் கட்டுமானப் பணியில் வேகம் காட்டியதால், கட்டடத்தின் எந்த பகுதியில் கை பட்டாலும், சிமென்ட் மேல் பூச்சு, பொடி போல கொட்டுகிறது. படிக்கட்டுகளில் கால் வைத்தாலே சிதைந்து சிதிலமடைந்துப் போகின்றன. கட்டுமானப் பணியில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததையடுத்து, சட்டப்பேரவையில் இந்த விவகாரம் நேற்று எதிரொலித்தது.

சட்டப்பேரவையில் எதிரொலிப்பு…

திமுக சட்டமன்ற உறுப்பினர் பதந்தாமன் (எழும்பூர் தொகுதி) இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானப்பணியில் நடைபெற்ற முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவற்றை புட்டுபுட்டு வைத்தார். இதனைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், கே.பி.பூங்கா அருகே கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கட்டுமானப் பணியின் தரத்தை அறிந்து கொளள் அமைச்சர் பி.கே.சேகர் பாபு மற்றும் துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். கட்டுமானத்தின் உறுதிதன்மை குறித்து இந்திய தொழில் நுட்ப கழகத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம். அந்த அறிக்கையின் அடிப்படையில் ஒப்பந்ததாரர், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும், இது ஏழை மக்ககளுக்கான திட்டம். இப்படிபட்ட திட்டத்திலும் ஊழல் செய்திருப்பது உண்மையானால், அதற்கு காரணமானவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிப்பட அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.

குடிசை மாற்று வாரியம் உத்தரவு!


இந்த நிலையில், தரமற்ற முறையில் நடைபெற்ற கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தாமல் அனுமதி வழங்கிய குடிசை மாற்று வாரியத்துறையைச் சேர்ந்த உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அடுத்தடுத்து கட்டுமான ஒப்பந்ததாரர், அவருக்கு ஒப்பந்தத்தை ஒதுக்கீடு செய்த துறை அமைச்சர் என் அனைவர் மீதும் நடவடிக்கை பாயும் என தமிழக அரசின் உயரதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.