வருமானத்திற்கு அதிமாக சொத்து குவித்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் வாய்தா மேல் வாய்தா கேட்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுக அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தாக, ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாக வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ராஜேந்திர பாலாஜி தரப்பு வாதத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கூடாது என்றும் உள்நோக்கத்துடனேயே பிழைகள் கொண்ட மனுவை ராஜேந்திர பாலாஜி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகவும் வாதம் புரிந்தார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கில் மேற்கொண்டு வாய்தா கேட்கக்கூடாது எனவும் கண்டிப்புடன் நீதிபதி கூறினார்.
உச்சநீதிமன்றம் உரிய காலத்தில் மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுக்காவிட்டால், வரும் செப்டம்பர் 1 ஆம் தேதியன்று சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.
பின்னர் அடுத்தக்கட்ட விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு நீதிபதி நிர்மல்குமார் ஒத்திவைத்தார்.