Sat. Nov 23rd, 2024


ஆளுநரின் சுதந்திர விழா தேநீர் விருந்தின் சுவாரஸ்யங்கள்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த மே 7 ஆம் தேதி தமிழ்நாட்டில் அரியணையில் அமர்ந்த நிமிடத்தில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதாக பல்வேறு தரப்பினராலும் கூறப்பட்ட கருத்துகள், வதந்தி அல்ல, உண்மைதான் என்பதை சுதந்திர தின விழாவை விட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தில் பட்டுவர்த்தமான வெளிப்பட்டதாக தொழில் அதிபர் ஒருவர் புளங்காகிதத்துடன் கூறினார்.
அவரின் பேச்சை ரசிக்க ஆரம்பித்தவுடன் மனிதர் மடைதிறந்த வெள்ளம் போல பேசினார்.

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், காவல்துறை உயரதிகாரிகள், அரசியல் தலைவர்கள், தொழில் முனைவோர்கள், சமூக ஆர்வலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் என பலதரப்பினருக்கும் அன்றைய தினம் இரவு தேநீர் வழங்குவது காலம் காலமாக மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு உண்டு.


அந்தவகையில் நேற்றிரவு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து களை கட்டியது. கடந்த நான்காண்டுகளில் இல்லாத வகையில், புதுவிதமான எழுச்சி காணப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் உற்சாகத்துடனேயே காணப்பட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்களிடம் உளப்பூர்வமாகவே பேசினார். அதிலும் குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது புதல்வரும் சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினிடம் வாஞ்சையுடன் ஆளுநர் நலம் விசாரித்து பேசியது, தேநீர் விருந்தில் கலந்து கொண்ட அத்தனை வி.வி.ஐ.பி.க்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதைவிட கூடுதல் சிறப்பாக, முன் எப்போதும் இல்லாத வகையில் நாட்டிய நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரபல ஷோபனாவின் பரத நாட்டியம் நிகழ்வும் பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. கடந்த சில ஆண்டுகளாக வெறும் சம்பிரதாய முறையில் மட்டுமே நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்வுக்கு முற்றிலும் மாறுபட்டதாக நேற்றைய தேநீர் நிகழ்வு அமைந்திருந்ததுதான் கூடுதல் ஆச்சரியம்..


நாட்டியத்தின் நிறைவில் சமஸ்கிருத பாடலும் ஒளிப்பரப்பட்டு, அதை முதல்வர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர் பெருமக்களும் ரசித்து பார்க்கும் வகையில் செய்துவிட்டதில்தான் ஆளுநரின் உள்ளுணர்வு வெளிப்பட்டது என்றால் அந்த தொழில் அதிபர்.
சில நிமிட மௌனத்திற்குப் பிறகு மீண்டும் அவரே தொடர்ந்து பேசினார்.
நேற்றைய தேநீர் விருந்தின் போது ஆளுநரின் ஒவ்வொரு செயலும், திமுக அரசுக்கு எதிரான அல்லது முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான பாசமற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக அமையவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினை, திமுக அரசை குளிர்விக்க வேண்டும் என்பதில் ஆளுநர் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஆளுநர் மாளிகையில் வழங்கிய தேநீர் விருந்து நிகழ்வுகள் அமைந்திருந்தன.


முதல்வர் மு.க.ஸ்டாலின் மனதில் ஆழமாக இடம் பிடிக்க வேண்டும் என்ற பாதையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பயணிக்கிறார் என்ற சந்தேகம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக.வுக்கு எழுந்துவிட்டதோ என்னவோ, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் நிகழ்வை அதிமுக ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டது. அவர்களின் புறக்கணிப்பிலும் நியாயம் இருப்பதாகதான் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆளுநராக தமிழகம் வந்தவுடன், அதிமுக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் ஆளுநர் புரோகித் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.

அதை தடுக்க முடியாமல் அப்போதைய அதிமுக அரசு தடுமாறியதுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கடும் நெருக்கடிக்குள்ளானார். ஆனால், அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த திமுக, ஆளுநரின் ஆய்வுப் பயணம், மாநில சுயாட்சிக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கை என கண்டனம் தெரிவித்ததுடன், ஆளுநருக்கு எதிராக ஒன்றிரண்டு மாவட்டங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டது. அப்போது, திமுக.வினரை கைது செய்து சிறையில் அடைந்தது அதிமுக அரசு.

இப்படி, திமுக மீது வெறுப்பு பார்வையை காட்டி வந்த ஆளுநர் புரோகித், கால சுழற்றியில் திமுக அரசு மீதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும் அளவுகடந்த பரிவு காட்டும் வகையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதுதான் சந்தேகமாக சிலர் பார்க்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தவுடன், ஆளுநர் புரோகித் மாற்றப்படுவார் என்ற பேச்சு பலமாக எழுந்தது. ஆனால், சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டதற்குப் பிறகு ஆளுநர் மாற்றம் என்ற பேச்சே எழவில்லை.

இதற்கு இடையில் என்ன மாற்றங்கள் நடந்ததோ தெரியவில்லை. இப்படி அரசியல் ரீதியிலான சில அம்சங்கள், சத்தமில்லாமல் விவாதிக்கப்பட்டு வரும் நேரத்தில் தமிழர் பண்பாட்டை பிற மாநிலத்தவர்கள் எந்தளவுக்கு மதிக்கிறார்கள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகவும் ஒரு அம்சம் தேநீர் விருந்தில் நடைபெற்றது. அதுதான் எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய ஆனந்தத்தை ஏற்படுத்தியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழரின் பாரம்பரியபடி வேட்டி சட்டை அணிந்து வந்த போதும் ஒன்றிரண்டு அமைச்சர்கள் பேண்ட் அணிந்துதான் விருந்தில் கலந்துகொண்டார்கள். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, தமிழர் பாரம்பரியத்திற்கு, பண்பாட்டிற்கு மதிப்பளிக்கும் வகையில் வெள்ளைச் சட்டை, வேட்டி அணிந்து வந்து, தமிழர்கள் எல்லாம் வெட்கப்படும் அளவுக்கு செய்துவிட்டார்.

தமிழர் கலாச்சாரத்தை தமிழர்களான நாம் காப்பாற்றுகிறோமோ இல்லையோ, பிற மாநிலத்தவர்கள் மனமுவந்து தமிழர் பாரம்பரியத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றவர், இந்த செய்திக்கு இடைசொறுகல் போலதான். இருந்தாலும் சொல்லாமல் தவிர்ப்பது நல்லதல்ல. இதற்கு முன்பு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்வு, எந்த தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது இல்லை. ஆனால், இந்த முறை ஆளும்கட்சியின் கலைஞர் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நினைத்திருக்கலாம் போல என்றவாறே நமட்டுச் சிரிப்புடன் விடைபெற்றார் தொழில் அதிபர்.