இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை…….
கடந்த 2011ம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசின் கெயில் நிறுவனம், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள மதிப்புமிக்க விவசாய நிலங்கள் வழியாக எரிகாற்று குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது.
இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் திட்டத்தை எதிர்க்கவில்லை. சாலையோரமாக எரிவாயு குழாய்களைப் பதித்து, விவசாய நிலங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மாபெரும் இயக்கத்தை நடத்தி வந்தார்கள்.
போராடிய விவசாயிகளை ஜெயலலிதா அம்மையார் அவருடைய ஆட்சியில் நியாயமாக மிக கடுமையாக அடக்கி ஒடுக்கினார்.
கடந்த 14.02.2013 அன்று ஈரோடு மாவட்டம் – சென்னிமலை அருகே எரிகாற்று குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் நான் நேரடியாக இறங்கி போராடி திட்டப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உறுதுணையாக இருந்தேன்.
அதையடுத்து ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் #கணேசமூர்த்தி அவர்களுடைய வழிகாட்டுதலில் 17.02.2013 ஈரோடு ஏஇடி பள்ளியில் மிகப் பெரிய கோரிக்கை மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கெடுத்துக் கொண்டன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தற்போதைய வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.#முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்ற வேண்டும் என ஆதரவைத் தெரிவித்தார்.
அதன் பின்பு அனைத்து அரசியல் கட்சிகள் ஆதரவோடு பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு, சேலத்தில் கெயில் நிறுவன திட்ட அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள்.
நடைபெற்ற தொடர் போராட்டங்களாலும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்திற்கு சென்றதாலும் சென்னை உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தலைமைச் செயலாளர் தலைமையில் கருத்து கேட்க வேண்டும் என உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் 06.03.2013 முதல் 08.03.2013 வரை சென்னையில் 7 மாவட்ட விவசாயிகளிடம் தலைமைச் செயலாளர் கருத்து கேட்டார்.
25.03.2013 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இந்த பிரச்சினை குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அன்றைய முதல்வர் #ஜெயலலிதா அவர்கள், கெயில் திட்டம் சாலையோரமாக மட்டுமே அமைக்கப்படும், விவசாய நிலங்கள் வழியாக அமைப்பதற்கு அனுமதி கிடையாது. விவசாயிகளின் வாழ்வாதாரமே மிக முக்கியம் என அரசின் முடிவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தரிவித்தார்.
கெயில் நிறுவனம் நீதிமன்றத்திற்குச் சென்று, திட்டப் பணிகளைச் செயல்படுத்துவதற்கான தீர்ப்புகளை பெற்றது.
ஆனாலும் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்தவரை நிறுவனத்திற்கு எந்த வித ஒத்துழைப்பும் வழங்கவில்லை. அவரது மறைவிற்குப் பின்பு அவரது வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி கடந்த 14.2.2020 அன்று மேற்படி திட்டத்தை செயல்படுத்துவதற்கு கெயில் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி, ஏழு மாவட்ட விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்தார்.
அதன் பின்பு 11.3.2020 அன்று அன்றைய தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திட்டத்தை செயல்படுத்துவதற்கு காவல்துறை, வருவாய்த்துறை ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பரப்புரையிலும், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும், பரப்புரையிலும் , 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலும், பரப்புரைகளிலும் இத்திட்டம் சாலையோரமாக நிறைவேற்ற ஆவன செய்யப்படும் எனத் தெளிவுபட தெரிவிக்கப்பட்டது. அது அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட அனுமதியை வைத்துக்கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு பகுதியில் கெயில் நிறுவனம் திட்டப் பணிகளை செயல்படுத்த தொடங்கிய போது, பாதிக்கப்பட்ட விவசாயிகள் இணைந்து போராடி தடுத்து நிறுத்தினார்கள்.
தற்போது திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெற்று, தளபதி மு.க.#ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை, எட்டு வழி சாலை திட்டம் ரத்து, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி ரத்து என விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது
இந்நிலையில் 7 மாவட்ட உழவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முந்தைய அரசு கொடுத்த அனுமதி உத்தரவை ரத்து செய்து, கெயில் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்றுவதற்கு ஆவன செய்ய வேண்டும். இன்றுவரை போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.