பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிறகுதான், நேர்மை எனும் ஆயுதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்திருக்கிறார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகே, திமுக எம்.பி.க்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரை நேர்மையின் பாதையில் திருப்பும் பாடத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் போதித்து வந்திருக்கிறார் அக்கட்சியின் தலைவரும் இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் என்ற சுவாரஸ்யமான தகவல் நல்லரசுக்கு கிடைக்கவே வியந்து போனோம். விவரமான அண்ணா அறிவாலய நிர்வாகிகளிடம் பேசினோம். மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் தகவல், நல்லரசுக்கும் கிடைத்துவிட்டதா? என்ற புன்சிரிப்புடனேயே வாட்ஸ் அப் வழியாக வீடியோ காலில் உற்சாகமாக பேசினார் அண்ணா அறிவாலய முக்கிய நிர்வாகி. அவரின் குரலே, முதல்வர் மு.க.ஸ்டாலினின் குரல் போலவே ஒலித்தது.
2019 ம் ஆண்டு எம்.பி. தேர்தலின்போது, பாஜக.வை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார், அப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அவரின் வழியிலேயே இரண்டாம் கட்ட திமுக தலைவர்கள் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளும் மத்திய பாஜக அரசை வெளுத்து வாங்கினாலும், முதல்முறையாக தேர்தல் களத்தை கண்ட, இன்றைய சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வும் அன்றைய திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் சகட்டுமேனிக்கு பாஜக.வையும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு விழாவின் போது காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்த போதே பிரதமர் மோடியை சாடிஸ்ட் என்று கடுமையாக விமர்சனம் செய்தார், அப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிப் பெற்ற பிறகும், கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட போதும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிரான மனநிலையை திமுக மாற்றிக் கொள்ளவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அலங்கோலமான அதிமுக ஆட்சியை வெளுத்து வாங்க, அவரது புதல்வரான இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மத்திய பாஜக அரசையும், அதனை வழிநடத்தி வரும் பிரதமர் மோடியையும் டார்கெட் செய்து நையாண்டியாகவும், கிண்டலாகவும் மாநிலம் முழுவதும் கிழித்து தொங்கவிட்டார்.
அதைவிட, பாஜக முன்னாள் மத்திய அமைச்சர்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் கொளுத்தி போட்டது, டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இப்படி தந்தையும், தனையனும் ஒருசேர மத்திய பாஜக அரசுக்கு எதிரான மனநிலையில் உறுதியாக இருந்து வந்த நேரத்தில்தான், தமிழக பாஜக தரப்பில் இருந்து அதிக சத்தமின்றி ஒரு குரல், நீரோடையில் கல் எறிந்ததைப் போன்ற சலசலப்பை ஏற்படுத்தியது. மத்திய பாஜக அரசை எதிர்க்கும் திமுக.வும், அதன் எம்.பி.க்களும், மத்திய அரசின் நேரடிப் பார்வையில் நடத்தப்படுகிற கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு வழங்கப்படும் சலுகைகளை விற்று பணம் பார்க்கிறார்கள் என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டது.
அதனை திமுக தரப்பு ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட, அதற்கு முன்பாகவே, திமுக எம்.பி.க்களுக்கு, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கறாராக ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் கேந்திரிய பள்ளியில், மாணவர்கள் சேர்க்கைக்காக திமுக எம்.பி.க்கள் இனிமேல் நேரடியாக பரிந்துரை செய்யக்கூடாது. அவரவர் தொகுதிக்குப்பட்ட மாணவர்களை பரிந்துரைக்கும் முன்பாக, அதன் விவரத்தை திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரின் பெயர்களை திமுக தலைமை விசாரித்து, உண்மையாகவே தகுதியுள்ள மாணவர்களுக்குதான் பரிந்துரை வழங்கப்பட்டிருக்கிறதா? என்று அண்ணா அறிவாலய நிர்வாகிகள் விசாரிப்பார்கள்.
மாணவர்களின் தகுதி, அவர்களின் குடும்ப பின்னணி ஆகியவற்றை அறிந்த பிறகே, எம்.பி.க்களின் பரிந்துரைக்கு திமுக தலைமை ஒப்புதல் கொடுக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்டிரிக்ட்டாக உத்தரவிட்டுவிட்டார். அவரின் உத்தரவைக் கேட்டு ஒரு சில எம்.பி.க்கள் கலக்கமடைந்தாலும் கூட தற்போது இயல்பான மனநிலைக்கு வந்துவிட்டார்கள் என்றார் அண்ணா அறிவாலய திமுக நிர்வாகி.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் திடீரென்று கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கை விவகாரத்தில் ஏன் தலையிட்டார்? நல்லரசுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்க முன் வந்தார் திமுக எம்.பி. ஒருவர்.
ஹிந்தி எதிர்ப்பிலும், இருமொழிக் கொள்கையிலும் திமுக உறுதியாக இருந்து வருகிறது. ஆனால், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஹிந்தி கட்டாயம். இந்த பள்ளியில் மத்திய அரசு, அதன் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களின் வாரிசுகளுக்குதான் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கும். அந்த பள்ளிகள் உள்ள தொகுதியைச் சேர்ந்த எம்.பி.யின் பரிந்துரையின் பேரில் பத்து மாணவர்களை சேர்த்துக் கொள்வார்கள். அந்த பள்ளியின் கல்வித்தரம் நன்றாக இருக்கிறது என்று நம்பும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர், எம்.பி.க்களின் பரிந்துரை கடிதங்களை பெறுவதற்காக கட்சிக்காரர்கள் மூலமாக அணுகுவார்கள். அப்படிபட்ட நேரங்களில் எந்த கட்சி நிர்வாகிகளாக இருந்தாலும் லஞ்சமாக, அதிகபட்சம் 2 லட்சம் ரூபாயை பெற்றோர்களிடம் பெற்றுக் கொண்டே எம்.பி.க்களின் பரிந்துரை கடிதங்களை வாங்கி தருவார்கள்.
இப்படிபட்ட செயல்களில் திமுக எம்.பி.க்கள் பெரும்பாலும் ஈடுபடுவதில்லை. ஒன்றிரண்டு எம்.பி.க்கள், தங்களுக்கு விசுவாசமாக இருக்கும் தொண்டர்களுக்கு ஏதாவது பண உதவி கிடைக்கிறதே என்பதற்காக, இதுபோன்ற காரியங்களை செய்வார்கள். இப்படிபட்டவர்களைப் பற்றிதான், கேந்திரிய பள்ளி சீட்டை விற்று பணம் பார்க்கிறார்கள் என்று பாஜக.வினர் விமர்சனம் செய்தார்கள். இப்படி எந்த சூழ்நிலைகளிலும் திமுக.வுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக் கூடாது என்று முன்கூட்டியே யூகித்துதான், திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கறாராக திமுக எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டு விட்டார்.
அதனால், கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளுக்கான மாணவர் சேர்க்கையும், எம்.பி.க்களின் பரிந்துரையும் திமுக தலைமையின் நேரடி பார்வையிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எந்தவொரு திமுக எம்.பி.யும் தனிப்பட்ட முறையில் கேந்திரிய பள்ளிக்கு மாணவர் சேர்க்கைக்கான பரிந்துரை கடிதங்களை திமுக தலைமையின் ஒப்புதலின்றி கொடுத்து விட முடியாது. இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சகோதரியும் தூத்துக்குடி திமுக எம்.பி.யுமான கனிமொழிக்கும் விதிவிலக்கு இல்லை என்பதுதான் அதிர்ச்சிக்குரிய அம்சம் என எந்த சலனமும் இன்றி கூறினார் திமுக எம்.பி.
கேட்பதற்கு நல்லாதான் இருக்கு….