விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி., முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் விடுபட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர், சீர்மரப்பினர் சாதிகளை மத்திய அரசின் இடஒதுக்கீட்டை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி வழங்கிய கோரிக்கை மனுவின் விவரம் இதோ….
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரப்பினர் சாதிகளின் பட்டியலில் பெரும்பாலானவை மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோ பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆனால், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சில சாதிகளும், சீரமரபினர் பட்டியலில் உள்ள ஒரு சாதியும், ஒன்றிய அரசின் பட்டியலில் இடம் பெறவில்லை.
சேர்வை, அன்சார், ஆயிரவைசியர், சவுத்ரி, கள்ளர் குல தொண்டமான், கன்னடியநாயுடு, கற்பூர செட்டியார், காசுக்கார செட்டியார், கொங்கு வைஷ்ணவா, குடிகார வெள்ளாளர், குக வெள்ளாளர், மூன்று மண்டல 84 ஊர் சோழிய வெள்ளாளர், ஊற்று வளநாட்டு வேளாளர், ஓபிஎஸ் வெள்ளாளர், பய்யூர் கோட்ட வேளாளர், கத்திகாரர், கன்னியாகுமரி மாவட்டம் பொடிகார வேளாளர், பூலுவ கவுண்டர், ரெட்டி (கஞ்சம்) ஷேக், சுந்தரம் செட்டி, சையத், உக்கிரகுல சத்திரிய நாயக்கர், உரிக்கார நாயக்கர், வேளார் ஆகிய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளும், சீர் மரபினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளில் சேர்வை (திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்) என்னும் சாதியும் ஒன்றிய அரசின் ஒபிசி பட்டியலில் இடம் பெறவில்லை.
இதனால், ஒன்றிய அரசு நடத்தி வரும் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் போது அவர்கள் பொதுப் பட்டியலிலேயே வைத்து கருதப்படுகின்றனர். அதனால், அவர்கள் தமது இடஒதுக்கீட்டு உரிமையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பட்டியலில் உள்ள சாதிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த 26 சாதிகளின் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்கும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு தொல் திருமாவளவன் எம்.பி. தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.