Mon. Nov 25th, 2024

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்கள், போன் ஒட்டு கேட்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மக்களவை, மாநிலங்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால், கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்ற இரண்டு அவைகளின் அலுவல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல, மாநிலங்களவை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போன் ஒட்டுக் கேட்பு, வேளாண் சட்டங்கள் ஆகியவை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட அமளியால் நண்பகலிலேயே இரண்டு முறை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. திமுக சார்பிலும் நீட் தேர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவும் கலந்துகொண்டு, கருத்துகளை எடுத்துரைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள முக்கிய இரண்டு அம்சங்களான போன் ஒட்டுகேட்பு மற்றும் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த கேள்விநேரத்தை ஒத்திவைத்துவிட்டு அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், இந்த இரண்டு விவகாரங்கள் குறித்தும் அவையில் விவாதம் நடத்த மத்திய பாஜக அரசு பயப்படுகிறது. இரண்டு விவகாரங்களிலும் மத்திய அரசு பக்கம் நியாயம் இருந்தால், விவாதம் நடத்த ஏன் பயப்பட வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

மக்களவை, மாநிலங்களவையில் அலுவல்கள் பாதிக்கக் கூடாது என்று தான் எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன. ஆனால், மத்திய பாஜக அரசின் பிடிவாதத்திலேயே நாடாளுமன்றத்தின் அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன என்றும் விளக்கம் அளித்துள்ளார் மல்லிகார்ஜுன கார்கே.