தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல்கள் முழுமையாக, முறையாக நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் கந்தனேரி பள்ளிகொண்டா டோல்கேட் அருகே உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இருந்து கோரிக்கைகளை பெறும் நிகழ்வு நடைபெற்றது. அவர்களின் கோரிக்கைகளுக்கு ஒவவொன்றாக பதிலளித்து மு.க. ஸ்டாலின் பேசினார்.
தகவல் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறிய அவர், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி கடன்கள், விவசாய கடன்கள், 5 சவரன் அளவுக்கு வைக்கப்பட்ட தங்க நகைக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.
மக்கள் கோரிக்கைகளை, தன் முதுகில் ஏற்றி இருக்கிறார்கள் என்றும், அதை 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவது நிச்சயம் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார்.
இதற்காக, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் தனி இலாகா ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்த அவர், கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், மக்கள் தன்னை கேள்விகேட்கலாம் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.