தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்……
பத்தாண்டுகளுக்குப் பிறகு அரியணை ஏறியுள்ள திமுக அரசு இன்றோடு 78 வது நாளை எட்டியுள்ள நிலையில், வெகு விரைவாக 100 வது நாளை வெற்றி விழாவாக கொண்டாடவுள்ளது. இந்தியாவிலேயே சிறந்த முதல்வராகவும் முதலிடத்தையும் மு.க.ஸ்டாலின் ஒருசேர பெற்றிருப்பதை திமுக.வினர் மட்டுமல்ல, மதவாதத்திற்கு எதிரான சிந்தனைப் போக்கு கொண்ட பகுத்தறிவாளர்களை உள்ளடக்கிய பெருங் கூட்டமும் மிகுந்த பூரிப்புடனேயே முதல்வர் மு.க.ஸ்டாலினை நெஞ்சம் நெகிழ வாழ்த்திக் கொண்டிருக்கிறது.


ஐஏஎஸ் என்ற அந்தஸ்தோடு மட்டுமே ஆட்சியாளராக அடையாளப்படுத்துவதை கடந்து, சிறந்த எழுத்தாளர், சொற்பொழிவாளர், முற்போக்கு சிந்தனையாளர் என்ற பன்முகத்தன்மைக் கொண்டவரும், மனிதநேய பற்றாளருமான வெ.இறையன்பு ஐஏஎஸ்.ஸை தலைமைச் செயலாளராக நியமித்து, தனது ஆட்சி நேர்மையின் சின்னமாக இருக்கும் என்பதை உணர்த்தியதாகட்டும், அவரைப் போல எழுத்தாளராகவும், சிறந்த சிந்தனை திறன் கொண்டவராகவும் ஆட்சிப் பணியை செம்மையாக செயல்படுத்தி வரும் உதயச்சந்திரன் ஐஏஎஸ் தலைமையிலான முதல் அமைச்சரின் தனிச் செயலாளர்கள் குழுவாகட்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் மேம்பாடும் ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதற்காக பாரத வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட ஐவர் குழுவினர் நியமனமாகட்டும், எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் திட்டங்கள் வகுத்து செயல்படுத்த திட்டக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட குழுவினரின் நியமனமாகட்டும், கடந்த 78 நாட்களில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு நிமிட செயல்பாடுகளும், உலகத்தின் பார்வையை தமிழகத்தின் பக்கம் திருப்பியிருக்கிறது என்றால், அது மிகையில்லை.


தமிழ்நாடு அரசு நேர்மையான வழியில்தான் செல்லும் என்பதை தனது செயல்பாடுகளால் உணர்த்திவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமைப் பண்புக்கு, ஒட்டுமொத்த தமிழகமே தலைவணங்கிக் கொண்டிருக்கிறது என்ற சந்தோஷமான தகவல், பல்வேறு தரப்பினரிடமும் உற்சாகமாக எழுந்துக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், பத்தாண்டு காலம் எதிர்க்கட்சியாக இருந்து போராட்டங்களையும், துயரங்களையும் சந்தித்த விரக்தி ஒருபக்கம் இருந்தாலும், இரண்டு தேர்தல்களில் பறிபோன வாய்ப்பை மூன்றாவது தேர்தலிலும் விட்டு விடக் கூடாது என்று வெறித்தனமாக உழைத்த அடிமட்ட திமுக தொண்டர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த 78 நாள் ஆட்சியை கண்டு முழுமையான சந்தோஷத்தில் இல்லை என்கிற தகவல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த ஒரு மாதமாக வந்துக் கொண்டே இருக்கிறது.


இன்றைக்கு சரியாகிவிடும், நாளைக்கு சரியாகிவிடும் என்று நல்லரசுவும் நாட்களை கடத்தி வந்த போதும், திமுக அடிமட்ட தொண்டர்களின் அவலக்குரல் அதிகமாகிறதோ தவிர, குறைந்தபாடில்லை.
முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி காலத்து ஆட்சியையும், திமுக.வை வழிநடத்திய செயல்பாடுகளையும் ஒப்பிட்டு பேசும், அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளையே நல்லரசு நீண்ட யோசனைக்குப் பிறகு இங்கே பதிவு செய்கிறது.
கலைஞர் மு.கருணாநிதி தன் இறுதிமூச்சு வரை வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தை, ஆத்ம திருப்தி தரும் ஆலயமாக பார்க்கிறார்கள் திமுக.வின் உண்மையான தொண்டர்கள். ஆட்சியில் இருந்தபோதும், கட்சித் தலைவராக மட்டுமே இருந்த போதும், கோபாலபுரம் இல்லம், கொள்கைப் பாசறைப் போல, புத்துணர்ச்சி தரும் குற்றால அருவி போல, வீரம் தரும் விளைநிலமாக, கோபாலபுரம் இல்லத்தில் கால் வைக்கும் ஒவ்வொருவரும் அவரவர் மனவுணர்வுக்கு ஏற்ப, இனம்புரியாத உணர்வுகளுக்கு ஆட்பட்டு பிறப்பின் மகத்துவத்தை உணர்த்தவர்களாக ஊர் திரும்பினார்கள்.
அதுவும், கலைஞர் மு.கருணாநிதியின் தரிசனமும், தாயின் பரிசுத்தமான அன்பிற்கு இணையாக என்னய்யா என்ற ஒற்றை வார்த்தையையும் கேட்பதற்காக, கோ.சி. மணி, வீரபாண்டி ஆறுமுகம் போன்ற மறைந்த தலைவர்களும், தள்ளாடும் வயதிலும் கூட ஆற்காடு வீராசாமி,ஓய்வுப் பெற்ற அரசு அதிகாரிகள் ராஜமாணிக்கம், சண்முகநாதன் உள்ளிட்ட விசுவாசமிக்கவர்கள் கோபாலபுரம் இல்லத்திலேயே தவமிருந்திருக்கிறார்கள்.


இப்படி திமுக.வின் ஒவ்வொரு தொண்டரின் உதிரத்தோடும், உணர்வுகளோடும் கலந்து இருக்கும் கலைஞர் மு.கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், இன்றைக்கு களையிழந்து காட்சியளிப்பதை கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை. அந்த வழியாக பயணம் செய்கிற போது கோபாலபுரம் என்ற நினைவு மெல்ல எழுந்து மறைகிற போது, உடல் முழுவதும் சில்லிட்டுப் போகிறது என்கிறார்கள், கலைஞர் மு.கருணாநிதியின் அரசியல் சாதுரியத்தை நாள்தோறும் ரசிக்கும் வாய்ப்பு கிடைத்த முன்னணி நிர்வாகிகள்.
கலைஞர் மு.கருணாநிதியின் இல்லம் மீண்டும் கலகலப்பாக மாற வேண்டும் என்பதுதான் திமுக.வின் அடிமட்ட தொண்டர்களின் ஏக்கமாக இருக்கிறது. தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் உள்ள தொண்டர்கள் கூட, தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் செய்திகளில் கோபாலபுரம் என்ற வார்த்தை உச்சரிக்கப்பட்டால், ஒருநிமிடம் அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு மெய்மறந்த நிலையில் தொலைக்காட்சியை பார்க்க தொடங்கிவிடுகிறான்.


இப்படிபட்ட தொண்டர்களை கோடிகளில் கொண்டுள்ள திமுக.வில், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், வாரத்தில் ஒருநாள், இரண்டு வாரத்தில் ஒருநாள் என இன்றைக்கு 20 மணிநேரங்களுக்கு மேலாக உழைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாள்தோறும் உடல்சோர்ந்தே, தனது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்திற்கு திரும்புகிறார் என்ற போதிலும், கோபாலபுரம் இல்லத்திலும் திமுக.வின் முதல்வராக மு.க.ஸ்டாலின் அமர்ந்து, திமுக தொண்டர்களை, கலைஞர் மு.கருணாநிதி காலத்தில் வாழ்ந்த திமுக முன்னணி தலைவர்களோடு, நண்பர்களோடு அமர்ந்து ஒருமணி நேரம் இளைப்பாறினாலும் கூட, கிராமங்கள்தோறும் வாழ்ந்து கொண்டிருக்கும் திமுக தொண்டர்கள், தொலைக்காட்சி வாயிலாக அந்த நிகழ்வுகளைப் பார்த்து நிம்மதியடைவார்கள். புளாங்கிதமும் கொள்வார்கள்.


கோபாலபுரம் இல்லத்தில் இளைப்பாறும் நேரத்தில் கூட, திமுக.வின் தீவிர விசுவாசிகளுக்கு மகிழ்ச்சிக்குரியதாக ஆக்கும் வகையில் ஒரு திட்டத்தையும் செயல்படுத்தலாம் என்கிறார்கள் கலைஞர் மு.கருணாநிதியிடம் நிர்வாக ரீதியிலான ஆலோசனைகளை,அறிவுரைகளைப் பெற்ற முன்னணி தலைவர்கள்.
நேர்மையான ஆட்சிக்கு ஒழுக்கத்திலும், பண்பிலும், மனிதநேயத்திலும் தலைச்சிறந்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை நியமித்ததைப் போல, கடைக்கோடி திமுக தொண்டர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் பயன், பலன் நேர்மையான வழியில் கிடைக்கும் வகையில், கலைஞர் மு.கருணாநிதியோடு 24 மணிநேரமும் ஒட்டி உறவாடியாக முன்னாள் அரசு அதிகாரி ராஜமாணிக்கம், நெஞ்சம் நிறைந்த நண்பர் நாகநாதன், திமுக தொண்டர்களின் உணர்வுகளை ஒரு நொடியிலேயே புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட திமுக முன்னணி நிர்வாகிகளையும், கோபாலபுரம் இல்லம் தேடி வந்து மனக்குறைகளை கொட்டும் தொண்டர்களின் சின்ன சின்ன பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சன் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், திராவிட சிந்தாந்தத்தின் மீதான பற்றில் உறுதியாக இருக்கும் திமுக.வின் பிதாமகன் பேரறிஞர் அண்ணா காலத்திலேயே அரசியல் ஆளுமையாக திகழ்ந்த வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஜி.விசுவநாதன் போன்ற கலவையான ஒரு குழுமை நியமித்து, வாரம் ஒருநாள் தொண்டர்களை சந்தித்து குறைகளை கேட்பதற்கும், அந்த குழு வடிகட்டி தரும் நியாயமான கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுத்தால், திமுக தொண்டர்களின் மனபாரம் மட்டுமல்ல, மாநில அளவில், மாவட்ட அளவில், ஒன்றிய அளவில், திமுக.வுக்கு துரோகம் இழைக்கும் முன்னணி நிர்வாகிகளையும் கூட உடனுக்குடன் அடையாளம் கண்டு, துரிதமாக களையெடுக்க இதுவொரு சிறந்த ஏற்பாடாக இருக்கும்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வைக்கும் நியாயமான கோரிக்கைகள், உரிய முறையில் நிறைவேற்றப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், தெரிந்து கொள்ளவும் அரசு அதிகாரிகளையே நாட வேண்டியிருக்கிறது. அவர்களின் பணிச்சுமைக்கு இடையே, திமுக முன்னணி நிர்வாகிகளின் கோரிக்கைகளின் நிலை குறித்து, தொடர்புடைய துறையோடு தொடர்பு கொண்டு கருத்து கேட்டு செல்வதற்கு சிரமம் ஏற்படும்.
இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு வலதும் இடதுமாக இருந்த ராஜமாணிக்கம், சண்முகநாதன் ஆகியோரைப் போல, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இரண்டு அதிகாரிகள், திமுக.வினரோடு நெருங்கி பழகியவர்களாக இருந்தால், திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகத்தோடு கட்சிப் பணியாற்றுவார்கள் என்பதை தலைவர் மு.க.ஸ்டாலின் பரிசீலனைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே தங்களின் பிரதான நோக்கம் என்கிறார்கள் கலைஞரின் பாசறையில் அரசியல் பாடம் பயின்ற உடன்பிறப்புகள்..

ஆட்சி அதிகாரத்தோடு எள்ளளவும் சம்பந்தம் இல்லாமல் இப்படியொரு குழு நியமித்து, அந்தக் குழு நிர்வாகிகள் கோபாலபுரம் இல்லத்தில் கூடி கலந்துரையாட, செயல்பட அனுமதியளித்தால், கலைஞர் மு.கருணாநிதியோடு இரண்டற கலந்து வாழ்ந்தவர்கள், உடல்நலம் குன்றி இருந்தாலும், வயோதிகத்தில் தள்ளாடினாலும் கூட, கலைஞரின் கோபாலபுரம் இல்லமே, அங்கு நீங்கமற நிரம்பிக்கொண்டிருக்கும் கலைஞர் மு.கருணாநிதியின் மூச்சுக்காற்றே, அவர்களுக்கு அருமருந்தாக அமையும்…ஆனந்தத்தை தரும்..

இவையெல்லாம் நல்லரசுவின் கற்பனையல்ல. கடந்த பல நாட்களாக, திமுக முன்னணி நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் என ஒவ்வொருவரிடம் இருந்து தொலைபேசி மூலம் வந்த கருத்துகள்தான். அதை தொகுத்து இங்கு பதிவு செய்திருக்கிறோம்.

கோபாலபுரம் இல்லம் பற்றிய செய்தி ஜால்ரா இல்லை. அந்த அவசியம் நல்லரசுவுக்கு ஒருபோதும் ஏற்படாது. திமுக உணர்வாளர்களின் ஆதங்கத்திற்கு நல்லரசு வடிகாலாக மட்டுமே இன்றைக்கு மாறியிருக்கிறது.


தொடர்ந்து 5 ஆண்டு காலம் முதல்வர் மு. க. ஸ்டாலினும் திமுக அரசும் நல்லாட்சி தந்திடுவார்கள் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு வந்திருக்கிறது என்பது எந்தளவுக்கு உண்மையோ அந்தளவுக்கு திமுக கட்சிக்காரர்களிடம், தங்களுக்கு விடியலைத் தருமோ திமுக ஆட்சி என்ற சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் கலப்படம் இல்லாத உண்மையே….