சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதல்முறையாக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர். இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை இருவரும் கூட்டாக சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேக்கேதாட்டு அணை விவகாரம், தடுப்பூசி அதிகமாக வழங்குதல் உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரை அதிமுக தலைவர்கள் சந்திப்பதாக தகவல்கள் வெளியே பரப்பப்பட்டாலும், திரைமறைவில் சசிகலா விவகாரமே பிரதான இடம் பெற்றிருப்பதாக கூறுகிறார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள்.
இரட்டை தலைமைக்கு நெருக்கமான அதிமுக முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். பிரதமருடனான இன்றைய சந்திப்பின் பிரதான நோக்கத்தை ரத்தின சுருக்கமாக தெரிவித்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆகியோருடன் விரிவாக கலந்துரையாடினார். அப்போது, வி.கே.சசிகலாவையும், அ.ம.மு.க.வையும் அதிமுக கூட்டணியில் இணைத்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு ஓ.பி.எஸ்., உடன்பட்ட போதும், எடப்பாடி பழனிசாமி விடப்பிடியாக மறுப்பு தெரிவித்துவிட்டார். அவரின் பிடிவாதத்தால், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக.வுக்கு பாஜக.வுக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று மத்திய உளவுத்துறை, ஓ.பி.எஸ். தரப்பு மத்திய பாஜக அரசுக்கு தகவல் தெரிவித்துவிட்டது.
இதனையடுத்து, வி.கே.சசிகலா தொலைபேசி மூலம் அதிமுக தொண்டர்களிடம் தொடர்ச்சியாக பேசுவதும், அதன் பேரில் அதிமுக நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்குவது போன்ற தகவல்களும் மத்திய உளவுத்துறை மூலம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தொலைபேசி மூலம் தொண்டர்களிடம் வி.கே.சசிகலா பேச தொடங்கியதையடுத்து, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கொங்கு தலைவர்களுக்கு எதிரான மனப்போக்கில் உள்ள அதிமுக முன்னணி நிர்வாகிகள் ஓரணியில் திரள்கிறார்கள் என்பதும், அவர்கள் அனைவரும் ஓ.பி.எஸ். பின்னணியில் நின்றுக் கொண்டு வி.கே.சசிகலாவின் அணைத்து செயல்பாடுகளுக்கும் மறைமுகமாக ஆதரவு தந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் விரிவாக உள்துறை அமைச்சர் அமித்ஷதாவிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் வெற்றிப் பெற்ற நான்கு பாஜக எம்.எல்.ஏ.க்களும் அப்போதைய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தபோதும், வி.கே.சசிகலா விவகாரம் குறித்து பேசப்பட்டுள்ளது. அப்போது, தமிழக டீம், அதிமுக.வில் வி.கே.சசிகலாவை இணைப்பதுதான் அக்கட்சிக்கு பலம் சேர்க்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த அடிப்படையில், பாஜக மேலிடம், வி.கே.சசிகலாவின் ஒவ்வொரு மூவ்களையும் உண்ணிப்பாக கவனிக்க தொடங்கியது. இந்த நேரத்தில்தான் வி.கே.சசிகலா அடுத்த பாய்ச்சலுக்கு தயாரானார். அதிமுக.வை துவக்கிய மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுக.வின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் தொடர்புடைய மூத்த பத்திரிகையாளர் துரை கருணாவை அழைத்து, ஜெயா தொலைக்காட்சிக்காக பிரத்யேக பேட்டியளித்தார் வி.கே.சசிகலா.
இந்த விரிவான பேட்டியில், எம்.ஜி.ஆர். காலத்தில் அவரோடு கலந்துரையாடியது, கட்சி நடவடிக்கைகளில் தனக்கு இருந்த செல்வாக்கு ஆகியவற்றை எஸ்.டி.சோமசுந்தரம் போன்ற தலைவர்களின் நினைவுகளைப் பகிர்ந்து பேசியது, எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த தலைமைக் கழக நிர்வாகிகளையே மனமாற்றம் கொள்ள வைத்துவிட்டது. வி.கே.சசிகலாவை பேட்டி கண்ட மூத்த பத்திரிகையாளர் துரை கருணாவும், எம்.ஜி.ஆர். மன்றத்தில் பொறுப்பு வகித்தவர் என்பதும், அதிமுக துவக்க காலத்திலேயே அதிமுக மேடைகளில் முழங்கியவர் என்பதும் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த போது, அவர்களோடு பயணித்தவர் துரை கருணா என்பதும் தெரியவர, வி.கே.சசிகலாவின் பேட்டியின் நம்பகத்தன்மையை 100 சதவீதம் உறுதிப்படுத்தியது.
ஜெயா டிவிக்கு வி.கே.சசிகலா பேட்டியளித்த விவகாரம், அந்த பேட்டி ஜெயா டிவியில் ஒளிப்பரப்பப்படுவதற்கு முன்பாக மற்ற தொலைக்காட்சி பொறுப்பாளர்களுக்கு தெரியவர, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி தொலைக்காட்சி நெறியாளர்களும், வி.கே.சசிகலாவை அணுகி, தங்கள் தொலைக்காட்சிக்கு வி.கே.சசிகலா பேட்டி தர வேண்டும் என கேட்டுள்ளனர். ஒவ்வொரு தொலைக்காட்சி பொறுப்பாளர்களும் வி.கே.சசிகலாவுக்கு நெருக்கமான உறவுகள், நலம் விரும்பிகள் மூலம் மேற்கொண்ட முயற்சிகளை கண்டு வி.கே.சசிகலாவே திகைத்துப் போயிருக்கிறார்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும், தனிப்பட்ட அரசியல் சார்பு நிலை இருப்பதை அறிந்து கொண்டு, ஜெயா டிவியை தவிர வேறு எந்த தொலைக்காட்சிக்கும் பேட்டி தர மறுத்திருக்கிறார் வி.கே.சசிகலா. ஆனால், எப்படியாவது வி.கே.சசிகலாவின் பேட்டியை பெற்றுவிட வேண்டும் என தந்தி டிவி எடுத்து முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும் வகையில், சென்னையில் பிரபலமான மூத்த ஊடகவியலாளர், தந்தி டிவிக்கு ஆதரவாக வி.கே.சசிகலாவை அணுகி அவரது மனதை கரைத்து அனுமதி பெற்று தந்ததாக ஒரு பேச்சு, தொலைக்காட்சி நெறியாளர்களிடம் பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அந்த மூத்த ஊடகவியலாளர், அரசியல் நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதும், திமுக மீதான பகைமை உணர்வால் அதிமுக மீது அதீத காதல் கொண்டவர் என்பது ஒருபுறம் இருக்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் நெருங்கி பழகியது போன்ற ஒரு வாய்ப்பு எடப்பாடி பழனிசாமியிடம் கிடைக்கவில்லை என்பதாலும், தந்தி டிவிக்கு வி.கே.சசிகலாவின் பேட்டியை பெற்று தர முனைப்புடன் செயல்பட்டு இருக்கிறார் என்பதும் ஊடகவியலாளர்களிடம் பேசப்படும் ஒரு கருத்தாகும்.
அவரைப் போலவே, எடப்பாடி பழனிசாமி மீது தனிப்பட்ட விரோதம் கொண்டுள்ள அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு கூட்டம், ஓ.பி.எஸ்.ஸுக்கும் வி.கே.சசிகலாவுக்கும் இடையே பாலமாக இருந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நடவடிக்கைகளை முனைப்புடன் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் ரீதியாக வி.கே.சசிகலா ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் காய் நகர்த்தல்கள் அத்தனையும் ஓ.பி.எஸ்.ஸுக்கு தெரியும் என்பதும், வி.கே.சசிகலா யாரையெல்லாம் சந்திக்கிறார், யாருடன் கலந்துரையாடுகிறார், அவரின் எதிர்கால திட்டம் என்ன என்பதெல்லாம் ஓ,பி.எஸ்.ஸுக்கு அத்துப்படி.
அதுபோலவே, அதிமுக தலைமையில், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டம், வி.கே.சசிகலாவுக்கு எதிராக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும், ஒவ்வொரு நாளும் ஓ.பி.எஸ் மற்றும் வி.கே.சசிகலாவுக்கு இடையேயான நட்பு வட்டாரம், வி.கே.சசிகலாவுக்கு பாஸ் செய்து கொண்டிருக்கிறது.
இப்படிபட்ட பின்னணியில்தான் ஓ.பி.எஸ்.,ஸும், இ.பி.எஸ்.ஸும், பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசவுள்ளார்கள். இந்த சந்திப்பின் போது முழுக்க, முழுக்க அதிமுக.வை பலப்படுத்துவது தொடர்பாகவும், வி.கே.சசிகலா மற்றும் அமமுக இணைப்பு ஆகியவையே பிரதானமாக இருக்கும் என்றும், இன்றைய சந்திப்பில் வி.கே.சசிகலாவுக்கு ஆதரவாக, அவரது குரலாகவே ஓ.பி.எஸ்., உரக்க குரல் கொடுப்பார் என்றும் ஓ.பி.எஸ். ஸுக்கு நெருக்கமானவர்கள் தகவல்களை கசிய விடுகிறார்கள்.
அவரின் அழுத்தமான வாதத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசுவாரா அல்லது அதிமுக.வில் தலைமைப் பதவியை தக்க வைக்க வேண்டும் என்ற ராஜதந்திரத்துடன் இ.பி.எஸ். வாதம் புரிவாரா என்பதுதான் முக்கியமாக இருக்கும்.
இவற்றையெல்லாம் விட, அதிமுக பலமாக வேண்டுமா, பலவீனமாக வேண்டுமா என்பது குறித்து பிரதமர் மோடி மனதில் என்ன இருக்கிறது என்பதை, இரண்டு பேரின் சந்திப்புக்கு பிறகும், சென்னை திரும்பிய பிறகு இருவரும் எந்த குரலில் பேசுகிறார்கள் என்பதும் வெளிச்சம் போட்டு காட்டிவிடும். இன்றைய பிரதமருடனான இரட்டையர் சந்திப்பு, அதிமுக.வின் எதிர்காலத்திற்கு நல்லதா, தீங்கு விளைவிக்கக் கூடியதா என்பதைதான் அதிமுக முன்னணி நிர்வாகிகளாகியாக நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று ஒரே மூச்சாக பேசி முடித்தார் அந்த முன்னணி நிர்வாகி.
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பேராசிரியர் அருணன் தனது டிவிட்டரில் நாட்டாமையிடம் பஞ்சாயத்து போயிருக்கிறது என்று கிண்டலடித்து நேற்றே ஒரு பதிவிட்டிருந்தார்.
நாட்டாமை நல்ல தீர்ப்பு சொல்வாரா? காத்திருப்போம்…