Mon. Nov 25th, 2024

திமுக கட்சியினருக்கு இருக்கிற தில்லு, வெறு எந்தக் கட்சியினருக்கும் இருக்காது. தங்களது மாவட்டத்திற்கு வருவது குறித்து முறைபடி தகவல் தெரிவிக்கவில்லை என்றால், அமைச்சராக இருந்தால் கூட, அவரை வரவேற்க தலையைக் கூட காட்ட மாட்டோம் என்று திமிரு காட்டுபவர்கள் திமுக.வினராக மட்டுமே இருப்பார்கள்.

அப்படியொரு தில்லுக்கு உரியவர்களாக மாறி, வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆய்வுக் கூட்டத்தை உள்ளூர் எம்.எல்.ஏ. உள்பட திமுக முன்னணி நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளதுதான், திருவள்ளூர் மாவட்டத்தில் திகு..திகு. அரசியல் விவாதமாக மாறியிருக்கிறது.

செய்தி வடிவில் இந்த விவகாரத்தைப் பார்ப்போம்…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வன சரகத்திற்கு உட்பட்ட ராமச்சந்திரா புரத்தில் உள்ள காப்புக் காடுகளை ஆய்வு செய்வதற்காக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் வந்தார். அமைச்சரின் இந்த நிகழ்ச்சி குறித்து. திமுக மாவட்டச் செயலாளரும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டி. ஜெ. கோவிந்தராசனுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை. அதனால், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த போதும், அவர் அமைச்சரின் ஆய்வு நிகழ்வில் பங்கேற்கவில்லை.

எம்.எல்.ஏ.,கோவிந்தராஜனே வனத்துறை அமைச்சரின் நிகழ்வை புறக்கணித்துவிட்டார் என்று தெரிந்தவுடன், உள்ளூர் திமுக நிர்வாகிகளும் அதிருப்தியடைந்து ஒட்டுமொத்தமாக அமைச்சரின் வருகையை புறக்கணித்து திரும்பி பார்க்காமல் நடையை கட்டினர்.

வழக்கமாக அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் வருகையின்போது அவர்களை வரவேற்கும் விதமாக சாலையின் இருபுறமும் கட்சிக் கொடிகள் நட்டு, வரவேற்பு பதாகைகள் வைத்து அமர்களப்படுத்துவார்கள்.

திமுக எம்.எல்.ஏ. கோவிந்தராஜன்…..

அதுவும், திமுக ஆட்சிக்கு வந்து 70 நாட்கள்தான் கடந்துள்ளது என்ற போதில், உள்ளூர் உடன்பிறப்புகளுக்கு உற்சாகத்திற்கு குறையே இருக்காது. ஆனால் அதுபோன்று எந்தவொரு வரவேற்பும் தனக்கு அளிக்கப்படாததால், அப்செட் ஆகிவிட்டார் அமைச்சர் கா.ராமச்சந்திரன்.

ஆய்வு முடித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த போது, உற்சாகம் இல்லாதவராகவே காணப்பட்டார் அமைச்சர். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கா. ராமச்சந்திரன் தமிழகத்தில் தற்போது 23 சதவீத வனப்பகுதி இருப்பதாகவும் அதனை 33 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கோடு ஒரு லட்சத்தி 30 ஆயிரத்து 60 ஏக்கர் பரப்பளவில் காப்பு காடுகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆண்டுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளதாகவும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புள்ளி விபரங்களோடு பேசினார்.

மேலும், பழவேற்காடு காட்டுப்பள்ளி வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வரும்பொழுது மான் உள்ளிட்ட வன விலங்குகள் வாகனங்களில் அடிபட்டும் வெறி நாய்களிடம் சிக்கியும் உயிரிழப்பதை தவிர்க்கும் வகையில், யானைகள் வழித்தடத்தில் அகழிகள் அமைப்பது போன்று தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு அதனை கண்காணிக்க100 தற்காலிக வனக்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

வனக்காவலர்கள் மூலமாக வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர், இரை உள்ளிட்டவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மிகுந்த அக்கறையோடு பேசினார் அமைச்சர் ராமசந்திரன்.

செய்தியாளர்களும் சளைக்காமல் கேள்வி மேல் கேட்டுக் கொண்டே இருந்தனர். பேட்டி நீட்டித்துக் கொண்டே போய் கொண்டிருந்த நேரத்தில், சரளமாக பதில் கூறுவதற்கு சிரமப்பட்ட அமைச்சர், அருகில் இருந்த தமிழக முதன்மை தலைமை வனக்காவலர் கருணை பிரியாவிடம் தகவல்களை கேட்டு பதில் அளித்தார்.

ஆய்வு நேரத்தை விட செய்தியாளர்களிடம் பேசிய நேரம் அதிகமானதாலும், திமுகவினரின் புறக்கணிப்பினாலும் மனம் தளர்ந்துபோன அமைச்சர், ஏற்னெவே திட்டமிட்டிருந்த நிகழ்வில் ஒன்றாக, மரக்கன்றுகளை கூட நடவாமல் அமைச்சர் கா. ராமச்சந்திரன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனை புறக்கணித்து கெத்து காட்டிய கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ கோவிந்தராசனை அவரது ஆதரவாளர்கள் புகழ்ந்து தள்ளினாலும் கூட, பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினிடமே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்படிபட்ட நேரத்தில் பொதுமக்களிடம் திமுக.வுக்கு எந்தவிதமான மதிப்பீடு இருக்கும் என்பதையெல்லாம் ஒருகணம் நினைத்துப் பார்த்து, தனிமனித ஈகோவை தவிர்த்துவிட்டு, அமைச்சரை பெருந்தன்மையோடு எம்.எல்.ஏ.,வரவேற்று இருந்தால், திருவள்ளூர் மாவட்ட திமுக.வுக்கு சிறப்பான பெயர் கிடைத்திருக்கும் என்று கூறும் திமுக நிர்வாகிகளும் கும்மிடிப்பூண்டியில் இருக்கிறார்கள் என்பதை புறம்தள்ளிவிட முடியாது.