Mon. Nov 25th, 2024

அதிமுக முன்னாள் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நான்கு அதிமுக எம்.எல்.ஏ., திமுக ஆதரவு நிலையை எடுத்துள்ளதாக பகீர் தகவல் கொங்கு மாவட்டத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

இதென்ன புது கலாட்டா ?

எதிர்க்கட்சித்தலைவர் பதவியை குறி வைத்து காய் நகர்த்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முட்டி மோதிப் பார்த்தார். ஆனால், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மையாக இருப்பதால், எதிர்க்கட்சித்தலைவர் பதவியை ஓ.பி.எஸ்.ஸுக்கு விட்டுக் கொடுக்க கடைசி நிமிடம் வரை இ.பி.எஸ். மறுத்துவிட்டார்.

இந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தேர்வில் ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் வகையில், அதிமுக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபாலை, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு முன்மொழித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

கொங்கு மண்டலத்தில் இருந்தே ஒருவரை தேர்ந்தெடுத்து தன்னை வீழ்த்த ஓ.பி.எஸ். வகுக்கும் வீயூகத்தை கண்டு அதிர்ச்சியான இ.பி.எஸ்., அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த ப.தனபாலை, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்த்தினால், கொங்கு மண்டலத்தில் அதிமுக.வின் செல்வாக்கு கடுமையாக சரிந்துவிடும் என்று கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியானது.

மறைந்த முதல்வர் எம்.ஜிஆர். காலத்தில் இருந்தே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தன்னை சாதிப் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி மதிப்பிட்டதை அறிந்து நொந்து போய்விட்டார் ப.தனபால். மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்ததால், தன்னை பேரவைத் தலைவர் பதவியில் அமர வைத்து அழகுப் பார்த்ததுடன் மிகுந்த மரியாதையுடன் நடத்தி வந்த பழைய நினைவுகளை எல்லாம் தனக்கு நெருக்கமான அதிமுக முன்னணி தலைவர்களுடன் பகிர்ந்து தனது வேதனையை வெளிப்படுத்தி வந்துள்ளார் ப.தனபால்.

சாதி அடிப்படையிலேயே அதிமுக.வில் ஒவ்வொரு நகர்வையும் முன்னெடுத்துச் செல்லும் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் யுக்திகளைக் கண்டு மனம் நொந்து போன ப. தனபால், இதே நிலை தொடர்ந்தால், அதிமுக.வில் விளிம்பு நிலை மக்களின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்று வருத்தம் அடைந்துள்ளார். அதிமுக தலைமையில் ஒரு குழுவிடம் சாதியுணர்வு வெறித்தனமாக மாறி வருவதால், அண்மைக்காலமாக அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுகளிலும் ஆர்வமாக கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு போலவே நடந்து கொள்கிறாராம் ப.தனபால்.

அண்மைக்காலமாக ப.தனபாலிடம் காணப்படும் மாற்றங்களை உண்ணிப்பாக கவனித்து வந்த, அவருக்கு நெருக்கமான, திமுக தலைமையோடு அடிக்கடி கருத்துகளை பரிமாறிக் கொள்கிற கல்லூரி பேராசிரியர் ஒருவர் ப.தனபாலை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, எடப்பாடி பழனிசாமி மீதான தனது வருத்தத்தையெல்லாம் கொட்டியுள்ளார் ப.தனபால்.

கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சமுதாயத்திற்கு இணையான மக்கள் தொகை கொண்ட அருந்ததியர் சமுதாயத்தை வேண்டுமென்றே இழிவுப்படுத்திய எடப்பாடி பழனிசாமியின் ஆணவத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சட்டப்பேரவையில் திமுக ஆதரவு அணியாக செயல்பட தான் தயாராக இருப்பதுடன், தன்னுடன் மேலும் 3 எம்.எல்.ஏ.க்களும் திமுக ஆதரவு நிலையை எடுக்க ஆர்வமாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் கசிந்து, கொங்கு மண்டலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ப.தனபாலுடன் திமுக தரப்பில் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததால், கொங்கு மண்டலத்தில், இ.பி.எஸ் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக அருந்ததியர் சமுதாயத்தை திரட்டி, அதிமுக.வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதுடன் வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிப் பெற ப.தனபால் தலைமையிலான அணி முழுமூச்சுடன் களப் பணியாற்றும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் சேலத்தில் உள்ள திமுக முன்னணி நிர்வாகி ஒருவர்.

கொங்கு கோட்டையில் விரிசல்கள் விழுவதற்கான தொடக்கப்புள்ளியாக ப.தனபால் இருப்பாரா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்…