Sat. Nov 23rd, 2024

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஓங்கி குட்டு வைத்துள்ளது..

வழக்கு விவரம்

பிரபல தமிழ் நடிகர் விஜய் கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்தார்.

இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை.

இதனையடுத்து ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

அதில், காரை பதிவு  செய்யாததால் அதனைப் பயன்படுத்த முடியவில்லை என மனுவில் கோரியிருந்தார்.

 இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் என்ன தொழில் செய்கிறார் என்பதை மனுவில் குறிப்பிடவில்லை என மனுதாரர் தரப்பு வழக்குரைஞரிடம் கேட்டபோது மனுதாரர், நடிகர் எனக் குறிப்பிட்டார்.

புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும்.

வரி வருமானம் தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு.

வரி என்பது  கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை.

மக்கள் செலுத்தக்கூடிய வரி தான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும்  அளவுக்கு வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான நாயகர்களாக இருக்க வேண்டுமே தவிர, போலி நாயகர்களாக இருக்கக் கூடாது.

சமூகநீதிக்குப் பாடுபடுவதாகப் பிரதிபலிக்கும் நடிகர்கள், இதுபோன்ற வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது.

வரிஏய்ப்பு என்பது தேசத்துரோகம். எனவே இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி என்.சுப்பிரமணியம் கடுமையான வார்த்தைகளை குறிப்பிட்டார்.

மேலும், நடிகர் விஜயின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, அவருக்கு ரூ.1 லட்சம்  அபராதம் விதித்து அதனை முதல்வரின் கரோனா  நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.