தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…
கல்லூரியில் படிப்பதற்காக 1981 ஆம் ஆண்டில் சென்னை வந்த காலம் முதல், 1987 ஆம் ஆண்டில் தராசு ஆசிரியர் ஷ்யாமுடன் அறிமுகம் ஏற்பட்ட காலத்தில் இருந்தும் சென்னை அரசியலை கூர்ந்து கவனித்து வந்துள்ளேன்.
1982 ல் சாலிகிராமத்தில் தங்கியிருந்த போது எதிர்த்த வீடு பிரபல கவர்ச்சிக் கன்னி நடிகை சில்க் ஸ்மிதா வீடு. இன்றைக்கு காட்சியளிக்கும் சாலிகிராமமைப் போல, அந்த காலத்தில் சாலிகிராமம் இல்லை. பெயருக்கு ஏற்பவே கிராமம் போலவே காட்சியளித்தது. வடபழனி – போரூர் சாலையில் இருந்து சாலிகிராமம் பிரிவுச் சாலை மண் சாலையாகதான் இருந்தது. பல்லவன் பேருந்து சாலிகிராமத்திற்கு எட்டியே பார்த்தது கிடையாது.
நாங்கள் குடியிருந்த தெரு, கார் சென்று வரும் அளவுக்குக் கூட அகலமானதில்லை. சூட்டிங் முடித்துவிட்டு பெரும்பாலான நாட்கள் காலைப்பொழுதில்தான் சில்க் ஸ்மிதா வீடு திரும்புவார். நடனக் காட்சிகளில் எப்படி உடையணிந்திருப்பாரோ, அதே உடையில்தான் வீட்டிற்கு வருவார். காரில் தூங்கியவாறே வரும் சில்க் ஸ்மிதா, காரில் இருந்து இறங்கும்போது, சால்வைவை உடம்பின் மீது போர்த்திக் கொண்டு, 100, 200 அடி தூரம் மண் சாலையில் நடந்த படியேதான் தனது வீட்டிற்குச் செல்வார்.
அந்த தெருவில் உள்ள யாரும் அவரை வித்தியாசமாக பார்த்ததாக எனக்கு நினைவு இல்லை. பெரும்பாலும் அவர் வீடு திரும்பும் நேரத்தில், பல் துலக்குவதற்காக வீட்டு வாசலில்தான் நின்று கொண்டிருப்பேன். அவரது வீட்டில் மாடியில் அவருக்கு அறை இருந்தது. ஒருநாள் அவரிடம் ஆட்டோ கிராப் வாங்குவதற்காக மாடிப்படி ஏறி அவரது அறைக்கு சென்று கதவை திறக்க முயன்றேன். அப்போது திடீரென்று சட்டையை பிடித்த இழுத்த போது அதிர்ச்சியாகி திரும்பி பார்த்தேன்.
வயதான ஒரு மூதாட்டி நின்றுக் கொண்டிருந்தார். அவரை நிறைய முறை பார்த்திருக்கிறேன். என்ன என்று கேட்டார். ஆட்டோ கிராப் வாங்க வேண்டும் என்று சொல்ல, பேபி தூங்குது என்ற பொருளில் தெலுங்கில் அந்த மூதாட்டி கூறவே வெளியேறினேன்.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் தமிழ் ஈழத்திற்கு குரல் கொடுத்த போராளிகள் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, திமுக சார்பில் சென்னையில் கண்டனப் பேரணி நடைபெற்றது. அப்போது, அன்றைய இளைஞரணி செயலாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தடையை மீறி சென்ற பேரணியில் கல்லூரி மாணவனாக நானும் கலந்து கொண்டேன். அன்றைக்கு சென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் டி.ஆர்.பாலு.
அண்ணா சாலையில் தடையை மீறிச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டு ராஜரத்தினம் மைதானத்தில் காவல்துறையினர் அடைத்து வைத்தனர். ஆயிரத்திற்கும் குறைவானவர்கள்தான் அங்கு இருந்தோம். அனைவரின் பெயர், முகவரி விவரங்களை காவல்துறையினர் பதிவு செய்தனர். அந்த பட்டியலில் எனது பெயரும் முகவரியும் இடம் பெற்றிருக்கிறது. அப்போது சிந்தாரிப்பேட்டையில் தங்கியிருந்தேன்.
அன்றைய காலகட்டத்தில் டி.ஆர்.பாலு, சென்னை மாவட்ட திமுக செயலாளராக பொறுப்புக்கு வந்ததே பரபரப்பாக பேசப்பட்டது. அவருக்கு முன்பாக மாவட்ட செயலாளராக இருந்த ஆர்.டி.சீதாபதி மீண்டும் மாவட்டச் செயலாளராக பதவிக்கு வரும் வாய்ப்பு இருந்த போதும், தலைமையின் ஆசிர்வாதத்தால் டி.ஆர்.பாலு மாவட்டச் செயலாளராகிவிட்டார்.
அந்த ஆத்திரத்தில், திமுக.வில் இருந்து விலகிய ஆர்.டி.சீதாபதி, ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களுடன் அதிமுக.வில் ஐக்கியமானார். திமுக தலைமை மீது அவருக்கு இருந்த கோபம் அதீதமானது என்பதற்கு அன்று நடந்த நிகழ்வே ஒரு சாட்சி. ஐந்தாறு பேருந்துகளில் ஒரு பக்கம் திமுக கொடியும், மறுபக்கம் அதிமுக கொடியும் கட்டிக்கொண்டு தொண்டர்களுடன், இன்றைக்கு அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் பவனி வந்தார்.
2000 -ம் ஆண்டில் டி. ஆர். பாலுவின் புதல்வி மனோன்மணி, சன் டிவி செய்தியாளராக அறிமுகமானார்..கலைஞர் கைது தொடர்பாக அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் முத்துகருப்பனுடன் மனோன்மணி மல்லுக்கட்டியது எல்லாம் சுவாரஸ்யமான தனிக்கதை….
அன்றைக்கு அந்த தோட்டத்தின் ஒரு பகுதியில்தான் (ராஜாஜி ஹாலுக்குப் பின்பக்கம்) திமுக கட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது. அப்போது திமுக தலைவர் மு.கருணாநிதி எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோதும் கூட அவருக்கு சைரன் வைத்த கார் வழங்கப்படவில்லை. அவருக்கு சைரன் வைத்த கார் இல்லாத போது, அப்போது புதுச்சேரி முதல்வராக இருந்த ராமச்சந்திரன் சிகப்பு விளக்கு சூழல, அம்பாசிடர் காரில், கலைஞரை வந்து சந்தித்து செல்வார்.
1986 ஆம் ஆண்டு வாக்கில் தராசு வார இதழை ஷ்யாம் துவங்கிய காலம், எம்.ஜி.ஆர். ஆட்சியின் நிறைவுக்காலமாக இருந்தது. அப்போது, எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு எதிரான செய்திக்கட்டுரை தராசு வார இதழில் வெளிவர, அவருக்கு எதிராக பிடிவாரண்டை பிறப்பித்தார் சட்டப்பேரவைத் தலைவர் பி.ஹெச். பாண்டியன். ஷ்யாம் தலைமறைவாக இருந்த நாட்களில்தான் கீழ்ப்பாக்கத்தில் இருந்த தராசு அலுவலகத்தை தேடி முதல்முறையாக நான் சென்றேன்.
1989 ஆம் ஆண்டில் தராசு மக்கள் மன்றம் முதன்முறையாக தேர்தல் களத்தில் நேரடியாக குதித்தது. அந்த காலம் முதலாக, அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளையும், அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளையும், செய்தி வழியாக அறிந்து கொண்டதை விட, சக ஊடக நண்பர்கள் மூலம் மறைக்கப்பட்ட செய்திகள் ஏராளமாகவே என்னில் குடிகொள்ள தொடங்கின.
அந்த காலம் முதல் இன்றைய தேதி வரை, பிரபலமாக உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலமாக துடிக்கிற அரசியல் நிர்வாகிகளில். எனது மனது யாரை ஏற்றுக் கொள்கிறதோ, அவர்களைப் பற்றி கூடுதலாக அறிந்து கொள்ள ஆர்வப்படுவேன். ஆனால், பார்க்கும் போதோ, அவர்களது பெயர்களை கேள்விப்படும்போதோ எனது உள்ளுணர்வுக்கு சரியென்று படவில்லை என்றால், அவர்கள் எவ்வளவு பெரிய அரசியல் தலைவர்களாக இருந்தாலும்கூட ஒருநாளும் சட்டை செய்தது இல்லை. எதற்கு இவ்வளவு பில்டப் என்று கேட்கிறீர்களா, அமைச்சர் சேகர் பாபுவை பற்றிய செய்திக்கட்டுரைக்கான முன்னுரைதான் இது.
அவர் அதிமுக.வில் இருந்த போதும் சரி, பின்னர் திமுக.வுக்கு மாறி வந்த பிறகும் சரி. ஏனோ தெரியவில்லை. எனக்கு அவரை சுத்தமாகவே பிடிக்காது. அதற்கு தனிப்பட்ட காரணம் ஏதேனும் உண்டா என்றால், குறிப்பட்டு சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை. ஆனால், அவர் அதிமுக.வில் இருந்த போதும் அவரை அணுகியது இல்லை. திமுக.வில் கோலோச்ச துவங்கிய போதும் நெருங்கியது கிடையாது. ஆனால், நான் பணியாற்றிய ஊடகங்களில், அது சன் டிவியாக இருந்தாலும் சரி, ஜெயா டிவியாக இருந்தாலும் சரி., சேகர்பாபு கலந்து கொள்கிற, ஏற்பாடு செய்கிற அரசியல் நிகழ்ச்சிகளை சேகரிக்க செல்வதற்கும், அந்த நிகழ்வுகள் பற்றிய செய்திகள், தவறாமல் டிவிகளில் ஒளிப்பரப்பாவதற்கும் நெருக்கமான நண்பர்களே அதீத ஆர்வம் காட்டிய பல நிகழ்வுகள் இன்றும் நினைவில் நிற்கின்றன.
வடசென்னையில் குறுகிய காலத்தில் அதிமுக.விலும் சரி, திமுக.விலும் சரி பிரபலமாகி உச்சத்திற்கு வந்தவர் பி.கே.சேகர் பாபு. இத்தனைக்கும் 2010 ஆம் ஆண்டிற்கு முன்பு அவரின் கொடி பறந்த வடசென்னைக்குட்பட்ட பகுதியில்தான் ஐந்தாண்டு காலம் வசித்து வந்தேன். அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால், அவரது இருப்பிடத்தை கடந்து தான் வர வேண்டும். அவரை சந்திப்பதற்கு பல நேரங்கள் தானாக உருவான போதும் தவிர்த்துவிட்டு சென்றிருக்கிறேன்.
அந்தளவுக்கு அவர் மீதான வெறுப்புக்கு காரணம், யார் வாயிலாகவோ அவரைப் பற்றி கிடைத்த தகவல்கள் மனதில் ஆழமாக பதிந்து போனது. அதிமுக.நிர்வாகியாக இருந்த போது, அவருக்கும் அப்போதைய அமைச்சர் வளர்மதிக்கும் இடையே இருந்த தொழில் ரீதியான பரிவர்த்தனைகள், திமுக.வில் ஐக்கியமான பிறகு, வடசென்னையில் அவர் நடத்திய பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றின் பின்பும், திமுக.வில் சேர வேண்டும் என்ற தீராத வெறியுடன் வந்த பணக்கார இளைஞர்களின் பணமும், அப்போதைய திமுக இளைஞரணி செயலாளர் மு.க.ஸ்டாலினுடனான அறிமுகத்திற்காக லட்சங்களில் பணத்தை செலவழித்த தொழிலதிபர்கள் என பலரின் சோக கதைகளை கேட்க நேரிட்டதால், பி.கே.சேகர் பாபுவை நெருங்கவே கூச்சப்பட்டேன்..
என்னளவில் அவரைப் பற்றி புரிந்து கொண்ட வகையில், அவர் மீதான மரியாதை ஒன்றும் பெரிதாக உருவாகவில்லை. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக அவர் பொறுப்பு ஏற்றவுடன், அவரின் ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு வகையில் ஈர்க்க துவங்கியுள்ளது.
ஊருக்கு எல்லாம் புலியாக இருப்பவன், வீட்டிற்கு சென்றால் எலியாக மாறிவிடுவான் என்பதைப் போல, வெளிப்பார்வைக்கு கரடு முரடாக காட்சியளிக்கும் பி.கே.சேகர் பாபு, இந்து சமய அறநிலையத்துறைக்கு அமைச்சரானவுடன், கோயில் கோயிலாக ஏறி ஆய்வுப் பணிகளை செய்து கொண்டிருக்கும் பாங்கை பார்க்கும் போது, குரவர்கள் வலம் வந்த காட்சிகள் கண்கள் முன்பு விரிவதைப் போல ஒரு பொய்த் தோற்றம் ஏற்பட்டு, வியப்பு மேலோங்குகிறது.
பி.கே.சேகர் பாபுக்கு இயற்கையாகவே இறைப் பக்தி அதிகம் என்று அவரோடு நெருங்கிப் பழகும் ஊடக நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். அடிக்கடி சபரிமலை யாத்திரையும் மேற்கொள்கிறவராக இருக்கிறார். மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி உயிரோடு இருந்த காலங்களிலேயே பி.கே.சேகர் பாபு ஆன்மிக அடையாளங்களோடுதான் அதிகமாக காட்சியளித்திருக்கிறார். அவருக்குள்ள இறை பக்தியை ஒருபோதும் கலைஞர் மு.கருணாநிதி விமர்சனம் செய்ததாக நான் கேள்விப்பட்டதில்லை.
எந்த வேலையாக இருந்தாலும் ஆத்மார்த்தமான உணர்வோடு அதை செய்தால், வெகு விரைவாக அந்த துறையில் உச்சத்தை தொட்டு விடலாம் என்று சொல்லாடலை எல்லோரும் கேட்டிருக்கலாம்.அந்த வகையில் செய்யும் தொழிலே தெய்வம் என்று ஆன்றோர்கள் கூறியதற்கு ஏற்ப, கரடு முரடான பி.கே.சேகர் பாபுக்கு இந்து சமய அறநிலையத்துறையை வழங்கி பேரின்பத்தை நோக்கி பயனப்பட வழிகாட்டியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த வகையில் முதல்வரின் தேர்வு சோடை போகவில்லை என்பதைதான், அமைச்சர் சேகர் பாபுவின் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளும் எடுத்துக்காட்டாக உள்ளன.
வெறித்தனமாகவே எதையும் செய்ய பழக்கப்பட்டிருக்கும் பி.கே.சேகர் பாபு, கண்ணப்ப நாயனார் மாதிரி முரட்டுப் பக்தராகவே இருக்கிறார் என்பதால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பி.கே. சேகர் பாபு அறிவிக்கும் அறிவிப்புகள் ஒவ்வொன்றும், பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகள், ஆன்மிக அரசியலை முன்னெடுத்தவர்களையே கதிகலங்க வைத்திருக்கிறது.
ஆய்வுப் பணிக்காக ஆலயத்திற்குள் செல்லும் போதும், திருப்பணிகளை முடுக்கி விடுவதற்காக ஆலயங்களில் பாதம் பதிக்கும் போதும் பக்திமானாகவே காட்சியளிக்கிறார். ஆலயத்திற்குள் வலம் வரும் போது, அவரின் உடல்மொழியும், கருவறை முன்பு நிற்கும் போது கண்கள் கலங்க உருகுவதும், இவரை தவிர வேறு யாரிடமும் இந்து சமய அறநிலையத்துறை பொறுப்பை வழங்கியிருந்தாலும், பி.கே.சேகர் பாபுவை போல பொருத்தமானவராக அமைந்திருப்பார்களா? என்பது சந்தேகம்தான்.
நேற்றைய தினம், கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அருள்மிகு நீலகண்ட சுவாமி திருக்கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு மேற்கொண்ட ஆய்வு நேர்த்தியும், பல ஆண்டுகளாக தடைப்பட்டு இருக்கும் திருப்பணியை விரைவாக மேற்கொண்டு குடமுழுக்கு மேற்கொள்வதற்காக ஆலய நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய பாங்கும், பாஜக. நிர்வாகிகள் தொலைக்காட்சிகளில் பார்த்திருந்தால், பிரதமர் மோடியை விட பக்தி பழமாக இருக்கிறாரே சேகர் பாபு என்று உள்ளம் உருக முன்மொழிந்திருப்பார்கள்…
அரசியல்வாதிகளை மட்டுமல்ல, ஆன்மிக வாதிகளையும் ஒரு சேர கவர்ந்திழுந்துக் கொண்டிருக்கும் அமைச்சர் பி.கே.சேகர் பாபு, இதே உணர்வோடு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆன்மிகத்தலங்களை பொலிவுப்படுத்த தொடங்கினால், இந்த ஐந்தாணடு காலம் மட்டுமல்ல, அடுத்த ஐந்தாண்டு காலமும் ஆன்மிக அரசியல் என்ற முழக்கம், முக்காடுப் போட்டுக் கொண்டு முடங்கியிருக்க வேண்டியதுதான்.
புனித நீரை யாரும் வடிகட்டுவதில்லை. அதில் தூசி படர்ந்திருந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை. அதைப் போலத்தான், ஆண்டவருக்கு அடியாராக மாறி நிற்கும் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் மனதில் எங்காவது தீயக் குணங்கள் மிச்சம் மீதியிருந்தால், அதை முழுமையாக நீக்கி, இறைத் தொண்டை குறைவின்றி நிறைவேற்றி வைக்கும் அளவுக்கு சலனமற்ற நல்ல புத்தியை, அமைச்சராக பதவி வகிக்கும் காலம் வரை நிலைத்திட, நீடித்திட எல்லாம் வல்ல பேராற்றல் அருள் புரிய வேண்டும்.
வேல் யாத்திரை என்ற பெயரில் ஆன்மிகத்தை கேவலப்படுத்தும் அலங்கோலாமான ஆறுபடை யாத்திரை போன்ற கேலிக்கூத்துகள் தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை அரங்கேறாமல் தடுத்திடும் வல்லமையையும், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுக்கு அதிகமாக வாய்க்கட்டும். இறைப்பக்தி கவசம் எனும் போல அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை காத்து நிற்கட்டும்….