Mon. Nov 25th, 2024

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 19 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், 40 மசோதக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா 2 ஆம் அலைக்கு பின்னர் முதல்முறையாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. வரும் 19ம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 13ம் தேதி வரை நடைபெறும் என மக்களவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகம் மற்றும் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள இடங்களை அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு ஓம் பிர்லா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாள்தோறும் காலை 11 மணிக்கு தொடங்கும் கூட்டத்தொடர் மாலை 6 மணி வரை 19 நாட்கள் நடைபெறும்.

கொரோனா பரவல் மீண்டும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்படுகளுடன் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது என்றும் மழைக்கால கூட்டத்தொடரை சுமூக நடத்த அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் ( மக்களவை / மாநிலங்களவை ) வரும் 18ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

எம்.பி.க்களுக்கான வழிகாட்டு நெறிமுறைககள்….

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் அவர்களுக்கு ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் அல்ல எனவும் ஒரு டோஸ் தடுப்பு மருந்து செலுத்தி கொண்டாலும் கூட பரிசோதனை கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 30 எம்.பி-கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆதாரங்கள் நாடாளுமன்றத்தில் இல்லை என்பதால் அவர்கள் 2 வாரங்களுக்கு ஒருமுறை கட்டாயம் RTPCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மக்களவையில் 444 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 218 உறுப்பினர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர். நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் ஊடக துறையினர் , நாடாளுமன்ற பணியாளர்கள் அனைவருக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் எனவும் பரிசோதோனை சான்று / தடுப்பூசி போட்டு கொண்டுதற்கான ஆவணம் இல்லையென்றால் நாடாளுமன்ற வளாகத்தில் அனுமதி இல்லை எனவும் நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 40 மசோதக்கள் (Bills) மற்றும் 5 அவசர சட்டங்கள் (Ordinance) நிறைவேற்றப்பட உள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தகவல் தெரிவிக்கிறார்கள்.

2020 மழைக்கால கூட்டத்தொடர், குளிர் கால கூட்டத்தொடர் மற்றும் 2021 பட்ஜெட் விவாத கூட்டத்தொடர்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் என்பதால் சுமூகமாக கூட்டத்தொடரை நடத்துவது குறித்து அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் மக்களவை / மாநிலங்களவை தலைவர்கள் ஜூலை 18ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.