Sun. Nov 24th, 2024

தமிழக பாஜக தலைவர் எல். முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவியும், கர்நாடக மாநில பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது குறித்தும், தமிழ்நாட்டில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு சமுதாயத்தினருக்கு உயர்ந்த பதவிகள் வழங்கப்பட்டிருப்பதின் பின்னணியில், 2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை குறி வைத்து, இப்போதிருந்தே பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வகுத்து வரும் வியூகம் உள்ளதாக டெல்லி அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்களிடம் கலந்துரையாடிய தகவல்களை அப்படியே நல்லரசு இங்கே பதிவு செய்கிறது.

தமிழகத்தில் பாஜக காலூன்ற செந்நீர் சிந்தியவர்கள் ஆர்எஸ்எஸ் வார்ப்பாக 60 ஆண்டுகளுக்கு முன்பே தேசிய சிந்தனையில் ஊறிப் போயிருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி போன்ற மூத்த தலைவர்கள்தான். அவர்களின் வரிசையில் இல. கணேசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் தமிழகத்தில் பாஜக.வுக்கு நிரந்தரமாக அடித்தளம் அமைக்க கடுமையான உழைப்பை செலுத்தினார்கள்.

40 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக பாஜக. வின் தலைமை பீடம் உயர் சாதியினர் என்று கூறப்படும் பார்ப்பனர்கள் வசம் தான் இருந்து வந்தது.. அப்போதைய திராவிட ஆளுமைகளான தந்தை பெரியாரின் ஆத்மார்த்த சீடர் வே.ஆனைமுத்து அய்யா, கலைஞர் மு. கருணாநிதி, பேராசிரியர் க. அன்பழகன் உள்ளிட்ட தலைவர்களின் சித்தாந்த முழக்கங்களுக்கு ஈடுகொடுத்தும் போராடியும் பாஜக கொள்கைகளை நிலைநிறுத்த பெரும் பாடுபட்டனர்..

1998 ஆம் ஆண்டில் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் வரை தமிழக பாஜக தலைவர்களுக்கு அரசியல் தலைமைக்கான அங்கீகாரம் பெரிய அளவில் கிடைக்காமல் இருந்து வந்தது. அதே காலக்கட்டத்தில் பாப்பாத்தி என்ற முழக்கத்தோடு, திராவிட சிந்தாந்தோடு தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தொடரச் செய்த மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா மூலமாகவும், தேசிய பக்தியோடு, தமிழக அரசியல் களம் ஐக்கியமாகும் அளவிற்கு தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் உருவானது.

உயர்ந்த சாதி என்ற அடையாளத்தை துறக்க விரும்பாத போதும் செல்வி ஜெயலலிதா, தந்தை பெரியார் வகுத்த சமூக நீதி பாதையில், பேரறிஞர் அண்ணா வழியிலேயே ஆட்சியையும், அரசியலையும் தொடர்ந்து நடத்தி வந்தார். ஆலய தரிசனம் உள்ளிட்ட வழிபாடுகள் மூலம் தனது அடையாளத்தை மறைக்க முயலாத செல்வி ஜெயலலிதா வாழ்ந்த காலத்திலேயே, பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி இல்லை என்று மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி நற்சான்றிதழ் வழங்கிய போது, திராவிட கொள்கைகள் முழக்கத்தில் பின்னடைவு ஏற்பட துவங்கியது.

ஆனால், பாஜக.வுடன் கூட்டணி அமைத்தது வரலாற்றுப் பிழை என்று பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்ட அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, தனது மறைவு வரை பாஜக.வை தீண்டதகாத கட்சியாகவே பார்த்தார்.

இந்த பின்னணியோடு, தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிக் கட்டிலில் மாறிமாறி இருந்த திராவிடக் கட்சிகளோடு பயணித்த மூத்த ஐஏஏஸ் அதிகாரிகள் பலர், அரசியல் அரிதாரம் பூசிய போதும், ஆகச் சிறந்த அரசியல் தலைவர்களாக தமிழகத்தில் உருவெடுக்க முடியவில்லை.

நீண்ட அரசுப் பணி, ஆழ்ந்த அரசியல் அனுபவம் ஆகியவை வாய்ந்தவர்களாக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளாலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மட்டுமல்ல, தமிழக மக்களிடம் மனமாற்றத்தையும் துளியளவுக் கூட உருவாக்க முடியாத போது, அரசியலிலும், ஆட்சிப் பணியிலும் கத்துக்குட்டியான அண்ணாமலை ஐபிஎஸ்.ஸால் என்ன சாதித்து விட முடியும். அவரின் தேர்வின் மூலம் வரும் காலத்தில் தமிழகத்தில் என்னவிதமான மாற்றத்தை உருவாக்கிவிட முடியும் என்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கனவுக் கொண்டிருக்கிறார்களோ அதை நிச்சயம் அண்ணாமலையால் நிறைவேற்ற முடியாது என்று சாபம் விடும் வகையிலேயே பேசினார்கள் டெல்லி அரசியல் தலைவர்கள்.

இந்து, இந்தியா என்று தேசப் பக்தி உணர்வோடு ஆவேசமாகவும், எழுச்சியாகவும் பேசி இளைஞர்களின் மாபெரும் சக்தியாக உருவகப்படுத்தும் அண்ணாமலை ஐபிஎஸ்.ஸின் மீது நம்பிக்கையில்லாமல் போவதற்கு என்ன காரணம்? .

சில நிமிட மௌனத்திற்குப் பிறகு தன் அனுபவ மொழியை முன்வைத்தே பேசினார், தேசம் முழுவதும் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளைச் சுற்றி வரும் பாஜக மூத்த தலைவரோடு 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இந்துத்துவா தீவிர ஆதரவுப் பிரமுகர்.

சந்திரலேகா ஐஏஎஸ்.ஸை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில், தமிழக அரசின் முக்கியப் பதவிகளை வகித்தவர். எம்.ஜி.ஆரின் அருகில் இருந்து ஆட்சிப் பணியாற்றும் வாய்ப்பும், எம்.ஜி.ஆரின் அரசியல் பயணத்தில் பங்கேற்கும் அனுபவமும் மிகுதியாக பெற்றவர் சந்திரலேகா ஐஏஎஸ். அதுமட்டுமல்லாமல், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அன்பிற்குரியவராக ஒரு காலத்தில் இருந்து பின்பு, அவருக்கு எதிராகவே அரசியல் செய்யும் துணிச்சலையும் கொண்டிருந்தவர் சந்திரலேகா ஐஏஎஸ்.

இத்தனைக்கும் அவர், தேசிய அளவில் மிகுந்த செல்வாக்கோடு அன்றைக்கும், இன்றைக்கும் இருந்து வரும் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியோடு இணைந்து அரசியல் பயணத்தை துவக்கியவர். ஆனால், தமிழக அரசியலில் அவரால் எந்த உச்சத்தையும் தொட முடியவில்லை. தமிழகம் முழுவதும் தனக்கென தனித்த ஆதரவாளர்கள் கூட்டத்தையும் உருவாக்கி கொள்ள முடியவில்லை.

அதற்கடுத்து மலைச்சாமி ஐஏஎஸ்.ஸை எடுத்துக் கொள்ளலாம். அவரும் திராவிட ஆளுமைகளான கலைஞர் மு.கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோரோடு நெருக்கமான ஆட்சிப் பணியில் பயணித்தவர். அவரும் அதிமுக.வில் சேர்ந்து அரசியல் அரிதாரம் பூசினார்.
தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர், தமிழ்நாடு மாநில தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய அனுதாபத்தோடு இருந்த மலைச்சாமி ஐஏஏஸ், அரசுப் பணியில் இருந்து ஓய்வுப் பெற்ற பிறகு 1999 ஆம் ஆண்டில் அதிமுக.வில் சேர்ந்தார். மாநிலங்களை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்த அவர், 2014 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அடுத்த பிரதமராக மோடி பதவியேற்பார் என்றும் அப்படியொரு நிலை உருவானால், செல்வி ஜெயலலிதா பாஜக ஆட்சி அமைய ஆதரவு தருவார் என்றும் பேட்டியளித்தார்.

அந்த பேட்டி வெளியானவுடனேயே மலைச்சாமி ஐஏஎஸ்.ஸை தூக்கியெறித்தார், செல்வி ஜெயலலிதா. அதன் பிறகு பாஜக.வில் சேர்ந்தார் மலைச்சாமி ஐஏஎஸ். அவரது காலத்திலேயே அதிமுக.விலும், பாஜக.விலும் சேர்ந்த அரசியல்வாதிகள், குறுகிய காலத்திலேயே அரசியலில் உச்சத்தைத் தொட்டார்கள். ஆனால், மலைச்சாமி ஐஏஎஸ்.ஸுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அரசியல் தலைவர்களின் மனங்களை கவர்ந்த அவர்களால், மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை.

2015 ஆம் ஆண்டில் அமித்ஷா முன்னிலையில் பாஜக.வில் சேர்ந்த மலைச்சாமி ஐஏஎஸ்….

அவர்களின் வரிசையில் சிவகாமி ஐஏஎஸ்., தனது சமுதாய பின்பலத்தோடு தனிக்கட்சியே துவக்கி, திமுக.வோடு கூட்டணி எல்லாம் அமைத்து அரசியலில் எதிர்நீச்சல் போட்டார். மகுடம் சூட முடியவில்லை.

தமிழக காவல்துறையில் டிஜிபி அந்தஸ்து அளவுக்கு உயர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்.நடராஜ், எம்.எல்.ஏ., பதவிக்கு மேலான உயர்ந்த இடத்தை அவரால் பெற முடியவில்லை.
அண்மைக்கால உதாரணமாக நேர்மையின் சின்னமாக கொண்டாடப்பட்ட சந்தோஷ்பாபு ஐஏஎஸ், சகாயம் ஐஏஎஸ் ஆகியோரும் கூட மறைந்த கலைஞர் மு.கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் ஆட்சிப் பணியாற்றி இருந்தும் கூட, அரசியல் உலகில் ஜொலிக்க முடியவில்லை.

சந்திரலேகா ஐஏஎஸ் முதல் சகாயம் ஐஏஎஸ் வரை நீண்ட அரசுப் பணி அனுபவமும், அரசியல் பணி அனுபவமும், தமிழக மண் சார்ந்த ஆழ்ந்த அறிவாற்றலும் பெற்றிருந்த 6 உயரதிகாரிகளால் சாதிக்க முடியாத சாதனையை, ஆடு மேய்க்கும் தொழிலை நம்பி ஐபிஎஸ் பதவியை விட்டேன் என்று கூறிய அண்ணாமலை ஐபிஎஸ்., ஸால் தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கி விட முடியுமா? திமுக, அதிமுக. ஆகிய இரண்டு கட்சிகளை எளிதாக அகற்றிவிட்டு பாஜக.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துவிட முடியுமா என்ன?

ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அரசியலோடு அடியோடு மாறுப்பட்டது தமிழக அரசியல். அந்த கள யதார்த்தை புரிந்து கொண்ட யதார்த்தவாதியான அரசியல் தலைவர்தான், தமிழக பாஜக.விற்கு இப்போதைக்கு தேவை. அதைவிடுத்து, மத துவேஷத்தையும், சாதி வேற்றுமையையும் ஊதி பெரிதாக்கி ரத்த ஆறு ஓட வைக்கும் புத்தியோடு உள்ள ஒருவரால், பாஜக.வை தமிழகத்தில் கரையேற வைக்க முடியாது.

கடந்த 50 ஆண்டு கால திராவிட ஆட்சிகளால், தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்பு வலுவாக இருக்கிறது. பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் அபாயக் கட்டத்தில் இல்லை. இன்றைக்கு திராவிட சிந்தாந்தமோ, தமிழ் தேசியமோ, கிராமப் புறங்களில் வாழும் பெரும்பான்மையான மக்களிடம் பேசுப் பொருளாக இல்லை. அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை ஈட்டக் கூடிய சக்தி படைத்தவராக இருந்து வரும் மக்கள், தங்களை ஆளும், ஆளுப் போகும் ஆட்சியாளர்களிடம் எதிர்பார்ப்பது மூன்று, நான்கு அம்சங்கள்தான்.

ஒன்று, இலவசக் கல்வி, இரண்டாவது இலவச மருத்துவம், மூன்றாவது படித்த இளம் தலைமுறையினருக்கு தகுதியான வேலைவாய்ப்பு, நான்காவது லட்சக்கணக்கில் சம்பளத்தை தரும் தொழில்நுட்ப நிறுவனங்களை துறந்துவிட்டு இயற்கை விவசாயத்திலும், சுய தொழிலிலும் சாதிக்க துடிக்கும் இளம்தலைமுறையினருக்கு தேவையான நிதி ஆதாரங்களை உருவாக்கி தருதல், அந்நிய செலாவணியை ஈட்டி தருவதற்கான ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல், துணி உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கும் நெசவு சார்ந்த தொழில்கள், போராட்டாக வாழ்க்கையாக இல்லாத வகையில் மீன் பிடித் தொழிலை விரிவுப்படுத்தல் போன்ற கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும், வாய்ப்புகளையும் எந்த அரசியல் கட்சி முன் வைக்கிறதோ, நிறைவேற்றி தர உறுதிப்பூண்டிருக்கிறதோ அந்த ஆட்சியை பெரும்பான்மையான மக்கள் கண்களை மூடிக் கொண்டு ஆதரிக்க தயாராக இருக்கிறார்கள்.


மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய ஒரு கட்சியாக பாஜக.வை முன்னெடுத்துச் செல்ல, மத்தியில் ஆட்சிப் பீடத்தில் உள்ள தலைவர்கள் முன் வந்தாலே போதும், அடுத்த ஐந்தாண்டுகளிலோ அல்லது அதற்கடுத்த ஐந்தாண்டுகளிலோ தாமரை தமிழகத்தில் மலரக் கூடிய காலத்தை உருவாக்கி விட முடியும். தேர்தல் வியூகம் வகுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற தலைவர்களுக்கு சிந்தனைப்போக்கில் மாற்றம் வராமல், ஆட்டுக்குட்டியை தூலில் போட்டுக் கொண்டும், காவித்துண்டை தலையில் கட்டிக்கொண்டும், நரம்புகள் புடைக்க ஆவேசமாக பேசுகிற ஆபீஸர்ஸை விட, அரசியல் ஞானம் மிகுந்த, அரசியல் அனுபவம் மிகுந்த யதார்த்தவாதிதான் தமிழக பாஜக.வுக்கு தலைமையேற்க வைக்க வேண்டும்.

அதைவிடுத்து, தமிழகத்தில் ஆதிக்க சாதிகளாக உள்ள ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த பிரபலங்களை எல்லாம் பாஜக.வில் சேர்த்து, அதிகாரமிக்க பதவிகள் வழங்கப்பட்டுக் கொண்டே போனால், உள்ளாட்சித் தேர்தல்களில் கூட தாமரை மலராது. அதைவிட, ஜனா கிருஷ்ணமூர்த்தி, இல கணேசன் போன்றவர்களால் உருவாக்கப்பட்டுள்ள தேசப் பக்தி கொண்ட பாஜக கட்டமைப்பும் சிதிலமாக்கப்பட்டுவிடும் ஆபத்து ள்ளது என்று உணர்ச்சிமிகுந்த சிறிய சொற்பொழிவை ஆற்றி விடை பெற்றார் இந்துத்துவா தீவிர ஆதரவு பிரமுகர்..

அப்படின்னா தாமரை எப்போதும் தமிழகத்தில் மலரவே மலராதா….