Mon. Nov 25th, 2024

வட மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்கிட திண்டிவனம் மற்றும் செய்யார் பகுதிகளில் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் இரண்டு பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தி.மு.க, அதி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் 22 உறுப்பினர்கள் கருத்துக்களை எடுத்து வைத்துள்ளார்கள்.

அனைத்துக்கட்சி உறுப்பினர்களின் வாதத்தை நான் ஆலோசனைகளாக எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால் நான் அண்ணாவின் அரசியல் வாரிசு. முத்தமிழறிஞர் கலைஞர் கொள்கை வாரிசு.ஐந்தாண்டு ஆட்சி செய்யும் அரசு, கொள்கை திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது.

ஆளுநர் உரை முன்னோட்டம்தான் அதாவது ஆளுநர் உரை டிரெய்லர் தான். முழு நீள திரைப்படத்தை திரையில் காண்பர் என்பது போல, மேற்கொண்டு வரும் பயணத்தில் சவால்கள், அதை சந்திக்கும் சவால்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும். ‘இல்லை’ என்ற சொல்லே இல்லாமல் ஆக்கி இருக்கிறோம் இந்த ஆட்சியில்! கொரோனா தொற்றை அ.தி.மு.க அரசு கட்டுப்படுத்தியதாக கூறும் வாதம் மிக மிக தவறானது.

கடந்த காலங்களில் மக்கள் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டுவந்த வேளாண் திருத்தச் சட்டங்கள், இந்தியக் குடியுரிமை சட்டம், மீத்தேன்நியூட்ரினோ- கூடங்குளம் திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்டிருந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

தமிழ் நாட்டில் முதன்மையான நூறு திருக்கோவில்களைப் பழமை மாறாமல் புனரமைப்புச் செய்திடவும், திருக்கோவில் குளங்கள் மற்றும் திருத்தேர்களைச் சீரமைப்புச் செய்து, திருவிழாக்கள் நடத்திடவும் இந்த வருடம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு திரும்பப் பெறும்!

அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள். தி.மு.க யாராலும் அடக்க முடியாத யானை; நான்கு கால்கள் தான் யானையின் பலம். அதேபோல், தி.மு.க-வுக்கு சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமை, மொழிப் பற்று ஆகிய 4 கொள்கைகள் தான் பலம்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.