Fri. Nov 22nd, 2024

சுப. உதயகுமாரன் விடுத்துள்ள அறிக்கை:

Celebratory
தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்..

இடிந்தகரைப் போராட்டத்துக்குப் பின்னர்தான், தினமணி ஆசிரியர் ஐயா கி. வைத்தியநாதன் அவர்களோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டது. போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது அணுசக்திக்கு எதிராக உறுதியான, தெளிவான நிலைப்பாடு எடுத்த தினமணியின் மேனாள் ஆசிரியர் ஐயா ஐராவதம் மகாதேவன் அவர்கள் தனது கைப்பட நீண்ட கடிதங்கள் எழுதினார் எனக்கு. அணுசக்திப் பிரச்சினை குறித்து தினமணியில் வெளிவந்திருந்த தலையங்கங்களின் தொகுப்பையும் அனுப்பித் தந்தார். அந்த பாரம்பரியத்தைப் பின்பற்றி ஐயா வைத்தியநாதன் அவர்களும் போராட்டச் செய்திகளை அதிகம் வெளியிட்டார், தலையங்கங்களும் எழுதினார்.

இதனால் உற்சாகமடைந்த நான் அணுசக்தி குறித்த ஒரு கட்டுரை எழுதி தினமணி நாளிதழின் நடுப்பக்கப் பகுதிக்கு அனுப்பினேன். அதன் பிறகு ஐயா வைத்தியநாதன் அவர்கள் அவ்வப்போது என்னைக் கைப்பேசியில் அழைத்துப் பேசுவார். நாட்டின் மீது, நாட்டு மக்களின் மீது அவருக்கு இருக்கும் கரிசனமும், கவலையும் அந்த உரையாடல்களில் தெள்ளத் தெளிவாக மிளிரும்.

ஓராண்டுக்கு முன்னால், தினமணி நாளிதழின் ‘இளைஞர் மணி’ பகுதியில் “முந்தி இருப்பச் செயல்” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடர் எழுதத் தொடங்கினேன். முதல் கட்டுரை வெளிவந்ததும், ஒரு சில நண்பர்கள் என்னை அழைத்து அது எப்படி சாத்தியமாயிற்று என்று கேட்டார்கள். “உங்களை எப்படி தினமணியில் தொடர்ந்து எழுத அனுமதித்தார்கள்?” என்று வியந்தார்கள்.

சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம் போன்ற எந்த விழுமியத்திலும் நம்பிக்கை இல்லாத, பார்ப்பனீயத்தைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் சில பிற்போக்குச் சக்திகளைப் போலல்லாமல், மனிதர்களை மனிதர்களாக மட்டுமேப் பார்க்கும் முதிர்ச்சியும், பக்குவமும் கொண்டவர் ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள் என்று எடுத்துரைத்தேன்.

முழுக்க முழுக்க என் கட்டுரைகளின் பொருள், எழுத்தின் தரம் போன்றவற்றைத்தான் ஆசிரியர் பார்க்கிறாரேத் தவிர நான் யார், எனது அரசியல் என்ன என்று அவர் கவலைப்படவில்லை என்று சொன்னேன். தினமணியில் பல நடுப்பக்கக் கட்டுரைகளை எழுதியிருக்கும் என்னுடைய இடதுசாரி அரசியல் அவர் நன்றாக அறிந்ததுதான். தினமணியில் சில வலதுசாரிப் பேர்வழிகள் அபத்தமானக் கட்டுரைகள் எழுதும்போது நான் விமரிசிப்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

நான் “முந்தி இருப்பச் செயல்” தொடர் எழுதுவதாக அறிவிப்பு வெளிவந்ததுமே, பல்வேறு தரப்புக்களிலிருந்தும் ஆசிரியருக்கும், அலுவலகத்துக்கும் அழுத்தங்கள் வந்திருக்கின்றன. “அவன் ஒரு தேசத்துரோகி,” “அவன் மீது எவ்வளவு வழக்குகள் இருக்கின்றன தெரியுமா? என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். பெரும்பாலான ஆசிரியர்கள் அந்த அழுத்தத்துக்கு அடிபணிந்திருப்பார்கள். ஆனால் ஆசிரியர் வைத்தியநாதன் அப்படிப்பட்டவரல்ல.

அதே போல, எனது கட்டுரைகளை அவர் எந்தவிதத்திலும் மாற்றியமைக்கவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் என் கட்டுரையிலிருந்த இரண்டு சிறு பத்திகளை நீக்கியிருந்தார்கள். நான் அலுவலகத்தை அழைத்து விசாரித்ததும், கொஞ்ச நேரத்தில் ஐயா வைத்தியநாதன் அவர்களே என்னைக் கைப்பேசியில் அழைத்து, “நான் பார்க்காமலே அது நடந்திருக்கிறது, மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றார். இந்தியாவின் மூத்தப் பத்திரிக்கையாளர்களுள் ஒருவர், புகழ்பெற்ற நாளிதழ் ஒன்றின் ஆசிரியர், இந்தியப் பிரதமர்களே அவரை வெளிநாடுகளுக்கு தங்களுடன் அழைத்துச் செல்லுமளவுக்கு முக்கியமான ஓர் அறிவுசீவி, என்னிடம் அப்படிப் பேசவேண்டியத் தேவையே இல்லை. அவரின் பெருந்தன்மையும், முதிர்ச்சியும், பக்குவமும், தொழிற்திறமும் என்னை நெகிழச்செய்தன.

என்னை நன்கு அறிந்த ஒரு பொதுவுடமைக் கட்சியின் தலைவர் ஒருவர் என்னுடைய நண்பர் ஒருவரிடம், “தினமணிக்காகவே எழுதுவது போல இருக்கிறதே?” என்று கருத்துச் சொல்லியிருந்தார். தினமணிக்காக மட்டுமல்ல, இயல்பாகவே நான் மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், கவியரசு கண்ணதாசன், சுவாமி விவேகானந்தர் போன்றவர்களைப் போற்றுகிறவன். அதற்கோர் அரசியல் காரணமும் உண்டு. நூற்றுக்கு நூறு விழுக்காடு இவர்களை கேள்விகள், விமரிசனங்கள் ஏதுமின்றி அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும், இவர்களையெல்லாம் வலதுசாரி இந்துத்துவவாதிகள் கடத்திச்செல்ல அனுமதிக்கக்கூடாது என்பது என் உறுதியான எண்ணம். மக்கள் மனங்களில் பெரும் மதிப்பும், மரியாதையும் பெற்றிருக்கும் இவர்களின் முற்போக்கு எண்ணங்களை, சிந்தனைகளைப் போற்றிப் பாதுகாத்து, நம்முடைய சீர்திருத்த அரசியலுக்கு செம்மையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவன் நான்.

முற்போக்கு அரசியல், புரட்சி அரசியல் பேசுகிறவர்கள் எல்லோரும் மேற்குறிப்பிட்ட ஆளுமைகளை விமரிசனம் செய்துவிட்டு, விலகிச் செல்லும்போது, அந்த வெற்றிடத்தை வலதுசாரி வெறுப்பாளர்கள் விரைந்து பிடித்துக் கொள்கின்றனர். ஐயன் திருவள்ளுவர், அண்ணல் அம்பேத்கர் வரை அபகரித்துவிட்ட, மனுவாத இந்துத்துவச் சக்திகளால் தந்தை பெரியார், மாவீரன் பிரபாகரன் போன்றோரை அணுக முடியவில்லை. அவர்களின் தலைவர்கள் கோல்வால்கரை, தீன தயாள் உபாத்யாயாவை, ஷ்யாம பிரசாத் முகர்ஜியை அவர்கள் கொண்டாடட்டும். காந்தியை, பாரதியை, கண்ணதாசனை, விவேகானந்தனை அவர்கள் கவர்ந்துசெல்ல விடக்கூடாது.

நான் பார்ப்பனீயத்தை எதிர்க்கிறேனேத் தவிர, பார்ப்பனச் சமூகத்தையோ, அல்லது பார்ப்பனீயம் போற்றும் வேறு எந்தச் சமூகத்தையோ எதிர்க்கும் சாதீயச் சிந்தனை கொண்டவனல்ல. சாதியை, மதத்தை ஒரு பொருட்டாக நான் மதிப்பதே இல்லை. என்னுடைய எழுத்து முயற்சிகளில்கூட, சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர்கள்தான் எனக்கு உறுதுணையாக நிற்கின்றனர்.

நான் எட்டாம்/ஒன்பதாம் வகுப்பு (?) மாணவனாக இருந்தபோது, எனது அம்மா தன்னோடு வேலைபார்த்த ஒருவரின் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றிருந்தார். அங்கே அவரது கணவரும், சி.பி.ஐ. கட்சியின் தோழருமான ஐயா பூதை சொ. அண்ணாமலை எனும் ஓர் அற்புத மனிதரை சந்தித்தேன். ‘கைவிளக்கு’ என்கிற இதழை நடத்திக்கொண்டிருந்த அவர், தனது இதழில் எழுதுகிறாயா என்று என்னிடம் கேட்டார். தோழர் பூதை சொ. அண்ணாமலை அவர்கள் தந்த ஆக்கமும், ஊக்கமும் கல்லூரி நாட்களில் Competition Success Review இதழ் நடத்தியப் போட்டிகளுக்கு கட்டுரைகள் எழுதியனுப்பி, பரிசு வாங்கும் அளவுக்கு என்னை உயர்த்தியது.

எத்தியோப்பியாவின் ஒதுக்குப்புறத்தில் ஒளிந்துகிடக்கும் மலைப்பாங்கான டிக்ரை மாநிலத்தின் யாருமறியா ஊர்களில் 21-வயது பள்ளியாசிரியராகப் பணியாற்றும்போது, ‘குமுதம்’ குழுமத்தின் ஆதரவோடு சென்னையிலிருந்து வெளிவந்த “தமிழ் உலகம்” எனும் மாத இதழுக்கு என்னுடைய எத்தியோப்பிய அனுபவங்கள் குறித்த சில கட்டுரைகளை அனுப்பிவைத்தேன். அந்த இதழின் ஆசிரியர், அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் பி. ஜி. பெரியசாமி அவர்கள் என்னை எத்தியோப்பியாவின் நிருபராக நியமித்து, என்னைப் பற்றிய மிகப் பிரமாதமான ஒரு முன்னுரையுடன் கட்டுரைத்தொடர் ஒன்றை எழுத வைத்தார் (“புயலுக்குப் பின்னே பூந்தென்றல்” எனும் தலைப்பில் ‘காலச்சுவடு’ அந்தத் தொகுப்பை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் புத்தகமாக வெளியிட்டது)..

எத்தியோப்பியாவில் இருக்கும்போது UNESCO Courier இதழிலும், அமெரிக்காச் சென்றதும் பல்கலைக்கழக நாளிதழ்களான The Observer, Ka Leo O’ Hawai’i போன்றவற்றிலும் தொடர் கட்டுரைகள் எழுதினேன். BJP Government Watch எனும் வாஜ்பாய் அரசை கண்காணிக்கும் நடவடிக்கைகளை ஒன்றுபட்டு மேற்கொண்ட நட்பின் அடிப்படையில், திரு. என். ராம் அவர்கள் என்னை The Hindu, Frontline போன்ற இதழ்களில் நிறைய எழுத வைத்தார். திரு. என். ராம், திரு. என். ரவி, திருமதி மாலினி பார்த்தசாரதி அனைவருக்குமே நான் ஒரு செல்லப்பிள்ளையாகவே இருந்தேன். அதே போல, பாகிஸ்தான் நாட்டு இதழ்களான The Friday Times, The Daily Times எனும் வார இதழிலும், நாளிதழிலும் கட்டுரைத்தொடர்கள் எழுதவைத்தார் திரு. நஜாம் சேத்தி அவர்கள்.

தன் வீட்டு வரவேற்பறையில் அமர்த்திவைத்து, தேநீர் தந்து உபசரித்து, ஒரு தந்தை மகனிடம் அறிவுரைப்பது போல, “ஆங்கிலத்தில் மட்டும் எழுதாதே, தமிழிலும் எழுது; அப்போதுதான் தமிழ் மக்களைச் சென்றடைய முடியும்” என்று தமிழில் எழுத என்னை ஊக்குவித்தவர் ஐயா சுந்தர ராமசாமி அவர்கள். ஐயா சு.ரா. அவர்களின் முன்னுணர்வோ என்னவோ, அவர் சொன்னது போலவே, தமிழில் அணுசக்தி குறித்து விகடன் குழுமம் ‘ஜூனியர் விகடன்’ இதழில் எழுதப்பணித்த ‘அணுஆட்டம்’ எனும் கட்டுரைத்தொடர் கூடங்குளம் போராட்டப் பெருநெருப்பைப் பற்றவைப்பதில் பெரும் பங்காற்றியது.

பின்னர் ‘காலச்சுவடு’ இதழில் கட்டுரை எழுதவைத்து, இடிந்தகரைப் போராட்டத்தின்போது ஒரு மிக நீண்டப் பேட்டியை வெளியிட்டு, எனது நூல்கள் சிலவற்றைப் பிரசுரித்து, சூழலியல் பிரச்சினைகள் குறித்து ‘காலச்சுவடு’ இதழில் கட்டுரைத்தொடர் எழுதவைத்து, எனது பல்வேறு போராட்டக்கால நேர்காணல்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டு அளப்பரிய அன்பைக் கொட்டியவர் நண்பர் கண்ணன் அவர்கள்.

தனது ‘கரவொலி’ இதழில் தலைமைத்துவம் பற்றி கட்டுரைத் தொடர் எழுதவைத்த நண்பர் (தற்போதைய அமைச்சர்) மனோ தங்கராஜ் அவர்கள், ‘புதிய வாழ்வியல்’ இதழில் “வீடுதோறும் கலையின் விளக்கம்” என்கிற தலைப்பில் கட்டுரைத்தொடர் எழுதவைத்த அதன் ஆசிரியர் அன்புத்தோழர் ஜெயராணி மயில்வாகனன் அவர்கள், ‘தலித்முரசு’ இதழில் என்னை எழுதவைத்த ஆசிரியர் புனித பாண்டியன் அவர்கள், “இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை” எனும் தொடரை ‘இன்டியன் எக்ஸ்பிரஸ்’ இணைய வெளியில் எழுதவைத்த தோழர் செல்வராஜ் அவர்கள், ‘புதிய விடியல்’ இதழில் என்னைத் தொடர்ந்து எழுதவைக்கும், ‘இலக்கியச் சோலை’ சார்பாக என் புத்தகங்களை வெளியிடும் அருமைத் தோழர்கள் ரியாஸ் அகமது அவர்கள், முகமது இஸ்மாயில் அவர்கள், (நான் கிறித்தவரல்லாத நிலையிலும்) ‘நம்வாழ்வு’ வாரஇதழில் என்னை எழுதவைக்கும் ஆசிரியர் அருட்தந்தை குடந்தை ஞானி அவர்கள், ‘பூவுலகு’ இதழில் கட்டுரைகள் எழுதவைத்து, ‘பூவுலகின் நண்பர்கள்’ சார்பாக எனது நூல்களை வெளியிடும் அன்பிற்கினிய நண்பர், தோழர் கோ. சுந்தரராஜன் அவர்கள், தீக்கதிர் நாளிதழில் என்னை எழுதவைக்கும் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள், தோழர் ராஜேந்திரன் அவர்கள் என ஒரு நீண்ட ஆளுமை அணிவகுப்பே என் மனக்கண் முன்னால் நடக்கிறது.

இடிந்தகரைப் போராட்டத்தின்போதும், அதற்குப் பிறகும், பல பத்திரிக்கைகளும், அவற்றின் ஆசிரியர்களும் என்னை முழுமையாகப் புறக்கணிக்கும் நிலையிலும், துணிச்சலாக என்னை ‘தினமணி’யில் எழுதவைக்கும் ஆசிரியர் ஐயா கி. வைத்தியநாதன் அவர்களுக்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு சுப. உதயகுமாரன் தெரிவித்துள்ளார்..