Wed. Nov 27th, 2024

பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக டெல்லிச் சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, நீட் உள்ளிட்ட அனைத்து தேசிய தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பன உள்பட முக்கிய கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பு 25 நிமிடங்கள் நீடித்த நிலையில், பிரதமர் இல்லத்தில் இருந்து தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன்.

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வைத்தேன்.

உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற வகையில் சந்திப்பு அமைந்தது.

3 வேளாண் திட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

தமிழ்நாட்டின் தேவைக்காக எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று பிரதமர் தெரிவித்தார்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த முதல்வர், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை முழுமையாக தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். தேவைக்கேற்ப தடுப்பூசி வழங்கப்பட்டால், தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 40 நாட்கள்தான் ஆகிறது. தமிழக மக்களின் தேவைகளை அறிந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தேர்தலின் போது அளித்த குடும்ப தலைவிகளுக்கான மாதந்தோறும் வழங்கப்படும் நிவாரணத் தொகை, மதுபானக் கடைகளை படிப்படியாக குறைத்தல் உள்பட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

திமுக.வுக்கு வாக்களித்த மக்கள் மகிழ்ச்சியடையும் வகையிலும், திமுக.வுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று மற்றவர்கள் வருத்தம் அடையும் அளவிற்கு திமுக ஆட்சியின் செயல்பாடுகள் அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.