சிவசங்கர் பாபா மீது பாலியல் வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார், டெல்லியில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை இன்று காலை கைது செய்துள்ளனர்.
டோரடூனில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிவசங்கர் பாபா சிகிச்சைப் பெற்று வருவதாக வெளியான தகவலையடுத்து, சிபிசிஐடி போலீசார் சென்னையில் இருந்து டோரடூன் புறப்பட்டுச் சென்றனர். ஆனால், தமிழக போலீசார் வருவதை அறிந்து அங்கிருந்த தப்பியோடிய சிவசங்கர் பாபா டெல்லியில் உள்ள தனது பக்தையின் வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
அதனைத்தொடர்ந்து, காசியாபாத்தில் அவர் தங்கியிருந்த போது சிபிசிஐடி போலீசார் மடக்கிப் பிடித்தனர். போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பிப்பதற்காக, சிவசங்கர் பாபா, தலைமுடியை முழுமையாக வழித்து, மொட்டைத் தலையுடன் தனது கெட்டப்பை மாற்றியிருந்தார். இருப்பினும், அவரை அடையாளம் கண்டு, கைது செய்துள்ளனர், தமிழக சிபிசிஐடி போலீஸார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், டெல்லியில் உள்ள சாகேத் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, வழக்கு விசாரணைக்காக தமிழகம் அழைத்துச் செல்ல அனுமதி கோரினர்.
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்துச் செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, நாளை அல்லது நாளை மறுநாள் சிவசங்கர் பாபா சென்னை அழைத்து வரப்படவுள்ளார்.
பாலியல் வன்முறை தொடர்பான நிகழ்வுகள் சுஷில் ஹரி பள்ளி வளாகத்திற்குள் நடைபெற்றுள்ளதால், அந்த பள்ளியை உள்ளடக்கிய பகுதி செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குள் வருவதால், வரும் சனிக்கிழமையன்று அந்த பள்ளியின் நிறுவனராகவும் உள்ள சிவசங்கர் பாபா, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.