Sun. Nov 24th, 2024

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொத்து கொத்தாக மாற்றப்பட்டு வருகிறார்கள். மடை திறந்துவிட்ட வெள்ளம் போல நடைபெற்று வரும் இந்த இட மாற்ற பட்டியலில், மாநகராட்சிகளில் ஆணையராக பணியாற்றிக் கொண்டிருந்த ஐஏஎஸ் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.

இப்படி இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக, அந்த துறையின் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவிடம், முதலமைச்சரின் அலுவலகத்தில் உள்ள உயரதிகாரிகள் ஒரு வார்த்தைக் கூட கலந்து ஆலோசிக்கவில்லை என்ற வருத்தம் தான், நகராட்சித் துறை அமைச்சரான கே.என்.நேருவுக்கு அதிகமாக உள்ளதாக அவரது விசுவாசிகள் ஆதங்கத்தோடு பேசுகிறார்கள்.

நகராட்சித் துறை அமைச்சரான கே.என்.நேருவின் சொந்த மாவட்டமான திருச்சியில் உள்ள மாநகராட்சியில் கூட, அமைச்சர் விரும்பிய ஐஏஎஸ் அதிகாரிக்கு பணியிட மாற்றம் கிடைக்கவில்லை என்று கூறும் திருச்சி திமுக உடன்பிறப்புகள், தங்களுடைய அண்ணன் கே.என்.நேருவுக்கு ஏற்பட்டுள்ள அவமரியாதையை கண்டு பொங்குகிறார்கள்.

நகராட்சி அமைச்சராக கே.என்.நேரு நியமிக்கப்பட்ட நேரத்தில்கூட, கடந்த காலங்களில் ஊரக வளர்ச்சியோடு இணைத்து நகராட்சித்துறையும் சேர்த்துதான் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்கள். கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், மாவட்ட பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என கிட்டதட்ட அனைத்து மாவட்டங்களையும் முழுமையாக ஆளும் அளவுக்கு இந்த துறையின் செல்வாக்கு அதிமாக இருக்கும்.

முந்தைய ஆட்சிக் காலங்களில், குறிப்பாக திமுக ஆட்சிக்காலத்தில் கூட இல்லாத மாற்றமாக தற்போது, ஊரக வளர்ச்சித்துறை தனியாகவும், நகராட்சித்துறையை தனியாகவும் பிரித்து இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதைக் கண்டு முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மிகவும் வருத்தமடைந்துள்ளார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

நகராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய இரண்டு பிரிவுகளின் நிர்வாகம் மட்டுமே அமைச்சர் கே.என்.நேரு வசம் இருக்கும். மிக,மிக குறைந்தளவான நிர்வாக எல்லையைக் கொண்ட இந்த துறைகளை வைத்துக் கொண்டு பெரிய அளவில் சாதனைகள் செய்து விட முடியாது என்பதாலும், தமிழகம் முழுவதிலும் இருந்து உதவிக் கேட்டு தன்னை தேடி வரும் திமுக தொண்டர்களுக்கு எந்த உதவியையும் தாராளமாக செய்து விட முடியாது என்பதும்தான் அமைச்சர் கே.என்.நேருவுக்கு ஏற்பட்டுள்ள கவலை என்கிறார்கள் திருச்சி திமுக நிர்வாகிகள்.

ஜல்லிக்கட்டு காளை மாதிரி, திறந்த வெளி மைதானத்தில் எல்லா திசைகளிலும் புகுந்து விளையாடும் அளவுக்கு செயல் வீரராக களப்பணியாற்றக் கூடிய ஆற்றல் மிக்க அமைச்சர் கே.என்.நேருவுக்கு, வயோதிக காலத்தில் பொழுதை கடத்தும் அளவுக்கு, ஏதோ பெயரளவில் ஒரு துறையை ஒதுக்கி, அந்த துறையையும் கூட முழுமையாக ஆளும் வகையிலான அதிகாரத்தையும் வழங்காமல், தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான மூத்த ஐஏஎஸ் உயரதிகாரிகளே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறாராம் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிமாவட்ட சுற்றுப் பயணங்களுக்கு உடன் செல்லும் வாய்ப்பு கிடைத்த போதும் கூட தனது மனக்குறையை வெளிப்படையாக சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கும் நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம், முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் இருந்து மகிழ்ச்சியையும், எழுச்சியையும் பார்க்க முடியவில்லை என்று வேதனைப்படுகிறார்கள் திருச்சி திமுக முன்னணி நிர்வாகிகள்…