Sun. Nov 24th, 2024

திமுக தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு ஆத்மார்த்தமான தோழராக விளங்கி வரும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, கடந்த பல நாட்களாக திருவண்ணாமலையிலேயே முகாமிட்டிருக்கிறார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு செல்வதைக் கூட அமைச்சர் குறைத்துக் கொண்டிருக்கிறார் என்கிற தகவல், அவரது ஆதரவாளர்களாலேயே பரபரப்பட்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் குட் புக்கிலிருந்து அமைச்சர் எ.வ.வேலு விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் நிதி விவகாரத்தில் திமுக தலைவர் குடும்பத்தின் நம்பிக்கையை இழந்து விட்டார் என்றும் பரப்பப்படும் தகவல், திருவண்ணாமலை மாவட்டத்தை கடந்தும் சென்னையிலும் மையம் கொண்டிருப்பதுதான், திமுக முன்னணி நிர்வாகிகளிடையே இன்றைய ஹாட் நியூஸ்..

அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த தகவலின் உண்மைத்தன்மையை அறிய விசாரணையில் குதித்தோம். அண்ணா அறிவாலயத்தில் உள்ள மூத்த நிர்வாகி, கலகலவென சிரித்தவாறே அனைத்து வில்லங்கத்தையும் கொட்டினார்.

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்த கடந்த 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிடப்பட்ட போதுகூட, அங்கு பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலு தென்படவில்லை. மேலும், அதற்கு முன்தினம், (11 ஆம் தேதி) திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து, கால்வாய்கள் தூர் வாரும் பணியை ஆய்வு செய்த போதும் அமைச்சர் எ.வ.வேலு உடனில்லை.

இந்த இரண்டு நிகழ்வையும் வைத்து, அமைச்சர் எ.வ.வேலு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் குட் புக்கில் இல்லை என்று அவருக்கு நெருக்கமானவர்களே வதந்தியை பரப்பி விட்டு விட்டார்கள்.

அதைவிட முக்கியமாக, முதலமைச்சரின் கொரோனோ தடுப்பு நிதி திரட்டலுக்கான எந்தவொரு நிகழ்விலும் அமைச்சர் எ.வ.வேலு தலையை காட்டவே இல்லை. அவர் துறை சார்பாகவும் நிதி வழங்கவும் இல்லை. திருவண்ணாமலை மாவட்டம் உள்பட அவருக்கு நெருக்கமான தொழிலதிபர்களை அழைத்து வந்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நிவாரண நிதி வழங்குவது போன்ற எந்தவொரு நடவடிக்கையிலும் அமைச்சர் எ.வ.வேலு ஆர்வம் காட்டவில்லை என்றும் தகவல் பரப்பப்பட்டது.

இப்படியொரு தகவல் பரப்பப்பட்டு வந்த நிலையில்தான், முதல்முறையாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் எ.வ.வேலு தலைமைச் செயலகத்தல் சந்தித்து, அவரது துறை சார்பாக நிவாரண நிதி வழங்கினார்.

இருந்தாலும் கூட, அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பரப்பப்படும் வதந்தி நின்ற பாடில்லை. அதற்கு காரணத்தை தேடிய போதுதான் உண்மை தெரியவந்தது. அமைச்சர் எ.வ.வேலுவிடம் தற்போது பணிபுரிந்து வரும் அரசியல் உதவியாளர் போல செயல்பட்டுக் கொண்டிருப்பவர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர். இவர்தான் அமைச்சர் எ.வ.வேலுவிடம் எப்போதுமே நிழல் போல ஒட்டிக் கொண்டிருக்கிறார்.

மேலும், அமைச்சரின் இரண்டு புதல்வர்கள் பொறியாளர் குமரன், மருத்துவர் கம்பன் ஆகியோரும் வளையம் போல தங்களது தந்தைக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, கடந்த முறை எ.வ.வேலு அமைச்சராக இருந்த போது, சாவல்பூண்டி சுந்தரேசன் என்பவர் இருந்தவர். இவர் திமுக தலைமைக் கழக பேச்சாளரும் கூட. இப்படிபட்ட அறிமுகத்தை கொடுத்தால் படிப்பவர்களுக்கு எளிதாக புரியாது. இளமை ஊஞ்சலாடும் வயதான 67 வாலிபரான சுந்தரேசன் 27 வயதான இளம்வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட மிக,மிக நல்லவர் என்றால், அவரது முகம் பளிச்சென எல்லோருக்கும் நினைவுக்கு வந்துவிடும்.

இளம்வயது திருமண விவகாரத்தால் சுந்தரேசனை விலக்கி வைத்தார் எ.வ.வேலு. அந்த கோபத்தில், எ.வ.வேலுக்கு எதிரான பல்வேறு ஊழல் புகாரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் சுந்தரேசன். அதனால், இதுபோன்ற சிக்கல் எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காக திருமதி ஜீவா வேலுவின் ஆலோசனையின் பேரில்தான் கரூர் சுரேஷும், அவர்களது இரண்டு புதல்வர்களும் அமைச்சரை வளையம் போல பாதுகாக்க தொடங்கி விட்டார்கள். கடந்த காலங்களில் தொண்டர்கள் புடை சூழ பவனி வந்த எ.வ.வேலு, தற்போது தனது மனைவியின் ஆலோசனையை கேட்டு நடப்பதால், திமுக நிர்வாகிகள் தொடர்பு எல்லைக்கு அப்பால் நின்றுக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுவிடடது.

இந்த வளையத்திற்கு அடுத்து மற்றொரு தடுப்புச்சுவரும் இருப்பதால், திருவண்ணாமலை மாவட்ட திமுக நிர்வாகிகள் கோபமாகி விட்டார்கள். அமைச்சர் எ.வ.வேலுவின் அரசியல் உதவியாளராக சந்திரசேகரன் என்பவர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், அமைச்சர் பொன்முடியும் ஏற்கெனவே அரசியல் உதவியாளராக பணிபுரிந்தவர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் இவர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு திமுக நிர்வாகிக்கு கூட, அரசியல் உதவியாளர் பணி வழங்காமல், கரூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை தனது அருகில் வைத்துக் கொண்டதால், அமைச்சர் எ.வ.வேலு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் அவரது சொந்த மாவட்ட திமுக நிர்வாகிகள்.

சுரேஷ், சந்திரசேகரன் உள்பட நால்வர் அணியை கடந்து அமைச்சர் எ.வ.வேலுவை சந்திப்பது என்பது இப்போது குதிரைக்கொம்பாக மாறியிருக்கிறது. திருவண்ணாமலை நகர திமுக செயலாளர் கார்த்திவேல் மாறன், திருவண்ணாமலை நகராட்சி முன்னாள் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் அமைச்சர் எ.வ.வேலுவை பார்க்கச் சென்ற போது கூட, கொரோனோவை காரணம் காட்டி, நால்வர் அணி தடை போட்டு விட்டது.

அமைச்சர் எ.வ.வேலுவை எளிதாக சந்திக்க முடியாமல் நந்தி போல நால்வர் அணி இருப்பதால் ஆத்திரமடைந்திருக்கும் திமுக நிர்வாகிகள், அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிராக வதந்திகளை பரப்பி விட ஆரம்பித்திருக்கிறாகள்.

அவர்களின் புரளியை உண்மை என்று நம்பும் அளவிற்குதான் அமைச்சர் எ.வ.வேலுவின் கடந்த ஒரு வாரத்திற்கு மேலான செயல்பாடுகளும் அமைந்துவிட்டன. அமைச்சராக பதவியேற்ற ஏற்ற சில நாட்களிலேயே கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு விட்டார். சென்னையிலேயே தங்கி சிகிச்சை பெற்ற போது அவரின் ஆக்சிஜன் அளவு அபாய கட்டத்தை தொட்டிருக்கிறது. நல்லவர்களின் பிரார்த்தனையும், மருத்துவர்களின் அயராத சிகிச்சைகள் மூலம் அபாயக் கட்டத்தை கடந்து, விரைவாக குணமடைந்த போதும், ஒரு வாரத்திற்கு மேலாக அமைச்சர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

கொரோனோ தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்ததால்தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளில் இருந்து அமைச்சர் எ.வ.வேலு ஒதுங்கியிருந்தாரே தவிர, வேறு எந்தவொரு தனிப்பட்ட காரணமும் இல்லை என்று கூறுகிறார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிக, மிக நெருக்கமான முன்னணி தலைவராக இருந்த எ.வ.வேலுவுக்கு, திமுக அமைச்சரவையில் செல்வாக்கு மிக்க இரண்டு துறைகள் வழங்கப்பட்டன. அதுவும், கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி வசம் இருந்த இரண்டு துறைகளும் இப்போது, எ.வ.வேலுவிடம்தான் இருக்கிறது.

திமுக அமைச்சரவையில் எ.வ.வேலுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பார்த்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், முன்னணி தலைவர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்றவர்கள் கூட மனதளவில் வருத்தப்பட்டதாக தகவல்கள் உண்டு.

இப்படி மிக, மிக முக்கியத் துறைகளை தன் வசம் வைத்திருக்கும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, கடந்த பத்து நாட்களுக்கு மேலாக, துறை ரீதியான ஆய்வுக் கூட்டம் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கைகளிலும் கூட சென்னை தலைமைச் செயலகத்தில் அமர்ந்து மேற்கொள்ளாமல், அமைதியாக இருந்து வருவதை அவரது எதிர்தரப்பு வசமாக பயன்படுத்திக் கொண்டது.

அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிராக கடந்த காலங்களிலும் இதுபோன்ற வதந்திகள் நிறைய முறை றெக்கை கட்டி பறந்து இருக்கின்றன. அதையெல்லாம் தகர்த்து எறிந்துவிட்டுதான், திமுக தலைமையுடனான தனது நெருக்கத்திற்கு எந்த பங்கமும் வராமல் பார்த்துக் கொண்டு வருகிறார்.

திமுக தலைமையிடத்திலும், அவர்களது குடும்ப உறவுகளிடமும் தான் வைத்திருக்கும் விசுவாசத்தை எந்த சக்தியாலும் தகர்த்து விட முடியாது என்ற அளவுக்குதான் அமைச்சர் எ.வ.வேலு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். திமுக தலைமையோடு அமைச்சர் எ.வ.வேலுவுக்கு இருக்கும் நெருக்கத்தை உடைக்கவும் அவருக்கு எதிராக முன்னணி தலைவர்கள் ஒன்றிரண்டு பேர் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதைப் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருப்பவர்தான் அமைச்சர் எ.வ.வேலு.

திமுக எனும் மாபெரும் இயக்கத்தில் இன்றைய உச்சத்திற்கு வருவதற்கு அமைச்சர் எ.வ.வேலு கடுமையாக உழைத்திருக்கிறார். அதனால், அந்த உச்சத்தில் இருந்து ஒரு அடி கூட சறுக்கி விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்தாக இருந்து வருபவர் எ.வ.வேலு. அவரைப் பற்றி பரப்பப்படும் வதந்திகளை ரசிக்கும் மனநிலைக்கு அவரே வந்துவிட்டார் என்று கூறி விடை கொடுத்தார் அண்ணா அறிவாலய நிர்வாகி.