லஞ்ச ஒழிப்பு மற்றும் தடுப்புத்துறையில் நியமிக்கப்படும் ஒவ்வொரு ஐபிஎஸ். அதிகாரியின் பின்னணியும் பார்த்தால், அக்னி வெயிலில் நிற்பதைப் போல தகதகக்க வைக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் மாநிலத்தில் அமைச்சராக இருந்தபோது, போலி என்கவுன்டர் வழக்கில் அவரை அதிரடியாக கைது செய்தவர், பி.கந்தசாமி ஐபிஎஸ்.
அன்று அவர் மத்திய குற்றப்புலனாய்வுத் துறையில் எஸ்.பி.ஆக பணிபுரிந்தார்.
அமைச்சரையே கைது செய்யும் துணிச்சல் மிக்க பி.கந்தசாமி ஐபிஎஸ்.ஸைதான் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் இயக்குனராக (டிஜிபி) தமிழக அரசு அண்மையில் நியமித்தது.
அந்த துறையின் உயரதிகாரியாக பொறுப்பு ஏற்ற டிஜிபி கந்தசாமி, தனது நிர்வாகத்தின் கீழ் பணிபுரிவதற்காக நேர்மையான, துணிச்சலான உயரதிகாரிகளை தேர்வு செய்து வருகிறார்.
அவரின் தலைமைக்கு கீழ் அணிவகுக்கும் ஒவ்வொரு அதிகாரிகளும் மாசு மருவற்ற காவல் துறை அதிகாரிகளாக இருப்பதுதான், தமிழகத்தையும் கடந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
டிஜிபி கந்தசாமி ஐபிஎஸ் தேர்ந்தெடுத்த வைரத்தில் ஒருவர், ஐஜி அந்தஸ்திலான பவானீஸ்வரி.
முந்தைய திமுக ஆட்சியின் போது சிபிசிஐடியின் சிறப்பு புலானய்வுப் பிரிவின் எஸ்.பி.யாக பணியாற்றியிருக்கிறார் பவானிஸ்வரி ஐபிஎஸ்.
அப்போது அந்த துறையின் ஐஜி ஆக பணியாற்றியவர் துக்கையாண்டி.
அதே துறையில் டிஐஜி ஆக பணியாற்றியவர் குணசீலன் ஐபிஎஸ்.
இந்த மூவர் அணி, அன்றைய காலகட்டத்தில் பல்வேறு வழக்குகளில் அதிரடி காட்டி, செல்வாக்குமிக்கவர்களை எல்லாம் தயங்காமல் சிறைக்கூடத்திற்கு அனுப்பி வைத்தது.
2006 ஆம் ஆண்டில் சிபிசிஐடி துறையில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியபோதே, குளித்தலை ஆசிரியை கொலை வழக்கில் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகளின் தலையீடுகள் இருந்த போதும் கூட, உண்மையான குற்றவாளிகளை தேடி தேடி கைது செய்து நீதிதேவதையின் முன்பு நிறுத்தி தண்டனைப் பெற்று தந்தவர், பவானிஸ்வரி ஐபிஎஸ், .
கண்ணியம் மிக்க காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் நேர்மையாகவும், துணிச்சலுடன் பணியாற்றுவதுதான் அவரது ஸ்டைல். இதுவரை அவர் பணிபுரிந்து வந்த அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய ஐஜி அந்தஸ்தில் உள்ள பவானீஸ்வரி தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறையில் எஸ்.பி.ஆக நியமிக்கப்பட்டுள்ள மற்றொரு அதிகாரியான ஷியாமளா தேவி ஐபிஎஸ்.ஸும், திறமையான, நேர்மையான அதிகாரி என பெயரெடுத்தவர்தான்.
திறமையான, நேர்மையான அதிகாரிகளை, குறிப்பாக பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை தனது படையில் சேர்த்து வரும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பி.கந்தசாமியின் மற்றொரு தேர்வும்,
காவல்துறையில் உள்ள உயரதிகாரிகளின் விழிகளையே விரிய வைத்திருக்கிறது.
டிஐஜி அந்தஸ்தில் சட்டம் ஒழுங்குப் பிரிவில் சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றி வந்த லட்சுமி ஐபிஎஸ், கடந்த மாதம் சொந்த விருப்பத்தின் பேரில் காவல்துறைப் பணியில் இருந்து விலகுவதாக கூறி காவல்துறை தலைமை இயக்குநருக்கு திடீரென்று பதவி விலகம் கடிதத்தை அனுப்பி வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
நேர்மையான அதிகாரியான லட்ஜமி ஐபிஎஸ்.க்கு இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலம் இருக்கும் போது ஏன் திடீரென்று அவர் காவல் துறை பணியில் இருந்து விலகுகிறார் என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர்.
அவரின் பணி விலகல் கடிதத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு லட்சுமி ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்பு மற்றும் தடுப்புத்துறையில் இணை இயக்குனர் பதவியில் நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தான், தமிழக காவல்துறையில் ஹாட் நியூஸ் ஆக இருந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி, 1997 ஆம் ஆண்டில் குரூப் 1 தேர்வு மூலம் காவல்துறையில் அதிகாரியாக சேர்ந்தார். திறமையுடனும், நேர்மையுடனும் பணியாற்றியதால் குறுகிய காலத்திலேயே ஐபிஎஸ் அந்தஸ்து அவருக்கு கிடைத்தது. சட்டத்திற்கு மட்டுமே தலை வணங்கும் லட்சுமி ஐபிஎஸுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பான வாய்ப்புகள் காத்திருந்தன.
காவல்துறையின் தலைமை உத்தரவிட்டால், அந்த ஆணைக்கு கட்டுப்பட்டு செயல்படுவதையே தனது ஸ்டைலாக கடைப்பிடித்து வருபவர், லட்சுமி ஐபிஎஸ்.
அரசியல் விளையாட்டுகளுக்கு அடிபணியாத லட்சுமி ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத்துறையில் டிஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டிருப்பது, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா.. லட்சுமி ஐபிஎஸ்.ஸின் கடந்த கால செயல்பாடுகளை முதல்வர் அறிந்திருப்பாரா? முதல்வருக்கு நெருக்கமான உறவினரின் நிறுவனத்திற்குள்ளேயே புகுந்து கண்ணாமூச்சி காட்டியவர் லட்சுமி ஐபிஎஸ் என்று தெரிந்த பிறகும், லஞ்ச ஒழிப்புத்துறையில் லட்சுமி ஐபிஎஸ்.ஸுக்கு பணிமாறுதல் வழங்க முன்வந்தாரா முதல்வர்? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள் காவல்துறையில் பணியாற்றி வரும் திமுக ஆதரவு அதிகாரிகள்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிட மாற்றங்களில் முதல்வரோ, அவரது குடும்பத்தினரோ உண்மையிலேயே தலையிடுவதில்லை என்பதை லட்சுமி ஐபிஎஸ்.ஸின் நியமனத்தின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள் நேர்மையான காவல்துறை உயரதிகாரிகள்.
அப்படியென்ன அதிரடி ஆட்டம் காட்டியிருக்கிறார் லட்சுமி ஐபிஎஸ்.என்று தானே கேட்கிறீர்கள்..
லட்சுமி ஐபிஎஸ்.ஸின் வீர தீர செயல்களை அறிந்து கொள்ள, 2013 ஆம் ஆண்டிற்கு தான் நாம் செல்ல வேண்டும்.
சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி ஐபிஎஸ், மைலாப்பூர் சரகத்தில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது சன் டிவி .யில் பணியாற்றி வந்த பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர், அந்த தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ராஜாவுக்கு எதிராக பாலியல் சித்ரவதை தொடர்பான புகாரை அப்போதைய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜிடம் வழங்கினார்.
அப்போதைய அதிமுக ஆட்சியில் சன் டிவி தொடர்பான விவகாரம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலியல் புகார் விவகாரம் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. புகாரில் உண்மையிருந்தால், உரிய நடவடிக்கை எடுங்கள் என காவல்துறைக்கு சிக்னல் கொடுக்கிறார் செல்வி ஜெயலலிதா.
புகாரின் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய அடையாறு துணை கமிஷனர் சுதாகரிடம் பொறுப்பு ஒப்படைக்கிறார் அன்றைய போலீஸ் கமிஷனர் ஜார்ஜ். செய்தி ஆசிரியர் ராஜாவுக்கு எதிரான புகாரை ரகசியமாக விசாரிக்கத் தொடங்கினார் சுதாகர் ஐபிஎஸ். அந்த நேரத்தில்தான் திடீர் திருப்பம் ஏற்படுகிறது.
பாலியல் வன்முறை தொடர்பான புகாரை நேர்மையான ஒரு பெண் காவல் அதிகாரி விசாரித்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுக்கப்பட்டு, மைலாப்பூர் துணை கமிஷனரான லட்சுமியிடம் விசாரணை பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.
காதும் காதும் வைத்த மாதிரி விசாரணையை முடித்த லட்சுமி ஐபிஎஸ்., கமிஷனர் ஜார்ஜூக்கு ரிப்போர்ட் செய்கிறார்.
சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாவை ஒரு சில மணிநேரங்களில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடையுங்கள் என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிடுகிறார்.
கைது நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக ராஜா தரப்பில் உயர் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், காவல் ஆய்வாளர் தலைமையில் ஒரு படையை சன் டிவி அலுவலகத்திற்கு அனுப்பி ரகசியமாக கண்காணிக்க உத்தரவிடுகிறார் துணை கமிஷனர் லட்சுமி ஐபிஎஸ்.
விசாரணைக்கு ஆஜராகுமாறு மைலாப்பூர் காவல்நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்படுகிறது. தனக்கு நெருக்கமான உயரதிகாரிகளை ராஜா தொடர்பு கொண்டபோது, பெயரளவுக்குதான் விசாரணை நடக்கும், கைது செய்யும் அளவுக்கு எல்லாம் போக மாட்டார்கள் என்று தைரியம் கொடுக்கிறார்கள்.
அதனை நம்பி மைலாப்பூர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகிறார் ராஜா. அவரிடம் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் லட்சுமி ஐபிஎஸ்.ஸுக்கு அவருக்கு நேரடி மேல் அதிகாரியான இணை ஆணையர் ரவிக்குமாரிடம் இருந்து போன் வருகிறது.
ராஜாவை சுமுத்தாக கேன்டல் செய்யுங்கள். கைது நடவடிக்கை எடுக்காதீர்கள் என்று மிரட்டும் தோணியில் பேசுகிறார்.
தனது உயரதிகாரிக்கே பதிலடி கொடுக்கும் வகையில், சார், கமிஷனர் (ஜார்ஜ்) சொல்லியிருக்கிறார். நீங்கள் அவரிடம் பேசுங்கள் என்று மறுப்பு தெரிவித்துவிட்டு, கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்திய கையோடு, தனது அலுவலகம் முன்பு குவிந்திருக்கும் சன் டிவி செய்தியாளர்களுக்கு பெப்பே காட்டிவிட்டு ராஜாவை கைது செய்து பின் வாசல் வழியாக அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தவர்தான் லட்சுமி ஐபிஎஸ்.
அரசியல் செல்வாக்கு மிக்க சன் டிவி நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த செய்தி ஆசிரியர் ராஜாவையே, அழகாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கில்லி போலீஸ் ஆபிஸர் லட்சுமி ஐபிஎஸ் என்று அன்றைய தினமே பெண்ணியவாதிகள் கொண்டாடினார்கள்.
எவ்வளவு செல்வாக்கு மிக்க நபராக இருந்தாலும் கூட துணிந்து கைது செய்து சிறையில் அடைக்கும் தில்லான ஆபிஸர் லட்சுமி ஐபிஎஸ்.ஸின் சேவையை வீணாக்கக் கூடாது என்று எண்ணியே காவல்துறை தலைமை அவரை மீண்டும் பொறுப்பான பதவியில் அமர்த்தி அழகுப் பார்த்திருக்கிறது.
சன் டிவி விவகாரத்திலேயே துணிந்து நடவடிக்கை எடுத்தவர் லட்சுமி ஐபிஎஸ் என்பது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நிச்சயம் தெரிவிக்கப்பட்டிருக்கும். தமிழ்நாடு காவல்துறையை, உயரதிகாரிகள் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதித்திருக்கிறார் என்பதே, நேர்மையான ஆட்சியைத் தருவோம் என்று பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை உண்மையாகவே நிறைவேற்ற திமுக அரசு பாடுபடுகிறது என உணர்ந்து கொள்ள முடிகிறது என்கிறார்கள் அரசியல் கள செயற்பாட்டாளர்கள்.
ஆக மொத்தத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களை கூண்டோடு அள்ளுவதற்கு திறமை வாய்ந்த, எதற்கும் துணிந்த,யாருக்கும் அடிபணியாத டீம் ஆக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை தயாராகி வருகிறது.. ஆகஸ்ட் பிறந்தால் அதிமுக கூடாரத்தில் அதிர் வேட்டுகள் கேட்கும் என்பது உறுதியாக தெரிகிறது…
ராஜாவை சிறைக்கு அனுப்பி வைத்த அவரது விசுவாசிகள்..
தாரை இளதி, ஊடகவியலாளர்…
சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்ட நாளில் நடைபெற்ற நிகழ்வுகள் இன்றைக்கும் எனக்கு பசுமையாக இருக்கிறது. அப்போது நான் ஜெயா டிவியில் பணியாற்றிக் கொடிருந்தேன். இரவுப் பணி முடித்து, காலையில் மயிலாப்பூரில் உள்ள இல்லத்திற்கு திரும்பி, அன்றைக்கும் இரவுப் பணி என்பதால் பகலிலேயே தூங்கிக் கொண்டிருந்தேன்.பகல் ஒரு மணி வாக்கில் கைபேசி சிணுங்கியது. பெண் செய்தி வாசிப்பாளரின் பெயரைச் சொல்லி, கமிஷனர் ஆபிஸில் ராஜாவுக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்திருக்கிறார் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார், நண்பர் ஒருவர்.
அந்த நிகழ்வுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியில் பணிபுரிந்த போது, செய்தி தயாரித்து வழங்கும் பிரிவில் பெண் செய்தி வாசிப்பாளரின் பெயரைக் கொண்ட அப்பாவி இளம்பெண் ஒருவரும் பணிபுரிந்துக் கொண்டிருந்தார். அவர்தான் சிக்கலில் மாட்டிக் கொண்டாரா என்று பதறியபடி, எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகம் சென்று ஒன்றிரண்டு உயரதிகாரிகளை சந்தித்தேன். நான் பயந்த மாதிரி அந்த அப்பாவி பெண்ணுக்கு சிக்கல் இல்லை. செய்தி வாசிப்பாளரை பற்றி எனக்கும் எதுவும் தெரியாது. 45 நிமிடம் அங்கிருந்த போது, ராஜாவை இன்று மாலைக்குள் கைது செய்ய போகிறார்கள் என்று உறுதியான தகவல் கிடைத்தது.
அதேநேரத்தில், சன் டிவி செய்தியாளர்கள் சிலர், ராஜாவின் விசுவாசிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், ராஜாவை கைது நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்ற, முயற்சித்துக் கொண்டிருந்தது குறித்தும் தகவல் சொன்னார்கள். இரவுப் பணிக்கு செல்ல வேண்டும் என்று மைலாப்பூருக்கு மெரினா கடற்கரைச் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் திரும்பினேன். சாந்தோம் கிறிஸ்துவ தேவாலயம் சிக்னலில் இடது பக்கம் திரும்பி கச்சேரி சாலையில் பயணித்தேன். அப்போது சிறிது தூரத்திலேயே எனது வலது பக்கம் சாலையோரம் இருந்த பெட்டிக் கடை ஒன்றின் முன்பு ராஜாவும், செய்தியாளர் ராஜேந்திர பிரசாத்தும் நிற்பதை பார்த்தேன். கொஞ்ச தூரம் சென்ற நான் பழைய பாசத்தில் அணிந்திருந்த தலைக்கவசத்தை கழற்றி விட்டு, வாகனத்தை திருப்பி அவரை நோக்கி சென்றேன்.
தூரத்திலேயே என்னை கவனித்துவிட்ட ராஜா, என்னை சந்திப்பதை தவிர்க்கும் வகையில், அதுவரை சாலையை பார்த்து நின்றிருந்தவர், சாலைக்கு முதுகுப்பக்கத்தை காட்டியவாறு, கடை பக்கம் திரும்பி நின்று கொண்டார். அவரின் அந்த செயல் என்னை வெறுப்பதாக உணர்த்தவே, எப்படியும் போலீஸ் கைது செய்யப் போகிறார்கள். யார் பேச்சையோ நம்பி, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்கு நேரம் இருந்தும், வீணாக போய் மாட்டிக் கொள்ளப் போகிறார் என்பதை உணர்ந்து, இல்லத்திற்கு திரும்பி விட்டேன். ராஜா என்னிடம் பேசியிருந்தால், பழைய பாஸ் என்ற பாசத்தில் கமிஷனர் அலுவலகத்தில் கிடைத்த தகவலை சொல்லி கூட இருப்பேன்.
இரவுப் பணிக்காக ஜெயா டிவிக்கு வந்தேன். அதற்குள் அவரின் கைது செய்தி அலுவலகத்திற்கு கிடைத்துவிட்டது. போயஸ் கார்டனில் இருந்தோ, செய்திப் பிரிவின் தலைமையில் இருந்தோ, ராஜாவின் கைது செய்தியை ஊதி பெரிதாக்குங்கள் என்று எந்த அறிவுரையும் கூறப்படவில்லை. ஆனால், என்னைப் போலவே சன் டிவியில் இருந்து ஜெயா டிவிக்கு வந்திருந்த மற்றொரு ஊடகவியலாளர் சண்முகம் என்பவர், ராஜாவின் கைது செய்தியை, பிரித்து மேய்ந்து இருந்தார்.
ஊடக அறத்திற்கு அப்பாற்பட்டு அவமானப்படுத்தும் உள்நோக்கத்தோடு அந்த செய்தியை அவர் தயாரித்து இருந்தார். ஆனால், பல வார்த்தைகள் நீக்கப்பட்டே, அன்றைய தினமும், அதற்கடுத்த தினங்களிலும் ராஜா செய்தியை, மெச்சத்தகுந்த நாகரித்தோடு ஜெயா டிவியில் செய்தியாக ஒளிப்பரப்பப்ட்டது.