கிராமங்களில் வாழ்பவர்களுக்கு பசுமையான சூழல் என்பது இயற்கையாக அமைந்துவிடும். ஆனால், நகர வாழ்க்கையோடு ஒன்றிப் போனவர்களுக்கு பசுமையான சூழல் அமைவது என்பது அபூர்வமான அம்சம்தான். பசுமை தரும் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்றால், பூங்காவிற்குதான் செல்ல வேண்டும்.
இயந்திரங்கள் நிறைந்திருக்கும் நகர வாழ்க்கையிலும்கூட பூங்காக்களும் கூட புழுதி ஆடையைதான் பெரும்பாலும் சுமந்து கொண்டிருக்கின்றன.
இரைச்சல் இல்லாத பூமியாகவும், மாசு இல்லாத சுவாசத்தையும் அனுபவிப்பதற்கு வாழ்நாள் முழுவதும் வாய்ப்பு கிடைத்துவிடுவதில்லை. வசதிப் படைத்தவர்கள் கூட, தங்கள் இருப்பிடத்தை பிரம்மாண்டமாக அமைந்துக் கொள்வதில்தான் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, பூங்காவுக்குள் இல்லம் என்ற சிந்தனையில் தாங்கள் வாழும் இடங்களை பெரும்பாலும் அமைந்துக் கொள்வதில்லை.
ஆனால் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களின் கனவு இல்லத்தில், பசுமைக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அப்படி இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழும் பிரபலங்களின் பட்டியல் வெகு நீளம்.
பசுமையை பூஜிக்கும் நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரராக மாறியிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனும், தனது இல்லத்தை, பசுமைக்குடிலாகவே அமைத்திருக்கிறார். அவரின் ரசனை வியக்க வைக்கிறது. நுட்பமாக பசுமைக் குடிலை அமைத்து, பல வண்ண மலர்கள் பூக்கும் செடிகளை அமைத்து அழகை அதிகப்படுத்தியதுடன், மனித வாழ்க்கைக்கு பயன் தரும் செடிகள், மரங்கள் உள்ளிட்டவற்றையும் நட்டு, அழகுற பராமரித்து வருகிறார்.
இயற்கை மீது நடிகர் சிவகார்த்திகேயன் கொண்டுள்ள காதலும், நேசமும், பார்ப்போரையும் பரவசத்தில் ஆழ்த்திவிடுகிறது.