கோவை மண்டல பொறுப்பாளராக கனிமொழி கருணாநிதி எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக.வுக்கு வரலாறு காணாத தோல்வி ஏற்பட்டது, கோவை மண்டலத்தில்தான். தருமபுரியில் துவங்கி நீலகிரி வரையிலான 7 மாவட்டங்களில்தான் அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றிப் பெற்றது.
இதனையடுத்து, கோவை மண்டலமாக கருத்தப்படும் இந்த மாவட்டங்களில் திமுக.வை பலப்படுத்த, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கொங்கு மண்டலமாக அறியப்படும் இந்த 7 மாவட்டங்களிலும் திமுக.வில் உள்ள கோஷ்டிப் பூசலை களைந்து, தகுதியுள்ள நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கவும், நேரடி களப்பணியாற்ற திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதியை, கோவை மண்டல பொறுப்பாளராக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
கனிமொழி எம்.பி.க்கு கொங்கு மண்டல அரசியல் அத்துபடி என்பதாலும், அவரை அணுகுவதும், கருத்து பரிமாற்றம் செய்வதும் மிகவும் எளிது என்பதாலும், அவரது கட்டளைகளுக்கு கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளும் செவி சாய்ப்பதுடன், கோஷ்டிப் பூசலை மறந்து உற்சாமாக பணியாற்றுவார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் கோவையில் உள்ள பழம்பெரும் திமுக நிர்வாகி.