சேலம் அருகே வாகன தணிக்கையின்போது, கர்நாடகாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2100 மதுபாட்டில்களை கருப்பூர் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கார் மற்றும் மினி ஆட்டோவில் மதுபானங்களை கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்……
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சேலம் வழியாக மதுபானங்கள் கடத்தி செல்லுவது அதிகரிக்கத் தொடங்கியது.
இதுதொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர்.
அதன் ஒருபகுதியாக, சேலம் மாவட்டம் கருப்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்த வந்த இரண்டு வாகனங்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிடப்பட்டது.
அப்போது அந்த வாகனத்தில் பெட்டி பெட்டியாக மதுபானப் பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையில், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2100 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. சட்டவிரோதமாக மதுபானங்களை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மணீஸ்வரன், சுப்பிரதீபன் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ்,முத்துவேல் ஆகிய நால்வரையும் கருப்பூர் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
மதுபான பாட்டில்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மினி ஆட்டோ என இரண்டு வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் வழியாக தென் மாவட்டங்களுக்கு மதுபானக் கடத்தல்களில் மர்ம கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வருவது, கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கருப்பூர் காவல்நிலைய எல்லை பகுதியில் மட்டும் 15 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் வேடத்தில் மது கடத்தலில் பலர் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நடத்தப்பட்ட சோதனையில், பெண்களும் மதுக்கடத்தலில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. பெண்கள் மட்டுமின்றி சிறுவயது பெண் குழந்தைகளையும் மதுபானக் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டதை கண்டு, சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பெண்கள், சிறு பெண் குழந்தைகள் தங்கள் உள்ளாடைகளில் மதுபானப் பாட்டில்களை மறைத்து வைத்து கடத்துவதும், அதை கண்டுபிடித்து பறிமுதல் செய்வதும் மிகப்பெரிய சவாலாக இருப்பதாக சேலம் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.