Sun. Nov 24th, 2024

சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்ச் 29 ம் தேதியன்று பிரசாரம் செய்தார். அன்றைய தினம், அப்போதைய அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்ட ஜோலார்பேட்டையில் பேசிய அவர், கடந்த பத்தாண்டு காலத்தில் மக்கள் பணத்தை சுருட்டுவதையே வழக்கமாக வைத்திருந்தவர் கே.சி.வீரமணி என்று கடுமையாக குற்றம்சாட்டினார். அவரின் அடுக்கடுக்கான ஊழல்களை பட்டியலிட்டு, அதிமுக.வினரையே அதிர வைத்தார்.

அடுத்தவர்களுக்கு சொந்தமான நிலங்களை மிரட்டி, அடிமாட்டு விலைக்கு வாங்குவதையே முழுநேர தொழிலாக கொண்டிருந்தவர் கே.சி.வீரமணி. அமைச்சர் பதவி அவருக்கு பார்ட் டைம்தான். பிறரின் சொத்தை கையகப்படுத்துவதில் வீரமணி எவ்வளவு கில்லாடி என்பதற்கு, சென்னை உயர்நீதிமன்றமே அவரது பெயரைக் குறிப்பிட்டு தெரிவித்த கருத்துகளே சிறந்த எடுத்துக்காட்டு என்று ஆவேசம் காட்டினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

2019 ஆம் ஆண்டில் கே.சி.வீரமணி வீட்டிலும் அவருக்கு சொந்தமான திருமண கூடம் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் எல்லாம் வருமான வரித்துறை அதிரடி சோதனை செய்தது? அந்த சோதனை எதற்காக நடந்தப்பட்டது? என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கிறது.

இப்படி சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது கே.சி.வீரமணிக்கு எதிராக ஊழல் குற்றசாட்டுகளை பகிரங்கமாக கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்தநேரத்தில், முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை எல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை தூசி தட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது.

அந்தவகையில், கே.சி.வீரமணிக்கு எதிராக அவரது விசுவாசிகளே பல்வேறு தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பி வைத்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒன்றுதான் ஓசூரில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து கே.சி.வீரமணி கட்டி வரும் பிரம்மாண்டமான சொகுசு ஹோட்டல்.

கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டு வரும் இந்த ஹோட்டலுக்கு தேவையான அனைத்து அலங்காரப் பொருட்களும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் எனும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சொகுசு ஹோட்டலை கட்டி வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் பறந்து கொண்டிருக்கின்றன.

இந்த ஹோட்டல் யார் பெயரில் இருக்கிறது?இதன் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்திற்கும் கே. சி. வீரமணி க்கும் இடையே உள்ள தொடர்பு?வேலூர்,தருமபுரி,கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் யார் யார் பெயரில் உள்ளது என்று தோண்டி எடுத்தால் கே. சி. வீரமணி யும் அவரது பினாமிகளும் வசமாக சிக்குவார்கள் என்கிறார்கள் கே. சி. வீரமணியோடு நிழல் போல் நடனமாடிய வேலூர் அதிமுக நிர்வாகிகள்..

இப்படி தனது தலைக்கு மேலேயே பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஊழல் புகார்கள் கத்தி போல தொங்கிக் கொண்டிருக்கும் போது, கறைபடியாத கரத்திற்கு சொந்தக்காரர் மாதிரி, வேலூர் மாவட்டத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் கே.சி.வீரமணி.

தனக்கும், திமுக பொதுச் செயலாளரும் தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் இடையே உள்ள தொழில் ரீதியிலான உறவை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார் நிலோபர் கபில் என்பதற்காகவே, அவரை அதிமுக.வில் இருந்தே நீக்கிவிட்டார்.

இப்படி கடந்த பத்தாண்டு காலத்தில் தனக்கு எதிரான அரசியல் எதிரிகளை எல்லாம் பழிவாங்கிய கே.சி.வீரமணி, திமுக ஆட்சிக்காலத்திலும் தனக்கு எந்த சிக்கலும் வராது என்ற தைரியத்தில் தான் பந்தா காட்டிக் கொண்டிருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தலின்போது பொதுமக்கள் மத்தியில் ஊழல் புகார்களை அடுக்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் இந்த நேரத்தில் கே.சி.வீரமணிக்கு எதிரான புகார்களை விசாரிக்காமல் விட்டுவிடுவாரா? அமைச்சர் துரைமுருகன் போடும் முட்டுக்கட்டைகளை எல்லாம் உடைத்தெறிந்துவிட்டு, கடந்த 7 ஆண்டு காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த போதும், வணிகவரித்துறை அமைச்சராக பதவி வகித்த போதும் கே.சி.வீரமணி செய்த அனைத்து முறைகேடுகளையும் தோண்டியெடுத்து நடவடிக்கை எடுத்தால்தான் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்,மகிழ்ச்சியடைவார்கள் என்று ஆவேசம் பொங்க பேசி வருகிறார்கள், கே.சி.வீரமணியின் அரசியல் எதிரிகள்…