Sat. May 10th, 2025

சென்னை தியாகராயநகரில் புதுவீட்டில் பால் பொங்கிய கையோடு தேனிக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். முன்னதாக, புதிதாக குடியேறுகிற வீட்டிற்கு வந்து தனது சகோதரர் மரணம் தொடர்பாக துக்கம் விசாரிக்க வேண்டாம் என்று ஓ.பி.எஸ்., கேட்டுக் கொண்டதால், எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்தார் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி. அந்த சந்திப்பின் போதும் கூட, இருவருக்கும் இடையே உள்ளன்புடன் கூடிய உரையாடல்கள் எழவில்லை என்று கூறும் இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி எந்தளவுக்கு இறங்கிச் சென்றாலும் கூட அவரை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் ஓ.பன்னீர்செல்வம் இல்லை.

தனது தலைமையை ஏற்று தான் சொல்கிறபடி தான் இ.பி.எஸ். உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கேட்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். நினைத்துக் கொண்டிருக்கிறார். அவரின் எண்ணவோட்டத்திற்கு ஏற்ப செயல்படுகிற சிந்தனையோடு அதிமுக முன்னணி நிர்வாகிகளில் ஒருவர் கூட இல்லை என்பதை ஓ.பி.எஸ்., இப்போது கூட உணர்ந்து கொள்ளவில்லை என்பதுதான் எங்களுக்கு எல்லாம் வருத்தம்.

இ.பி.எஸ்.ஸை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு வி.கே.சசிகலா பக்கம் முழுமையாக சாய்ந்துவிடும் மனநிலைக்கு ஓ.பி.எஸ். வந்துவிட்டார் என்பதும், அவரை மன்னார்குடி குடும்பம் பக்கம் கொண்டு சேர்க்கும் வேலையை, சாதிப் பாசத்தோடு அவரது இளையமகன் ஜெயபிரதீப், ஓ.பி.எஸ்.ஸை விரட்டிக் கொண்டிருப்பதாகவும், ஜெயபிரதீப்பின் விரட்டலுக்கு ஓ.பி.எஸ்.ஸின் மூத்த மகனும், தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத்குமாருக்கே விருப்பம் இல்லை என்பதும் எங்களுக்கு தெரியவந்திருக்கிறது.

இளையமகனின் பேச்சைக் கேட்டு கொண்டு ஓ.பன்னீர்செல்வம் தப்பான முடிவு எடுத்தால், அவரது அரசியல் வாழ்க்கையே அஸ்தமனமாகிவிடும் என்பதை இ.பி.எஸ்.ஸும், முன்னணி அதிமுக தலைவர்களும் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், படுகுழியில் விழப் போகிறோம் என்று தெரிந்தே ஓ.பி.எஸ்., சென்று கொண்டிருக்கிறார் என்பதுதான் எங்களுக்கு எல்லாம் வேதனையளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது என்று மனம் நொந்து கூறினார் இ.பி.எஸ்.ஸின் தீவிர விசுவாசி ஒருவர்.

ஓ.பி.எஸ்.ஸின் இளையமகன் ஜெயபிரதீப்பா, சசிகலா பக்கம் அவரை விரட்டிக் கொண்டிருக்கிறார்.. என்ன புது குண்டை தூக்கிப் போடுகிறீர்கள் என்று அதிர்ச்சியுடன் கேட்டோம்..

ஆழ்ந்த மௌனத்தை உடைத்துக் கொண்டு இ.பி.எஸ்.ஸின் தீவிர விசுவாசி மீண்டும் பேசினார்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக.வுக்கு ஏற்பட்ட தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலர், தேனிக்கும், சேலத்திற்கும் மாறி மாறிச் சென்று ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.ஸை சந்தித்து தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகிறார்கள். பா.ஜ.க.வை கூட்டணியில் சேர்த்துக் கொண்டதால்தான் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை அதிமுக.வுக்கு ஏற்பட்டுவிட்டது என்றுதான் அனைத்து நிர்வாகிகளும் ஒருமித்த கருத்தில் கூறியிருக்கிறார்கள். ஆனால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவருக்குமே அந்த உண்மை தெரிந்திருந்தாலும் கூட, பாஜக.வுக்கு எதிராக கருத்து தெரிவிக்காமல், தேர்தல் தோல்விக்கான வேறு காரணத்தை, அவரவர் வசதிக்கு ஏற்ப விநோதமான காரணங்களை முன்வைத்து ஒருவருக்கு எதிராக மற்றொருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதைவிட முக்கியமாக, அதிமுக.வில் இரண்டாம் இடத்தில் தான் இருப்பது அவமானகரமானதாக ஓ.பி.எஸ். நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆதங்கத்தோடு அவர் இருப்பதைக் கண்டு கவலைப்படும் அவரது மூத்த மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி., இன்றைய சூழலில் அமைதியாக இருப்போம். ஆறு மாதம் கடந்த பிறகு திமுக ஆட்சியின் நிலை குறித்து மத்திய அரசு என்ன மதிப்பீடு வைத்திருக்கிறது என்பது தெரிந்துவிடும். அதேகாலத்தில் பாஜக மேலிட தலைவர்களிடம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிற செல்வாக்கும் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டால், தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில் நமது ஆதரவாளர்களை அதிகமாக போட்டியிட வைத்து, உள்ளாட்சிகளில் அதிக இடங்களை கைப்பற்ற முயற்சிப்போம். அரசியலில் அமைதியாக இருப்பதும், பொறுமையாக இருப்பதும் முக்கியம் என்று பாடம் நடத்தி கொண்டிருக்கிறார்.

ஆனால், அவரது இளைய மகனான ஜெயபிரதீப்போ, சாதி பாசத்தோடு வி.கே.சசிகலாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டலாம். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும். அதிமுக.வின் பொதுச் செயலாளராக தன்னை அறிவித்துக் கொள்ளும் திட்டத்தோடு இ.பி.எஸ். வேகமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். அவரின் அரசியல் சதிராட்டத்தில் சிக்கி செல்வாக்கை இழப்பதைவிட, நமது குடும்பத்திற்கு வாழ்வு கொடுத்த மன்னார்குடி குடும்பத்திற்கு விசுவாசமாக இருப்போம். அரசியலிலும், ஆட்சியிலும் நீங்கள் இனிமேல் தொட வேண்டிய உச்சநிலை எதுவும் இல்லை. எனவே, உங்களுக்கு அரசியலில் முகவரி தந்த வி.கே.சசிகலாவுக்கு ஆதரவாக நில்லுங்கள் என்று ஒவ்வொரு நாளும் விரட்டுகிறார், ஜெயபிரதீப்.

தனது வாரிசுகளான இரண்டு மகன்களும் இரண்டு திசைகளில் நின்று தனக்கு அரசியல் பாடம் நடத்திக் கொண்டிருப்பதால் நிம்மதியிழத்து தவித்துக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இப்படிபட்ட நேரத்தில்தான் கடந்த சில நாட்களாக அவரை சந்திக்கும் தென் மாவட்ட அதிமுக முன்னணி நிர்வாகிகள் மற்றும் மத்திய மாவட்ட முன்னணி தலைவர்கள், அவரது குடும்பத்திற்குள் நடந்து கொண்டிருக்கும் பஞ்சாயத்து விவகாரத்தையே வெளிப்படையாக போட்டு உடைத்து, வி.கே.சசிகலாவுக்கு ஆதரவான நிலை எடுத்தால், நீங்கள் மூன்றாவது, நான்காவது இடத்தில்தான் இருப்பீர்கள். நாளடைவில் நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள்.

தர்மயுத்தம் நடத்திய போது உங்களை ஆதரித்த நிர்வாகிகளில் 99 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் இ.பி.எஸ். பக்கம் போய்விட்டார்கள். வி.கே.சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி குடும்பத்திற்கு எதிரான மனநிலையில் இருப்பவர்கள்தான் அதிமுக.வில் அதிகமாக இருக்கிறார்கள். இப்படிபட்ட நேரத்திலும் உங்களை ஆதரித்துக் கொண்டிருக்கும் நிர்வாகிகளில் பெரும்பான்மையானோர் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குறைவாகதான் இருக்கிறார்கள்.

திமுக.வில் கலைஞர் மு.கருணாநிதி தலைவரான போது, அவருக்கு அடுத்த நிலையில்தான் மறைந்த தலைவர்கள் நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் இருந்தனர். பேரறிஞர் அண்ணாவோடு நெருங்கி பழகிய தலைவர்களுக்கே அந்த நிலைதான் என்கிற போது, அதிமுக சிதறாமல் ஒரே இயக்கமாக இருக்க வேண்டும் என்றால், இப்போதைக்கு இ.பி.எஸ்.ஸை அணுசரித்து போவதை தவிர வேறு வழியில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

தன்னை ஆதரிக்கும் கொஞ்ச நஞ்ச நிர்வாகிகளின் கருத்துகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல், எடப்பாடி பழனிசாமியின் அழிவில்தான் தன்னுடைய அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்ற சிந்தனையில் இருந்து கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஆத்திரகாரனுக்கு புத்திமட்டு என்பதைப் போல, ஓ.பி.எஸ்., தப்பான முடிவுதான் எடுப்பார். வெகு விரைவாக வி.கே.சசிகலாவிடம் சரணாகதி அடைவார் ஓ.பி.எஸ். அவரை அந்த நிலைக்கு தள்ளிக் கொண்டு போவதில் அவரது இளையமகன் ஜெயபிரதாப்  வெறியோடு இருக்கிறார். இ.பி.எஸ். ஆதரவோடு மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்து விடும் கனவில் இருந்து கொண்டு இருக்கும் ரவீந்திரநாத் குமார், அப்போது என்ன முடிவு எடுப்பார் என்று தெரியாது.

 ஓ.பி.எஸ்.ஸின் மனப்போக்கை நன்றாக அறிந்து வைத்திருப்பதால்தான், வி.கே.சசிகலாவுக்கு எதிரான அரசியல் ஆயுதத்தை தூக்கிக் கொண்டு எடப்பாடி பழனிசாமி துணிந்து செயல்பட தொடங்கிவிட்டார். ஓ,பி.எஸ்.ஸை பின்பற்றி வி.கே.சசிகலா பக்கம் சாய்ந்தால், தங்கள் கட்சி பதவி நிரந்தரம் இல்லை. இத்தனை ஆண்டுகாலம் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என்ற எண்ணத்தில் இருக்கும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், இ.பி.எஸ். பக்கம் நிற்கும் மனநிலையில்தான்  இருக்கிறார்கள்.

அதனால், ஓ.பி.எஸ்.ஸை விரட்டியடித்ததைப் போல இ.பி.எஸ்.ஸை அவ்வளவு எளிதாக வி.கே.சசிகலாவால் விரட்டியடித்து விட முடியாது என்று ஒரே மூச்சில் பேசி முடித்தார் இ.பி.எஸ். விசுவாசி…